Saturday, March 10, 2018

புலம்பெயர்ந்தோர் காலவரையின்றி தடுத்துவைக்கப்பட முடியும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியினரும் மௌனம் By Eric London

5-3 என்ற முடிவை செவ்வாய்க்கிழமை அன்று வழங்குகையில், அமெரிக்க உச்சநீதி மன்றம் Jennings v. Rodriguez வழக்கில் அரசாங்கம் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று தீர்ப்பளித்ததானது, அவர்களைப் பிணையில் எடுப்பதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கிறது.

அதன் விளைவாக, நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோர், அவர்களின் புலம்பெயர்தல் வழக்குகள் தொடரப்படுவதால், இடைநிலை முகாம்களில் பூட்டிவைக்கப்படலாம், அவர்களது வழக்குகள் தீர்மானிக்கப்படும் வரைக்கும் –இப்படிப்பட்ட நடவடிக்கை பெரும்பாலும் பல ஆண்டுகள் எடுக்கும்- விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு ஒரு கட்டத்தில், சுமார் 450,000 புலம்பெயர்ந்தோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர், மற்றும் அந்த எண்ணிக்கை இத் தீர்ப்பின் பின்னர் பாரியளவில் அதிகரிக்கும்.

இந்த முடிவானது, ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்தோருக்கும் சட்ட ரீதியான நிரந்தர வசிப்புரிமை உள்ளவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைச் செய்யவில்லை. அதன் பொருள் அமெரிக்காவிலுள்ள மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்படவும் காலவரையற்றுத் தடுப்புக்காவலில் வைக்கப்படவும் உள்ளாகலாம் என்பதாகும்.

இந்த மைல்கல்லான நிகழ்ச்சி, உண்மையில் பெருநிறுவனம் கட்டுப்படுத்தும் பத்திரிகைகளில் கருத்துக் கூறலின்றிக் கடந்து சென்றது. செவ்வாய்க் கிழமை மாலை, வாஷிங்டன் போஸ்ட், CNN, MSNBC மற்றும் Politico ஆன்லைன் முதல் பக்கங்களில் தீர்ப்பு பற்றி எந்த செய்திப் பிடிப்பும் இல்லாமல், அதேவேளை நியூயோர்க் டைம்ஸ் மட்டும் அதன் கீழ்ப்பகுதியில் தனி ஒரு கட்டுரையைக் கொண்டிருந்தது. அதேவேளை, இந்த ஐந்து இணைய தளங்களும் சேர்ந்து ரஷ்ய எதிர்ப்பு வேட்டையாடும் 23 முன்பக்கக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

ஜனநாயகக் கட்சியின் பிரதான அலுவலர்கள் தீர்ப்பு பற்றி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை, மற்றும் Bernie Sanders, Nancy Pelosi, Elizabeth Warren, Charles Schumer, Hillary Clinton மற்றும் Barack Obama இன் டுவிட்டர் கணக்குகள் அனைத்தும் இது பற்றி இன்னும் மௌனம் சாதிக்கின்றன.

இந்த வழக்கானது, 2004ல் சிறையிடப்பட்ட மற்றும் பிணை எதுவுமின்றி அவ்வழக்கு கடும் மேல்முறையீட்டு நிகழ்வினூடாகச் செல்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட, மெக்சிகக் குடிமகனான Alejandro Rodriguez ஆல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2007ல், மூன்றாண்டுகள் சிறைவைக்கப்பட்ட பின்னர், அவரது நீண்ட தடுப்புக் காவலுக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்தார். இறுதியில் கலிஃபோர்னிய நடுவண் மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றம் இதே போன்று அமைந்துள்ள புலம்பெயர்ந்தோரை உள்ளடக்கிய ஒரு இனமாக வழக்கை முறையிட்டது, அதன் சார்பாக இந்த வழக்கு நடந்தது. இந்த வகையினத்தின் உறுப்பினர்கள் பலர் ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நீதிபதி சாமுவேல் அலிட்டோவின் பெரும்பான்மையான கருத்து, போலீஸ்-அரசு முறையிலான ஆட்சிக்கு ஆளும் வர்க்கத்திற்குள்ளேயான ஆதரவின் ஆழத்தைக் காட்டுகிறது. “[புலம்பெயர்] வழக்கு நடவடிக்கைகளின் பொழுது தடுப்புக் காவலில் வைத்தல், குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் தொடர்பாக ஒரு அன்னிய அந்தஸ்தை, அன்னியர் ஒன்றில் காணாமற்போதல் அல்லது குற்றச்செயலில் ஈடுபடல் எதுவும் இல்லாமலேயே தீர்மானிப்பதற்கான நேரத்தை வழங்குகிறது” என அம்முடிவு கூறுகிறது. இந்தத் தீர்ப்பானது ஆறுமாத காலம் தடுத்துவைக்கப்பட்டதற்குப் பின், பிணைஉறுதி விசாரணைகள் கட்டாயம் என்ற ஒன்பதாவது சுற்று நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு முடிவுகளை செல்லாததாக்குகிறது. காலவரையற்றுத் தடுத்துவைத்தல் “சீரிய அரசியற்சட்ட கவலைகளை எழுப்புகிறது” என்ற “நம்புதற்கரிய” விவாதத்திற்காக ஒன்பதாம் சுற்று நீதிமன்றத்தை அலிட்டோ திட்டினார்.

