Saturday, June 30, 2018

விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்

இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த 'நீதியரசர் பேசுகிறார்' என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் "சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி? தமிழரசுக் கட்சியில் அவருக்கு எந்த முக்கிய பதவியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டணியில்தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் ததேகூ பதவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் அரசுக் கட்சியில் தான் போட்டியிட்டு வென்றார். ஆனால் வென்ற பின்னர் என்ன செய்தார்? கொழும்பில் ஒரு வீட்டில் செத்தேனே சிவனே என்றிருந்தவர். தன்னை ஒரு ஆன்மீகவாததி என்று சொல்லிக் கொண்டவர். அவரது குரு பாலியல் ஆசாமி பிரேமானந்தாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தடபுடலாகக் கொண்டாடியவர். அமைச்சர் சுவாமிநாதன் போன்றோர் அதில் பங்குபற்றியிருக்கிறார்கள். பிரேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் ஒரு கோயில் கட்டி அவரது உருவத்தை பிரதிட்சை பண்ணி வைத்திருக்கிறார். பொதுவாக இந்துமத சுவாமிமார்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கும். சிவந்த மேனி, கட்டுமட்டான உடல்வாகு, நெற்றியில் பட்டை, நடுவில் குங்குமம், கழுத்தில் கொட்டை, கையில் கமண்டலம் இப்படி அட்டகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.

நித்தியானந்த சுவாமி (இயற்பெயர் இராசசேகரன்) இப்படிப்பட்ட வசீகரம் படைத்த ஒரு ஆன்மீகவாதி. அவரிடம் சினிமா நடிகைகளே மயங்கி விடுகிறார்கள். பிரபல நடிகை இரஞ்சிதா அவரோடு உல்லாசத்தில் ஈடுபடும் படுக்கையறைக் காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்தன. இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழில் இந்த சாமியார் தொழில்தான். பல கோடிகளைக் கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகலிடம்.

இந்த நித்தியானந்தா சுவாமியை பிட பிரபலமானவர் பிரேமானந்தா. சத்திய பாபா பாணியில் சூனியத்தில் இருந்து திருநூறு, குங்குமம், சங்கிலி, மோதிரம், கைக்கடிகாரம், பவுர்ணமி நாளன்று வாயில் சிவலிங்கம் வரவழைப்பது போன்ற சித்து விளையாட்டுக்கள் செய்பவர். பெரிய இடத்துப் புள்ளிகள் எல்லாம் தரிசனத்துக்கு அவர் காலடியில் தவம் கிடந்தார்கள்.

1989 இல் திருச்சி, விராலிமலை பாத்திமாக நகரில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி அதில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் ஒரு ஆச்சிரமத்தைத் உருவாக்கினார். சுமார் நூறு சிறுவர்கள், சிறுமியர் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டனர். இவர்கள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். 1983 நடந்த இனக் கலவரத்தை அடுத்து இந்தக் குழந்தைகளோடு பிரேமானந்தா தமிழ்நாட்டில் குடியேறினார்.

பிரேமானந்தா அணிந்திருந்த காவி உடைக்கு உள்ளே ஒரு காமவெறி பிடித்த ஒரு கொடூர மிருகம் ஒளிந்திருந்ததை அதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரேமானந்தா பகலில் இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவில் ஆச்சிரமத்தில் வாழ்ந்த பராயம் வந்த, வராத இளம் சிறுமிகளோடு பலவந்தக் காமக் களியாட்டம். கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்து வருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர்.

ஆனால் ஊழ்வினை சும்மா விடுமா? அது உருத்து வந்து ஊட்டும். முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். 1993 இறுதி வரை பிரேமானந்தாவின் காட்டில் மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. ஆனால் நாளடைவில் பிரேமானந்தா அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்த்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில் ஈடுபட்ட செய்தி வெளியில் கசியத் தொடங்கியது. அவரது காமப் பசிக்கு அவரது பாதுகாப்பில் இருந்த அநாதைச் சிறுமிகள் பலர் பலியானார்கள் என்ற செய்தியும் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியில் தெரிய வந்தது.

பிரேமானந்தாவின் பசிக்கு இரையான ஆச்சிரமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற சுரேஷ்குமாரி மற்றும் லதா என்ற இரு பெண்கள் தப்பிச் சென்று தாங்கள் பிரேமானந்தாவால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதனை வெளிப்படுத்தி விடுவதாகக் கூறிய பொறியாளர் இரவி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாகவும் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்.

பிரேமானந்தாவின் ஆச்சிரமம் நொவெம்பர் 14, 2004 அன்று காவல்த் துறையால் சுற்றி வளைக்கப்பட்டது. பிரேமானந்தா கற்பழிப்பு (13 சிறுமிகள்) மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின் போது ஆகக்குறைந்தது 13 சிறுமிகளைப் பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று... பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் கருவின் தந்தை சாட்சாத் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் அறிவியல் ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.

சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

நீண்ட நீதி விசாரணைக்குப் பின்னர் ஓகஸ்ட் 21, 1997 இல் புதுக்கோட்டை நீதிபதி ஆர். பானுமதி அவர்கள் பிரேமானந்தா குற்றவாளி எனக் கண்டு அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது (http://www.puthinappalakai.net/2015/04/24/news/5513). பிரேமானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கமலானந்தாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு டிசெம்பர் 2002 இல் சென்னை உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றம் 2005 இல் பிரேமானந்தாவின் மேன்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

விக்னேஸ்வரன் பாலியல் சுவாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது சாட்சியத்தை நிராகரித்தது. அவரை ஒரு கற்பனைவாதி (wishful thinker) என்று சொல்லி அவரது தலையில் குட்டு வைத்தது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்த அடுத்த ஆண்டு நொவெம்பர் 2014 இல் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் சென்று பிரேமானந்தாவின் சமாதியில் வழிபட்டார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிரேமானந்தாவின் கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள்த் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் மார்ச் 14, 2015 அன்று ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டது.

பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த நான்கு இலங்கைத் தமிழர்களுக்குமான தண்டனையை 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

சிறிலங்காவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான ஒருவர், இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்ததும் குற்றவாளிகளைச் சுற்றவாளிகள், அப்பாவிகள் என்று சுட்டிக்காட்டியிருந்ததும் இந்தியாவின் வெளித்துறை மூத்த அதிகாரிகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது.

பல நோய்களால் பீடிக்கப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டை சிறையில் பெப்ரவரி 21, 2011 இல் தனது 59 ஆவது வயதில் காலமானார். ஆனால் அவரது சீடர்கள் அவரைக் கடவுள் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அதில் ஒருவர் விக்னேஸ்வரன். தில்லி நீதிமன்றத்தில் அவருக்கு அனுசரணையாக சாட்சி சொன்னவர். பிரேமானந்தாவின் கோடிக் கணக்கான சொத்துகளுக்கு விக்னேஸ்வரன் ஒரு அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரன் தனது பேச்சை வாசிக்கத் தொடங்கு முன்னர் “பரப்பிரமம்” என்று சொல்வார். அந்தப் பரப்பிரமம் வேறு யாருமல்லை. மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதி மன்றம், தில்லி உச்ச நீதி மன்றம் போன்றவற்றால் தண்டனை உறுதி செய்யப்பட்ட காமுகன், கொலையாளி பிரேமானந்தாதான்.

விக்னேஸ்வரனின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, அவநம்பிக்கை பற்றிக் கவலை இல்லை. ஆனால் அரசியல்வாதி விக்னேஸ்வரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் கோணல் மாணல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாற்குக் காரணம் பொதுமக்கள் அவரது இருண்ட பக்கத்தையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இத்தகைய பின்னணியைக் கொண்ட விக்னேஸ்வரன் "சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக் கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்' என்கிறார். விசுவாசம் என்ற சொல்லுக்கு விக்னேஸ்வரனின் அகராதியில் வேறு பொருள் இருக்கிறது போல் தெரிகிறது.

ஓகஸ்ட் 17, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்" என்று அறிக்கை விட்டது சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாக நடந்து கொண்டதைக் காட்டுகிறதா?

மாற்றுத் தலைமை வேண்டும் அதற்காக தமிழ் மக்கள் பேரவையை சம்பந்தனுக்குத் தெரியாமல் தொடங்கி, இப்போது தமிழ் அரசுக் கட்சி நியமனம் தராவிட்டால் வேறு கட்சிகளோடு கூட்டணி சேருவேன் அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்வது சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும விசுவாசமாக விக்னேஸ்வரன் நடந்து வருவதைக் காட்டுகிறதா?

"நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சியையும் ஆதரிப்பவன் இல்லை, நான் நடுநிலையாளன்" என்பதே விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடு. அப்படியிருக்க "நான் சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்' என்று அவர் எப்படிச் சொல்ல முடியும்? சம்பந்தன் தலைமை வகிக்கிற தமிழ்த் தேசியக் கட்சியை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் அது கட்சியே அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. வி.புலிகள் காலம் தொட்டு அதுதான் நிலைப்பாடு.

மாற்றுத் தலைமை வேண்டும் அதற்காக தனிக் கட்சி தொடங்கப் போவதாகச் சொல்லும் ஒருவரை, அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் ஒருவரை எப்படி தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட, அதிலும் முதலமைச்சர் வேட்பாளாராக களம் இறக்கச் சம்மதிக்கும்?

"கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள்.' என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்துகிறார். கட்சியில் இருந்து யாரும் அவரை வெளியேற்ற முனையவில்லை. "தமிழ் அரசுக் கட்சி அவரைத் தேர்தலில் நிறுத்தாது, அதற்கான வாய்ப்பு இல்லை. அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர் பார்க்க முடியாது. " என்று சுமந்திரன் கூறுகிறார்.

மொத்தத்தில் விக்னேஸ்வரன் மூலமைச்சர் கனவில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார். தனது கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார். அதன் விளைவு யாதாக இருக்கும் என்பதை அவர் அறியாதிருக்க நியாயமில்லை.

No comments:

Post a Comment