அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்டனர். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நோக்கிய நடவடிக்கையாக இது புகழப்படுகின்ற அதேவேளையில், இவர்களுக்கு இடையில் எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படும் உடன்பாடு என்னவாய் இருந்தபோதிலும், ஆசிய-பசிபிக்கின் கீழமைந்த பதட்டங்கள் கூர்மையடைய மட்டுமே இருக்கின்றன.
ஒரு “மிகநேர்த்தியான திறம்பட்ட” ஆவணம் என்று அமெரிக்க ஜனாதிபதி அழைத்த ஒன்றில் கிம் மற்றும் ட்ரம்ப் கையெழுத்திட்டதன் பின்னர், ட்ரம்ப், வட கொரியத் தலைவர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய நிச்சயமாக “அழைப்பு விடுக்க”ப் போவதாக தெரிவித்தார். இந்த ஆவணம் விரைவில் வெளியிடப்படவிருந்தது.
ட்ரம்ப்பும் கிம்மும் செந்தோஸா தீவில் உள்ள ஆடம்பர Capella ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு சந்தித்தனர். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த இடத்தை கிட்டத்தட்ட ஒரு இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் போல் மாற்றியிருந்தது. இருவரும், அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருக்க, ஒருவருக்கொருவர் நேரடியாக, கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பேசிக் கொண்டனர்.
முன்னதாக ட்ரம்ப், விடயங்கள் உடனடியாக அமெரிக்கா நினைத்ததிசையில் நடக்காது போகுமாயின் முதல் நிமிடத்திலேயே பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு மிரட்டல் விடுத்திருந்தார். ஆயினும், ட்ரம்ப்பும் கிம்மும் சந்தித்து கைகளைக் குலுக்கிக் கொண்டதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்: “நாம் ஒரு மகத்தான பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கிறோம், அது பெரும் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அது என் கவுரவம். நாம் ஒரு மிக அருமையான உறவை ஏற்படுத்திக் கொள்ளவிருக்கிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.”
கிம்மும் இதேபோன்ற வீறுகொண்ட மொழியில் பதிலளித்தார்: “பழைய சங்கிலிகளும் நடைமுறைகளும் நமது முன்னோக்கிய பாதையில் முட்டுக்கட்டைகளாக வேலை செய்தன, ஆனால் அவற்றை நாம் வெற்றி கண்டு இன்று இங்கே வந்திருக்கிறோம்.”
ஆரம்ப பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அவர்களது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது தெரிந்தது, இருவரும் “அருமையான உறவு உணர்வு” கொண்டிருந்ததாக ட்ரம்ப் அறிவித்தார். அவரவரது ஆலோசகர்களும் பங்குபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் முன்நகர்ந்தனர்.
அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் மற்றும் ட்ரம்ப்பின் அலுவலர் தலைவரான ஜோன் கெல்லி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். உச்சிமாநாட்டிற்கு முன்வந்த பேச்சுவார்த்தைகளில் கெல்லி ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்ததாகக் கூறப்படுகிறது.
கிம் உடன் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சரான ரி யோங்-ஹோ, சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ரி சு-யோங், மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் மையக் கமிட்டியின் துணைத் தலைவரான கிங் யோங்-சோல் —இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ட்ரம்ப்பை வாஷிங்டனில் சந்தித்திருந்தார்— ஆகியோர் இருந்தனர்.
பின்னதாக, இரண்டு தரப்பும் ஒரு வேலைநேர மதிய உணவு முழுவதுமாக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தன. இரவு 8 மணிக்கு அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு முன்பாக மாலை சுமார் 4 மணியளவில் ட்ரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசவிருந்தார், கிம் பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்ததாக அமெரிக்க ஊடங்கள் தெரிவித்தன.
வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு சிறு அறிக்கையின் பகுதி ஒன்று இவ்வாறு தெரிவித்தது: “அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன, அவை எதிர்பார்த்ததை விடவும் துரித வேகத்தில் முன்னேறியிருக்கின்றன.”
திட்டமிடப்பட்ட ஒரு கூட்டு செய்திக்குறிப்பிற்கான மொழியை இறுதி செய்வதற்காக, நேற்று, தென் கொரியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இப்போது பிலிப்பைன்ஸுக்கான தூதராக இருப்பவருமான அமெரிக்காவின் சுங் கிம், அமெரிக்க விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமையில் இருக்கும் வட கொரியாவின் சான்-ஹூய் உடன் சந்தித்துப் பேசியிருந்தார். பேச்சுவார்த்தைகளுக்குப் பரிச்சயமான அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்திருந்த தகவலின் படி, அணுஆயுதமய அகற்றம், வட கொரியாவுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள், மற்றும் இரண்டு தரப்புகளும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஆகிய மூன்று பகுதிகளை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.
இந்த சந்திப்பு குறித்த ஒரு சாதகமான கருத்து அலையை சுழல விடுவதற்காக இரண்டு தரப்புகளும் வேலை செய்தன. சிங்கப்பூரின் பிரதமரான லீ ஹீசியன் லூங் -இடம் ட்ரம்ப் தெரிவித்தார்: “நாளை குறிப்பாக நாங்கள் ஒரு மிக முக்கியமான சந்திப்பைக் கொண்டிருக்கிறோம். விடயங்கள் மிக நல்ல முறையில் செல்லும் என்று நான் நினைக்கிறேன்.” இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்ற கவலையில் இருந்து வந்திருக்கின்ற ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே, மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
பொம்பியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதற்கு முன்னர் அமெரிக்கா அளிக்க விரும்பியிருந்தவற்றில் இருந்து ..... மாறுபட்டதும் தனித்துவமானதுமான பாதுகாப்பு உத்தரவாதங்களை மேற்கொள்வதற்கு” அமெரிக்கா ஆயத்தமாயிருப்பதாக தெரிவித்தார். அவர் அதற்கு மேல் எதனையும் விளக்கிக் கூறவில்லை.
வட கொரியாவின் கொரிய மைய செய்தி முகமை கூறுகையில், ”மாறிய சகாப்தத்திற்கு ஏற்ப” தீபகற்பத்தின் அணுஆயுதஅகற்றம் மற்றும் “பரஸ்பர கவலைக்குரிய” ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக “கொரிய தீபகற்பத்தில் ஒரு நிரந்தரமான மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைதிகாக்கும் பொறிமுறை” ஒன்றை கட்டியெழுப்புவது சம்பந்தமான “விரிந்து பரந்த மற்றும் ஆழமான கண்ணோட்டங்களை” இந்த உச்சிமாநாடு பரிவர்த்தனை செய்து கொள்ளும், என்று தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சீனா சம்பிரதாயமான ஆதரவை தெரிவித்தது. அதன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான ஜெங் ஷுவாங் தெரிவித்தார்: “இந்த சந்திப்பு சாதகமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்றும் கொரிய தீபகற்பத்தின் அணுமயமாக்கல் அகற்றத்திற்கும் ஒரு அரசியல் தீர்வுக்கும் பங்களிப்பு செய்யும் என்றும் சீனா உண்மையாக நம்புகிறது.”
ஆயினும், இவை எதுவொன்றுமே, ஒரு அமைதியான முடிவு தொடுதூரத்தில் இருப்பதன் அர்த்தமாக இல்லை. அனைத்து தரப்புகளுமே “கொரிய தீபகற்பத்தின் அணுமயமாக்கல் அகற்றத்திற்கு” அழைப்பு விடுத்தபோதிலும், அவற்றின் அர்த்தம் வெவ்வேறாய் இருக்கிறது. வடகொரியாவும் சீனாவும் தென் கொரியாவில் அமெரிக்க துருப்புகள் மற்றும் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் ஒரு குறைப்பை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, போருக்கான தயாரிப்பில் சீனாவைத் தனிமைப்படுத்துவதே அதன் நோக்கமாய் இருக்கிறது.
