Friday, August 31, 2018

நான்கு தேரர்கட்கு நீதிமன்று பிடியாணை! ஞானசார தேரரின் மனு நிராகரிப்பு

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பொலிஸாரால் இனம்காணப்பட்டுள்ளதாக கூறப்படும் நான்கு முன்னணி தேரர்கட்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கெதிராகவே மேற்படி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகயில் குற்றவாளியென காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, நீதிமன்றத்தை அவமதித்ததாக கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பினை எதிர்த்து ஞானசாரதேரரால் சமர்பிக்கப்பட்ட மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததுடன் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஞானசாரதேரரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com