நீதிபதிகள் Clarence Thomas, Anthony Kennedy, Neil Gorsuch மற்றும் John Roberts ஆகியோருடன் இணைந்த அலிட்டோ, “அரசியற் சட்டம் மீதான கலந்துரையாடலுக்கு அதன் கருத்தில் முதலாவது, மூன்றில் இரண்டு என்ற வாக்களிக்கா” மூன்று நீதிபதிகளின் கருத்துமாறுபடலை கேலி செய்தார். Thomas மற்றும் Gorsuch முடிவுடன் ஒத்துப் போனாலும் நீதிமன்றம் கேள்விக்குட்படுத்துவதை தூக்கிஎறிய வேண்டும் ஏனெனில் புலம்பெயர்ந்தோருக்கு ஆட்கொணர்வு உரிமை கிடையாது மற்றும் அவர்களைத் தடுப்புக்காவலில் வைக்கும் சட்டரீதியான தன்மையைக் கூட அவர்கள் கேள்விக்குட்படுத்த முடியாது என்றனர்.

Ruth Bader Ginsberg மற்றும் Sonia Sotomayor உடன் இணைந்துகொண்ட, கருத்துமாறுபாடு கொண்ட நீதிபதி Stephen Breyer, எச்சரித்ததாவது:

“அமெரிக்காவில் முற்றிலும் அரசியல் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒருவரும் உரிமை கோர முடியாது, அடிமைக்காலத்திற்குப் பின்னர் எனக்குத் தெரிந்தவரையில் யாராவது வெற்றிகரமாக சவால் செய்தார்களா என்றும் இல்லை. கதை என்னவாக இருந்தாலும், நமது எல்லைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளவர்களை பட்டினிபோட, அடிக்க மற்றும் சாட்டையடி கொடுக்க அரசியல் அமைப்புச்சட்டம் அரசாங்கத்தை சுதந்திரமாக விடுமா? இல்லை எனில், கதை என்னவாக இருந்தாலும், நாம் என்னதான் நடித்தாலும், அமெரிக்காவில் யதார்த்தத்தில் உரிமை இருக்கிறதா என்றாலும், தன்னிச்சையாக சிறைப்படுத்துவதற்கு எப்படி அரசியற்சட்டம் அரசாங்கத்தை அனுமதிக்கும்? அரசியற் சட்டம் தன்னிச்சையான சிறைப்பிடித்தலை அங்கீகரிக்காது என்பதுதான் விடை. அதன் காரணம் மிக எளிதானது: தன்னிச்சையாக தடுத்து வைத்தலில் இருந்து சுதந்திரம் என்பது, அரசியற்சட்ட எல்லைகளுக்குள் எவரும் காணும் புராதனகாலத்து மற்றும் முக்கிய உரிமையாகும்.”

அவர் மேலும் கூறினார், எங்கும், “குறிப்பாக அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் ‘சில அன்னியமாகாத உரிமைகள்” மற்றும் அவற்றில் ‘சுதந்திரமாய் இருப்பதற்கான உரிமை என்று அதன் வலியுறுத்தலில் சுதந்திரப் பிரகடனத்தின் வார்த்தைகளை மட்டுமே நினைவூட்ட வேண்டி இருக்கிறது.”

