யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் தலைமை அதிகாரி நீல் கவானாக் சந்தித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. எனினும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பு மாகாண சபையில் ஆளுங்கட்சியாக உள்ளபோதும் அது செயலற்றதாகத்தான் காணப்படுகின்றது. தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றதோர் கூடமாகவே வடமாகாண சபை காணப்படுகின்றது. மக்களுக்கான சேவையினை செய்யவில்லை. அரசியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படைத்தேவைகளை அடையாளம் காணுதல், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வாழ்வாதார உதவித் திட்டங்கள் அடையாளப்படுத்துதல் போன்ற விடயங்களில் மாகாண சபை முறையாக செயற்படவில்லை என முறையிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தூதரக அதிகாரி வினவியபோது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் அதன் காரணமாக தாம் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் தம்மை விமர்சிப்பவர்கள் தங்களுக்கு மாற்றுவழி ஏது என்பதை தெளிவாகக் குறிப்பிடாதவர்களாக உள்ளார்கள் என சிறுபிள்ளைத்தனமாக கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. மாற்றுவழி தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதற்கு அரியாசனம் என்ற கேள்வியை நிட்சயமாக தூதரக அதிகாரி கேட்டிருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர்.
மாகாண சபையினால் எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதி ராஜா, அரசியல் தீர்வைக் காண்பதற்கும் அழிந்த தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கும். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக அரசினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றை இம்முறை எமது அரசியல் மூலதனமாக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவிதுள்ளதாக அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment