யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்தார் விக்கி.
பளை பிரதேசத்தில் யூலிப்பவர் மற்றும் வீற்றாப்பவர் எனும் நிறுவனங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சாகவென அறியப்படுகின்ற ஐங்கரநேசன் மீது மோசடிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நீதியரசர் விக்கினேசுவரன் ஓடியொழித்துள்ளமை நேற்று வடமாகாண சபை கூடியபோது நிருபணமாகியுள்ளது.
குறித்த இரு காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் 2 வருடங்கள் மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கியமைக்காக2933.8 மில்லியன் ரூபாய் (293 கோடி ரூபா) நிதியைப் பெற்றுள்ளது. 2 வருடத்தில் 293 கோடி ரூபாய் மிகை லாபம் பெறும் நிறுவனத்திடமிருந்து 2 கோடி ரூபாய் மட்டுமே வருடம் ஒன்றுக்கு சமூகக்கடப்பாட்டு நிதியாக பெறப்பட்டுள்ளது.
இந்நடைமுறையானது முற்றிலும் தவறானது என்றும் குறித்த நிறுவனங்களிடமிருந்து மொத்த லாபத்தில் குறித்ததோர் விகிதாசாரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படல்வேண்டும் என்ற முன்மொழிவுகள் வைக்கப்பட்டபோது அவற்றை முதலமைச்சர் எழுந்தமானமாக நிராகரித்து சட்டத்துக்கு புறப்பான முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பகிரங்க கேள்வி அறிவித்தல் விடப்பபட்டு அதிக வருமானத்தை மாகாண சபைக்கு வழங்கக்கூடியதோர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காமல் குறித்த இரு நிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகைப் பணத்தை முதலமைச்சர் மற்றும் ஐங்கரநேசன் உட்பட்டோர் பெற்றுக்கொண்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் கணக்காய்வு அறிக்கையில் :
* குறித்த நிறுவனங்களுடன் மாகாண சபை செய்துள்ள ஒப்பந்தத்தில் பிரதம செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை.
* காற்றாலை அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காணி நோக்கம் குறிப்பிடப்பட்டு காணி ஆணையாளரிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை.
* ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் மாகாண சபையின் அனுமதி பெறப்படவில்லை.
* நிறுவனங்களுக்கான அனுமதிக்கான சட்டரீதியான கேள்வி மனுகோரப்படவில்லை.
போன்ற பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குறைபாடுகள் தொடர்பில் நேற்று கூடிய சபையில் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முற்கூட்டியே அறிவிக்கப்பட்டபோது , இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என சபையின் தவிசாளரை எழுத்துமூலமாக முதலமைச்சர் கோரியதன் ஊடாக விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் நிரூபணமாகும் என்பதை அவர் அறிந்து வைத்துக்கொண்டே இந்த தவறை புரிந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
இவ்வாறு சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தம் முதலமைச்சரின் இல்லத்தில் வைத்தே இடம்பெற்றமையும் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் நியாயமாக நடந்துகொள்வார் என எதிர்பார்த்த தமிழ் மக்களில் பலர் விக்னேஸ்வரன் மோசடிப்பேர்வழி என்பதை நம்ப மறுத்தே வந்தனர். ஆனால் நேற்றைய விவாதத்தில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை புருவத்தை உயர்த்தப்பண்ணியுள்ளது.
நேற்று குறித்த விவாதம் ஆரம்பமாதற்கு முன்னர் சபையின் தவிசாளர் விக்னேஸ்வரனால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றை வாசித்தார். அக்கடிதத்தில்:
நான் வேறு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதால் இன்றைய சபை அமர்வுகளில் பங்கெடுக்க முடியாது என தெரியப்படுத்தியிருந்தார்.