பல தசாப்தங்களாய், வட கொரிய அச்சுறுத்தலாக சொல்லப்பட்டதை, ஆசிய-பசிபிக்கில் தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகப்படுத்துவதற்கே அமெரிக்கா, பயன்படுத்தி வந்திருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” மற்றும் இப்போது ட்ரம்ப்பின் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக, சீனா மீது —ஒரு பொருளாதார சக்தியாக அதன் வளர்ச்சி அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது— நிதிரீதியான மற்றும் இராணுவரீதியான அழுத்தத்தை அமெரிக்கா செலுத்தி வந்திருக்கிறது.
ஒன்று அமெரிக்காவின் சுற்றுவட்டத்திற்குள் நகர்ந்து விட வேண்டும், இல்லையேல், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்பில் முதல் பலியாக முற்றுமுதல் அழிவை சந்திக்க வேண்டும் என்ற தெரிவை வட கொரியாவுக்கு ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
“கொரிய தீபகற்பத்தின் முழுமையான மற்றும் சரிபார்க்கத்தக்க அணுஆயுதமயமாக்கல் அகற்றமே அமெரிக்கா இறுதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரே முடிவாக இருக்கும்” என்பதை பொம்பியோ மீண்டும் வலியுறுத்தினார். முழுமையான, சரிபார்க்கத்தக்க, திரும்பவியலாத அணுமய அகற்றம் என்பதன் சுருக்கமான CVID என்பதைக் குறிப்பிட்டு அதில் 'V' [சரிபார்க்கத்தக்க என்பது] முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார். “ஒரே ஒருமுறை தான் அது [சரிபார்ப்பு] நடக்கும், அது துரிதமாக மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்த அவர், அது நடைபெறும் வரையில் வட கொரியா மீதான முடக்கும் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
சியோலில் இருந்து பேசிய தென் கொரியாவின் மூன் ஜே-இன் கருத்து கூறினார்: “இரண்டு தலைவர்களும் ஒரு மிகப்பெரும் விதத்தில் பேச்சுவார்த்தைக்கு துவக்கமளித்திருக்கிறார்கள் என்ற போதிலும் கூட, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முழுமையாகத் தீர்ப்பதற்கு, ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ, அல்லது அதற்கும் அதிகமாகவும் கூட பிடிக்கக் கூடிய ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கு நமக்கு தேவைப்படக் கூடும்.”
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வாஷிங்டனின் மாறும் இராணுவ மற்றும் புவியரசியல் தேவைகளுக்கு ஏற்ப, ஒரு நீண்ட காலத்திற்கு, அது காட்டும் வளையங்களுக்குள் எல்லாம் குதித்து வெளிவர வட கொரியா நிர்ப்பந்திக்கப்படும். பியோங்கியாங் உடனான 2007 ஆறு-தரப்பு உடன்பாட்டினைத் தொடர்ந்து, வாஷிங்டன், கூடுதலான சரிபார்ப்பு நடவடிக்கைகளை ஒருதலைப்பட்சமாகக் கோரி, அந்த உடன்பாட்டிற்குக் குழிபறித்தது. ஒபாமா நிர்வாகம் சீனாவைச் சுற்றிவளைக்கும் அதன் பிரச்சாரத்தை தொடங்கிய சமயத்தில் இந்த உடன்பாட்டை முற்றிலுமாகக் கைவிட்டது. எந்த புதிய ஒப்பந்தத்திலும் இருந்து விலகி ஓடுவதற்கு அமெரிக்கா இதேபோன்றதொரு தந்திரத்தைப் பயன்படுத்தக் கூடும்.
இறுதியாக, வட கொரியா வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு முழுமையாக அடியொற்றி நடக்கத் தவறுமானால், அமெரிக்காவினால் முற்றிலுமாய் அழித்தொழிக்கப்படுகின்ற அபாயத்திற்கு அது முகம்கொடுக்கும். ஒரு உடன்பாடு எட்டப்படுமானால், நேரடியாக சீனாவின் எல்லையில் ஒரு அமெரிக்க-ஆதரவு ஏவல் அரசின் சாத்தியத்தை —இன்னும் அமெரிக்க துருப்புகளின் சாத்தியத்தையும்— அது எழுப்புகிறது. இரண்டில் எதுவாயிருப்பினும் அது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவி-மூலோபாய மோதலை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.
நன்றி சோசலிஸ வலைத்தளம்
No comments:
Post a Comment