Wednesday, August 29, 2018

எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவின் பணி. வை எல் எஸ் ஹமீட்

எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார். இவர்கள் மாகாணசபைச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல்முறைக்குச்செல்ல திருத்தங்களை முன்வைப்பார்கள்; என்றெல்லாம் ஊடகங்கள் நிறைய எழுதுகின்றன. அல்லது பலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை எதுவும் இந்தக்குழுவின் பணியல்ல.

இந்தக்குழு மாகாணசபை தேர்தல்கள் (திருத்த) சட்டம் ( Act No 17 of 2017) பிரிவு 12 இன் படியே நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிக்கு மேலதிகமாக எதையும் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அது அந்தக்குழுவின் பணியாக கொள்ளப்படவும் முடியாது.

குழுவின் பணி

பிரிவு 13 இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இக்குழு, தொகுதிகளின், பெயர், இலக்கம், மற்றும் எல்லைகளில் மாற்றங்கள் செய்யலாம். அதாவது எல்லைகளை மாற்றியமைக்கலாம். பல் அங்கத்தவர் தொகுதிகளை அல்லது புதிய தொகுதிகளை உருவாக்கலாம். இதற்குமேல் எதுவும் செய்யமுடியாது.

பிரிவு 14 இன்படி, இதனை இரண்டுமாதங்களுக்குள் பூர்த்திசெய்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவருக்கு இது தொடர்பாக ஒரேயொரு பணிதான் இருக்கிறது.

பிரிவு 15 அதனைக் கூறுகிறது. அதாவது, அறிக்கை கிடைத்ததும் புதிய அவ்வெல்லை நிர்ணயத்தை (வர்த்தமானியில்) பிரகடனப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். மிகுதி தேர்தல் ஆணைக்குழு விற்குரியது.

இந்த அறிக்கையை ஜனாதிபதி அங்கரிக்கவேண்டிய அவசியமுமில்லை. நிராகரிக்க அதிகாரமுமில்லை. திருத்தமும் செய்யமுடியாது. வேறு சிபாரிசுகள் வழங்கப்படவும் முடியாது. வழங்கப்பட்டாலும் வர்த்தமானியில் பிரசுரிப்பதை நிறுத்தி வேறு எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் அங்கீகரிக்கவும் தேவையில்லை.

எனவே, ஊடகங்களில் எழுதப்படுவதை வைத்து யாரும் குழம்பவேண்டாம்.

சில தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் வேறு சிலரும், பாராளுமன்றம் முழுமையாக நிராகரித்த ஒன்றை எவ்வாறு ஒரு குழு திருத்தி அமுல்படுத்துவது. பாராளுமன்றத்தைவிட குழு உயர்ந்ததா? என்ற கேள்வியை எழுப்புவதாக சில ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது நியாயமான கேள்வி. ஆனாலும் சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

பாராளுமன்றம் நிராகரித்தால்தான் குழுவுக்கே வேலை ஆரம்பமாகிறது. எனவே, இந்தக்கேள்வி சட்டமாக்கமுன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் ஒரு சட்டத்தை மீளாய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை. இந்தியாவில் இருக்கின்றது.

எனவே, சுருக்கமாக நாட்கள் கரைய ஆரம்பித்து விட்டன. மாதம் இரண்டுதான் இருக்கிறது. ஒரேயொரு தீர்வு, திருத்தம் சட்டம்தான். திருத்தச்சட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். நீதிமன்றத்திற்கு விரும்பியவர்கள்செல்ல இருவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் இது தொடர்பாக ஆராய்ந்து தனது முடிவைச்சொல்ல காலஅவகாசம் வேண்டும்.

இருப்பதுவோ, இரு மாதங்கள். திருத்தச் சட்டத்தை சாட்டாகவைத்து அறிக்கையைத் தாமதிக்க முடியாது.

எனவே, அவசரமாக திருத்தச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள்.

No comments:

Post a Comment