Friday, March 9, 2018

சங்கரியார் கண்ணை மூடி பால்குடிக்கும் பூனையின் நிலையிலாம். கட்சி தொண்டனின் மடல்.

கண்ணைமூடிப் பால்குடிக்கும் பூனை - நினைக்குமாம் தான் பால் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை என்று - அதேபோல - தான் கூறும விடயங்கள் எல்லாம் உண்மை என மக்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கும் குள்ள நரித்தனமுடைய சங்கரிக்கு ஒரு பகிரங்க கடிதம்!

உங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை 2003இன் இறுதியில் சம்பந்தனுக்கு நேர்ந்தது போல அமைந்துள்ளது. நேர்மையும் துணிவும் இருந்தால் நீங்கள் கூட்டணியின் பொதுச் சபையை உடனே கூட்ட வேண்டும்!

அபாண்டமாக கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். முதுகெலும்பற்ற உங்கள் அடிவருடிகள் எதுவுமே உங்களுக்கு மாறாக கருத்துத் தெரிவிக்காத நிலையில் உங்களுடைய ஆட்டத்தை சற்று நிறுத்தி தந்தை செல்வா எப்படிக் கட்சி நடத்தினாரோ அப்படி நடத்துங்கள்!

ஏகப்பிரதிநிதிப் பிரச்சினையின் பின் வழக்குத் தாக்கல் செய்து சம்பந்தன், மாவை. சேனாதிராஜா போன்றோருடன் ஒத்துழைக்காது தனியே கட்சியை உங்களுக்கு தலையாட்டுபவர்களுடன் வைத்துக்கொண்டு அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து கூட்டணியின் ஸ்ரான்லி வீதி அலுவலகத்தை விற்றிருக்கிறீர்கள்! இதற்காக நீங்கள் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் மேற்கொண்டீர்களா?

2010 தேர்தலில் கூட்டமைப்பினுடைய கோரிக்கையை நிராகரித்து வாங்கிக் கட்டியதுடன் - 2013ல் மாகாண சபைத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு பின்பு கூட்டமைப்பு எனக்குத் தான் என தேர்தல்கள் திணைக்களத்துக்கு கடிதம் எழுதி அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நான் கட்சியை விட்டு விலகினேன்! என்னையும் கட்சியின் அங்கத்தவரே இல்லை என ஒரு பத்திரிகைக்கு பதிலும் அளித்திருந்தீர்கள்.

தற்போது பிரதேச சபைத் தேர்தல் காலத்தில் தனித்து நீங்களாகவே ஒவ்வொருவருடனும் கதைத்துவிட்டு இறுதியாக யாரை நீங்கள் எதிரியாக இவ்வளவு காலமும் குறிப்பிட்டு வந்தீர்களோ (உங்களுடைய அண்ணரைக் கொலைசெய்ததாக)அவர்களுடன் சேர்ந்து அவர்களால் சரிந்திருந்த வாக்கு வங்கியை ஓரளவு நிவர்த்தி செய்திருக்கிறீர்கள்!

இன்று மாநகர சபை உறுப்பினராக வென்ற உங்களால் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலுக்கு முன் கட்சியின் பொதுச் சபையோ அல்லது செயற்குழுவோ கூடியதா? உடனடியாக கூட்டணியின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பொதுச் சபையை கூட ஏற்பாடு செய்யுங்கள்!

உண்மையுள்ள கட்சித் தொண்டன்,
தங்க. முகுந்தன்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com