Thursday, August 30, 2018

ஏமாற்றாதே! ஏமாறாதே! - விஜய பாஸ்கரன்

1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம்.இதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள். மீதமுள்ள ஐந்து லட்சம் மக்கள் வன்னி, மன்னார் மற்றும் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தார்கள். அந்த ஐந்து லட்சம் மக்களை வைத்துக்கொண்டு எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்?

1948 இல் பிரசாவுரிமை சட்டத்தை எதிர்த்து அதற்கு காங்கிரஸ் ஆதரவளித்த காரணத்துக்காக செல்வநாயகம்,அக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை.இன்றுவரைஅதே தொடர்கதை .

எந்த மலையக மக்களை காரணமாக காட்டி செல்வநாயகம் வெளியேறினாரோ அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி செல்வநாயகமோ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.

தமிழ்த் தேசியம் சிங்கள இனவாதம் என தமிழ்மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய தமிழரசுக்கட்சி இந்த தமிழ்தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தது? தமிழுக்காக என்ன செய்தார்கள்?தமிழ் தேசியத்தை வலுப்படுத்த என்ன செய்தார்கள்? என் திட்டங்கள் இருந்தன? யாழ்ப்பாணத்தில் மேடைபோட்டு இனவாதம் பேசி கரகோசம் பெற்றதைத் தவிர என்ன செய்தார்கள்.

பெரும்பான்மைத் தமிழர்கள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்தனர். அந்த தமிழர்கள் தொடர்பாக என்றாவது தமுழரசுக்கட்சி சிந்திக்கவில்லை.வடக்கு கிழக்குக்கு வெளியே புத்தளம் மாவட்டம் இருந்தது. இங்கே தமிழர்களே புத்தளம், சிலாபம் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.இவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்தார்களா?

அம்பாறை கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர், பிரிவுக் காரியாதிகாரி, மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது. இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன. அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்தார்கள். இதனால் இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை. இங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை.இன்னமும் அம்பாறை திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை.இன்றளவும் இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லை.தவறுகள் யாருடையது?

அன்றைய கல்லோயா கந்தளாய் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள். அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் காணிகள் இல்லை.வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள். இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும்.

1977 லேயே ஐந்து லட்சம் வன்னி மற்றும் கிழக்கில் வாழந்தார்கள் என்றால் 1948-50 களில் தமிழர் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்.

தமிழத் தேசியம்,சிங்கள பேரினவாதம் என்று சொல்லியே தமிழ் அரசியல்வாதிகள் காலத்தைக் கடத்துகிறார்கள்.இதுவரைக்கும் தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தார்கள்.பழியை இலகுவாக அரசாங்கத்தின் மேல் போட்டுவிட்டு தப்பி ஓடுகிறார்கள்.

இன்று இஸ்லாமிய வெறுப்பும் வளர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மை இஸ்லாமியர்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள் என்பது உண்மை. அவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கில் வாழந்தபோதும் தென்னிலங்கையில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களைக் கைவிடவில்லை. சொந்த மொழி தமிழைக் கைவிடவில்லை. எத்தனையோ இடர்களை கண்டபோதும் இஸ்லாமிய ஒருமைப்பாட்டை கைவிடவில்லை. ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். தெற்கே இஸ்லாமிய மக்களால், மலையக மக்களால் தமிழ் காக்கப்பட்டது. மேற்கே புத்தளத்தில் தமிழ் அழிந்தது. எங்கே போனார்கள்?

1972 வரை யாழ் குடாநாட்டுக்கு வெளியே தமிழர்களுக்கு நல்ல பாடசாலைகள் இல்லை. நல்ல ஆசிரியர்கள் இல்லை. நல்ல கல்விபெற யாழ்ப்பாணமே வரவேண்டி இருந்தது. இதற்காக தமிழ் அரசியல்தலைவர்கள் செய்தது என்ன? நல்ல வைத்தியர், வைத்தியசாலை கூட இல்லை. இதற்கெல்லாம் இனவாதமா காரணம்? அரசாங்கமா பொறுப்பு?

வடக்கே குடாநாட்டில் சாதிவெறிகொழுந்து விட்டு எரிந்தது? இதை மாற்ற என்னநடவடிக்கை எடுத்தார்கள்? அதைவிட பிரதேசவாதம் வளர்ந்தது. இஸ்லாமியதமிழர்கள் நம்பகத் தன்மையை இழந்தார்கள். இதைப்பற்றி என்றாவது சிந்திக்கவில்லை. தமிழத் தேசியம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? அன்றைய செல்வநாயகம் தொடங்கி இன்றைய மாவை, விக்கி, சிறீதரன்வரை ஒரே நாடகங்களையே அரங்கேற்றுகிறார்கள். நிறுத்துங்கள்! ஏமாற்றியது போதும்.

அன்றில் இருந்து இன்றுவரை இதுவே தமிழர்களின் அரசியல். கொள்கை இல்லை. செயற் திட்டங்கள் இல்லை. இனவாதம் என்ற நெம்புகோலை வைத்து தமிழர்களின் அரசியலை பந்தாக உருட்டி விளையாடுகிறார்கள். இந்த இனவாதம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு அரசியலுக்கு தீனி போடுகிறது.

வடகிழக்கில் நிலங்கள் பறிபோவதற்கு அரசாங்கம் காரணமல்ல. தமிழ் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே காரணம். எந்தவித திட்டங்கள், செயற்திறன்கள் உங்களிடம் இல்லை. வெறுமனே அரசாங்கம், சிங்கள இனத்தின் மேல் பழிபோடுவது அவசியமற்றது.

இனவாதங்களை தூண்டி மக்களைஏமாற்ற வேண்டாம். இவர்களின் இனவெறிகளை நம்பி மக்களும் ஏமாறவேண்டாம்.

No comments:

Post a Comment