Monday, August 27, 2018

ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! ஸ்ரேன்லி ராஜன்

அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் ஜனனதினம் இன்றாகும். அரசியல் தவறுகளுக்கப்பால் ஈழ மக்களின் சுதந்திர வேட்கையில் மிக ஈடுபாடு கொண்டிருந்த தலைவன் அவர். ஆனால் இன்று தமிழ் சமூகம் அவரை மறந்திருக்கின்றது. ஆனாலும் இந்தியத் தமிழன் ஒருவன் அவரை மறக்கவில்லை. அவரது உள்ளக்குமுறல்:

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று. பன்மொழி ஆற்றல் மிக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்.

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, "நாவலரே வருக.." என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர். நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்.

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான். இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்.

அமிர்தலிங்கத்தின் அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்.

1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா. அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது.

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது. ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று.

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார். இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை. அது மகா உண்மையும் கூட‌.

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர். அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்.

அவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள். போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள். (ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்) புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்.

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம் :

"தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.
இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."


துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌. ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர்?, விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை. அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்"

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி. இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்.

"அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை" என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள். அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள். கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா? புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்.

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான். அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர்,

ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான். கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்.

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை. எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்?, அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான். அமிர்தலிங்கத்தை போலவே வரலாற்றில் நின்றுவிட்டான் அந்த நல்ல சிங்களன்.

பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்.

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர். புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி.

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம். புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார், பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார். பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார். எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்.

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள். அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்.

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று. ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம். இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்.

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும். பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்.

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ். அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்.

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம். அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்.

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது. இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌.

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்.

இன்று அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் பிறந்த நாள். ஈழதமிழருக்காக உயிர் கொடுத்து ராஜிவினை எச்சரித்தவர் அவர். நிச்சயம் தமிழகத்தில் ஈழபிரச்சினையினை கொண்டுவந்தவர் அவரே, அவர் மூலமே ராமசந்திரன் கலைஞர் எல்லாம் ஈழசிக்கலில் நுழைந்து, பின் இந்திய அரசு நுழைந்து பல முயற்சிகள் நடந்தது. எல்லாம் புலிகளின் விபரீத புத்தியால் நாசமானது.

அவர் தமிழகத்தில் விதைத்த விதைதான் வளர்ந்தது, ஆனால் அவரை யார் கொன்றார்களோ அவர்களையே தீரர்கள், வீரர்கள் என சொல்லும் கூட்டம் இங்கு பின்னாளில் வந்தது. இதனை விட அறிவுகெட்டதனம் இருக்கவே முடியாது.

எது எப்படி ஆயினும் ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com