(முதலமைச்சர் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என எழுதிய கடிதத்தின் பிரதி)
இவ்விடயத்தில் விக்னேஸ்வரன் தவறிழைத்திருக்காவிடின் அவரால் சபையோர் முன்தோன்றி தன்னை நிரபராதி என நிரூபித்திருக்க முடியும். எதுஎவ்வாறாயினும் முதலமைச்சர் விடயம் தொடர்பில் பதிலளிக்கும் பொருட்டு எதிர்வரும் 11ம் திகதி கூடவுள்ள அமர்வில் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் பேசப்படும் என்றும் அப்போது முதலமைச்சரிடமிருந்து சில கேள்விகளுக்கு பதிலெதிர்பார்க்கப்படுமென்றும் அவை முதல்வர் அறிவித்துள்ளார். அதேநேரம் அடுத்த அமர்விலும் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமல் தவிர்பார் என்றும் அடுத்த அமர்வே வடமாகாண சபைக்கான இறுதி அமர்வாக அமையும் என்றும் நம்பமுடிகின்றது.
விக்னேஸ்வரனின் முகத்திரை கிழித்து கே.சயந்தன் சபையில் தெரிவித்ததாவது:
மாகாணசபை உருவாக்கப்பட்ட சில மாதங்களில் பளையில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிடுகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது.
அதனை நான் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை பெறுமாறு முதலமைச்சர் எனக்கு கூறினார். அதற்கமைய நான் சில நிபுணர்களை அணுகி கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூவர்ணப்படங்களுடன் அப்போதைய அமைச்சர் ஐங்கரநேசனின் செய்தி ஊடகங்களில் வந்திருந்தது.
„வடமாகாணத்திற்கு வரும் பெருமளவான முதலீட்டை அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார்' என அந்தச் செய்தி அமைந்திருந்தது.
இங்கே நான் கேட்பது மின்சார சபையின் கீழ் உள்ள பல கம்பனிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தயாராக இருந்தார்கள். அதுவும் இந்த யூலிப்பவர், பீற்றாப்பவர் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்திற்கு அறவீடு செய்யும் நிதியிலும் பார்க்க மிக குறைவான நிதியில் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி இருக்கையில் எந்த கேள்வி கோரலும் இல்லாமல் தனியே இந்த நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது எப்படி?
மிகப்பெரியளவில் வருமானம் பெறும் நிறுவனத்திடமிருந்து எமது மக்களுக்குக்கிடைத்த நன்மைகள் என்ன? என கேள்விக்கணைகளை தொடுத்தார்.
இக்கேள்விகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி விக்னேஸ்வரன் பதிலளிப்பாரா?
ஐங்கரநேசனின் முகத்திரை கிழித்து அஸ்மின் சபையில் தெரிவித்ததாவது:
வெளிப்படை தன்மை பற்றி பேசும்போது கண்காய்வு அறிக்கையை இந்த சபையில் எடுக்கவேண்டாம் என முதலமைச்சர் எமக்கும் சபைக்கும் கடிதம் எழுதியதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.
குறித்த நிறுவனத்தினர் '2 பெட்டிகள் நிறைய காசு கொண்டுவந்தார்கள் அப்பன்' நான் அவற்றை பெற்றுக்கொள்ளவில்ல என எனக்கும் சக உறுப்பினர் எஸ்.சுகிர்தனுக்கும் ஐங்கரசேன் அப்போது கூறியிருந்தார்.
அதேபோல் 40 மில்லியன் ரூபாய் செலுத்தி தனது மகளை ஐங்கரநேசன் எவ்வாறு வெளிநாட்டில் படிக்கவைத்தார்? என்பதற்கான ஆதாரங்கள் யாவும் எங்களிடம் உள்ளன என்றார் அஸ்மின் .
இதனை மறுதலித்த மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன், நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. என்னுடைய மகளை எங்கே படிக்க வைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன். அதை குறித்து கவலைப்படவேண்டாம் என்றார்.
நான் எப்படி பணம் செலுத்தினேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால் அதனை இப்போது வெளிப்படுத்துங்கள். மேலும் 2 பெட்டி நிறைய காசு கொண்டுவந்தார்கள் என நான் எப்போதும் -எங்கேயும் கூறவில்லை – என்றார்.
தொடர்ந்தும் உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் சொத்து விபரங்கள் குறித்து வெளிப்படுத்தவேண்டும்.
இந்த இடத்தில் நான் கேட்கிறேன், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என முழங்கினார்.
யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்துள்ள விக்கி வருவாரா 11ம் திகதி தருவாரா பதில்?
பீமன்.
0 comments :
Post a Comment