ஜனநாயகக் கட்சியினரின் நியமனர்களின் கருத்துமாறுபாடு நேற்றைய தீர்ப்பின் விளைவைப் பற்றி எச்சரிக்கைகளைச் செய்தாலும், இந்த முடிவுக்கு வழிவகுத்த ஜனநாயகக் கட்சியின் பாத்திரம் பற்றி ஒரு கருத்தும் கூறப்படவில்லை. ஜனநாயகக் கட்சியின் நியமனரான Elena Kagan இந்த முடிவிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டார், ஏனெனில் கீழ் நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணைப்பத்திரம் பற்றி விசாரணை வழங்குவதற்கு எதிராக ஒபாமா நிர்வாகம் வாதிட்டபொழுது, இவ்வம்மையார் தலைமை சட்ட அதிகாரியாக இருந்தார்.

அலிட்டோ பெரும்பான்மையரால் மேற்கோள் காட்டப்பட்ட அரசியற் ஷரத்து இரு கட்சி ஆதரவோடுதான் நிறைவேற்றப்பட்டது. Thomas மற்றும் Neil Gorsuch இறுதி திருப்பி அனுப்பல் ஆணையின் அடிப்படையில், புலம்பெயர்ந்தோருக்கு ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்யும் உரிமை கூட இல்லை என்று வாதிட்டபொழுது, அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்தல் சீர்திருத்தம் மற்றும் புலம்பெயர்ந்தோர் பொறுப்பு சட்டம் 1996-ன் பகுதியாக இயற்றப்பட்ட சட்டப் பிரிவை மேற்கோள் காட்டினர். இது Harry Reid, Dianne Feinstein, Elijah Cummings, Steny Hoyer மற்றும் Sheila Jackson-Lee போன்ற ஜனநாயகக் கட்சியினர் உட்பட இரு கட்சியினராலும் காங்கிரசில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பில் கிளிண்டனால் சட்டமாக்குவதற்காக கையெழுத்திடப்பட்டது.

இந்த வழக்கு இப்பொழுது ஒன்பதாம் சுற்றுக்கு திரும்ப வந்துள்ளது. நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட ஆறுமாத பிணைத்தொகைத் தேவையினை நிராகரிப்பதில், உச்சநீதி மன்றம் புலம்பெயர்ந்தோரின் அரசியற்சட்ட ரீதியான கூற்றுக்களின் பலாபலன்களின் அடிப்படையில் மேலும் கவனமாய் பரிசீலிக்க சிறையில் வைக்குமாறு திருப்பி அனுப்பியது.

Jennings v. Rodriguez வழக்கானது, உரிமை மசோதா என்பதெல்லாம் வெற்றுத்தாள் என்பதற்கான மேலும் ஒரு சான்றாகும். இரு கட்சிகளுமே பிடி ஆணைகள் அல்லது வழக்குகள் எதுவும் இன்றி மக்கட்திரள் கண்காணிப்பு, சட்டவிரோத யுத்தம், அரசு சித்திரவதை, கரும் பகுதி சிறைகள் மற்றும் அமெரிக்க மக்களைப் படுகொலை செய்தல் ஆகியவற்றிற்கு கையெழுத்திட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை தீர்ப்பை அமுக்கிவைத்தல் என்ற அரசியல் மற்றும் ஊடக நிறுவனங்களின் முடிவானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தலுக்கான தொகுதி பிரதிநிதி ஆதரவு இல்லை என்பதைக் காட்டுகிறது.

பரந்த அளவில் காலவரையற்றமுறையில் தடுப்புக்காவலில் வைக்கப்படல் ஆட்சிக்கான அங்கீகாரம் என்பது, புலம்பெயர்ந்தோர் நிலை என்றவாறில்லாமல் அனைத்து தேசிய மூலங்களையும் கொண்ட தொழிலாளர்களது இருப்புக்கே ஒரு அச்சுறுத்தல் ஆகும். 1917ல் அரிசோனா, பிஸ்பி-ல் மற்றும் 1901லிருந்து 1903 வரை கொலொரோடாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் பொழுதான, அரசாங்கத்தின் காலவரையற்று தடுத்து வைத்தல் மற்றும் பெருநிறுவனங்களின் வேண்டுதலின்படி வேலையிறுத்தம் செய்த தொழிலாளர்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு அனுப்பவும் கூட செய்த வரலாறு அமெரிக்காவில் இருக்கிறது. இம்முடிவு, ட்ரம்ப் நிர்வாகமானது புலம்பெயர்ந்தோர் இடைத்தடுப்பு முகாம்களை நாடு முழுவதும் வலைப் பின்னலை விஸ்தரிப்பதற்கு மேற்கோள் காட்டப்படப்போவது மட்டுமல்லாமல், அது விரைவிலேயே அமெரிக்கக் குடிமக்களுக்கும் எதிராகத் திருப்பப்பட இருக்கிறது.



No comments:

Post a Comment