Friday, August 24, 2018

யாழ்ப்பாணத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்த வேலை திட்டமும் மேற்கொள்ளப்படவே மாட்டாதாம்! நாக விகாரையின் விகாராதிபதி

யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார். இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை நாக விகாரையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டத்திலும் நாம் ஈடுபடவில்லை. மாறாக யாழ்ப்பாண மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவு பாலமாகவே நாம் செயற்படுகின்றோம்.

சமய அடிப்படையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது விருப்பமாக உள்ளது. குறிப்பாக பௌத்த சமயத்தோடு இணக்கப்பாடான சூழல் யாழ். மாவட்டத்தில் உருவாக வேண்டும் என்றே விரும்புகின்றோம். மாறாக விகாரைகளை கட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை.

பௌத்த காங்கிரஸுக்கு சொந்தமான காணிகள் யாழ். மாவட்டத்தில் பல இடங்களிலும் உள்ளன. அவற்றில் அறிந்தோ, அறியாமலோ மக்கள் குடியிருப்புகளும் இடம்பெற்று உள்ளன. இருப்பினும் இங்கு குடியிருக்கின்ற மக்களை வெளியேற்றுகின்ற எந்தவொரு எண்ணமும் எமக்கு கிடையாது. அதே விதத்தில் பொது தேவைகளுக்காக சில கட்டிட நிர்மாணங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றையும் நாம் இடிக்க விரும்பவில்லை. எமது மேற்பார்வையில் அவற்றின் வழக்கமான செயற்பாடுகளோடு நல்லிணக்க மையங்களாக அவை இயங்க முடியும். இதே நேரத்தில் பௌத்த காங்கிரஸிக்கு சொந்தமான இடங்களில் பௌத்த அடையாளங்கள் சிலவற்றை பேணுவது உசிதமானதாக இருக்கும் என்பது எமது விசுவாசம் ஆகும்.

No comments:

Post a Comment