Tuesday, March 6, 2018

உடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும். வை. எல் எஸ் ஹமீட்

மீண்டும் ஒரு அளுத்கம கலவரம் கண்டியில் நிகழ்ந்தேறிவிட்டது. இந்தக் கலவரத்தில் பொலிசாரின், அதிரடிப் படையினரின் அசமந்தம் மாத்திரமல்ல, அவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கின்றது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாலிபர்கள் துரத்தப்பட்டு இனவாதிகள் பாதுகாப்புத் தரப்பினரின் கண்முன்னால் தாக்குவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இன்னும் பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. எல்லாவற்றிற்கும்மேல் ஓர் இளம்மொட்டு இந்த இனவாதத்தீயில் கருகிவிட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னதுல் பிர்தௌசை கொடுப்பானாக.

ஒரு சிங்கள சகோதரன் மூன்று முஸ்லிம் குடிகாரர்களால் அநியாயமாக கொல்லப்பட்டான். அதற்காக, அம்மூவரையும் எதுவேண்டுமானாலும் செய்திருக்கலாம். அப்பாவியான இவ்விளமொட்டு என்ன பாவம் செய்தது? பள்ளிவாசல் என்ன பாவம் செய்தது? பெண்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தன? இந்த அராஜகத்தை அரங்கேற்றியவர்கள் மனித இனம்தானா? நெஞ்சு பொறுக்கவில்லை.

இவர்களின் பின்னால் உள்ள சக்தி எது? அந்த சக்தியின் உத்தரவில் இதனை இயக்கிய இயக்குனர்கள் யார்? இது வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவர்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகம்.

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முஸ்லிம் பிரதிநிதிகளை பிரதமருக்கெதிராக வாக்களிக்கச் செய்வதற்காக மஹிந்த தரப்பினால் அரங்கேற்றப்பட்ட அராஜகம்தான் அம்பாறை, திகன நிகழ்வுகள் என்பது சிலரது வாதம். இதில் உண்மை இல்லை; என ஒரேயடியாக ஓரம் கட்டிவிட முடியாது. உண்மை இருக்கலாம். அவ்வாறெனில் அதற்கேன் பிரதமர் துணைபோகின்றார்?

இனவாதிகள் விடயத்தில் அரசு ஒரு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கும்; என்பதை அம்பாறைக் களவிஜயத் தவிர்ப்பின் மூலம் தெட்டத்தெளிவாகவே பிரதமர் வெளிப்படுத்திவிட்டார். நடைமுறையில் அந்த மெத்தனப்போக்கை பொலிசார் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனானப்பட்ட 83 ஜூலைக் கலவரத்தையே ஊரங்கடச்சட்டத்தைப்போட்டு ஒரு சில மணித்தியாலங்களில் அடக்கினார் J R. ஆனால் இரண்டு நாட்கள் ஊரடங்கைத் தாமதித்து இனவாதிகள் வெறியாட்டம்ஆட வெளிப்படையாக இடம்கொடுத்துவிட்டு அதன்பின் ஊரடங்கைப் போட்டு அடக்கினார். அவரது மருமகன் ஊரடங்கைப் போட்டு, பொலிசார், அதிரடிப்படையினரின் முன்னிலையில் அவர்களின் துணையுடன் அராஜகம் அரங்கேற அனுமதியளித்திருக்கின்றார். மாமாவிடம் இருந்த அந்த சிறிய அளவு நேர்மைகூட மருமகனிடம் இல்லை.

மனிதன் என்றால் தனிப்பட்ட பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டுவிட்டான் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வேட்டையாடும் படலம் இன்னும் எவ்வளவு காலம் தொடரப்போகின்றது? இலங்கையும் ஒரு மியன்மாராக மாறும் வரையா? இந்தப் பிரதமரின் அரசில் எந்தவொரு முஸ்லிமும் குந்திக்கொண்டிருக்க முடியுமா?

அரசை விட்டு வெளியேறுங்கள்


எனவே, ஒரு கணமும் தாமதியாது அரசைவிட்டு வெளியேறுங்கள். அரசைவிட்டு வெளியேறினால் வருபவர்கள் பாதுகாப்புத் தருவார்களா? என சிலர் கேட்கிறார்கள். இவர்கள் பாதுகாப்புத் தந்துவிட்டார்களா? என்ற கேள்விக்கு பதில்சொல்லிவிட்டுத்தான் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். இந்த வாதம் எவ்வாறிருக்கிறதென்றால், வருபவர்களும் பாதுகாப்புத் தருவார்கள்; என்பதற்கு உத்தரவாதமில்லை, இருப்பவர்களும் தரவில்லை. எனவே, நாங்கள் இங்கேயே இருந்து இந்த அமைச்சுப் பதவிகளை அனுபவித்துவிட்டுப் போகின்றோமே! என்பதுபோல் இருக்கின்றது.

உடனே, அரசை விட்டு வெளியேறுங்கள். அதன்பின் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் சில நிபந்தனைகளை முன்வையுங்கள். அதில் “ முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றுமட்டும் எழுதிவிடாதீர்கள். நீங்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்; என்று பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கேட்பதும் அவர்கள் ஆம் என்பதும் அதன்பின் அவர்கள் அடிப்பதும் நீங்கள் ஆக்ரோஷமாக பேசி படங்காட்டுவதும்; போதும்.

மாறாக, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு என்ன, என்ன செய்யவேண்டும்? என்பதை நிபந்தனையாக வையுங்கள். அவற்றில் முதன்மையாக,

இந்த இனவாத அராஜகத்தை வெளியூரில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இயக்குவது சில இனவாத அமைப்புகளும் அவற்றின் பிரதான செயற்பாட்டாளர்களும். அவர்களை முதலாவதாக கைது செய்து பிணையில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வன்செயலில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

ஊரடங்கு நேரத்தில் இனவாதிகள் எவ்வாறு வந்து தாக்குதல் நடத்தினார்கள்? அவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை? இதற்கு ஒத்துழைத்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இனவாத சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறுபவர்களாக அந்தந்த பிரதேச பொலிஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்.

இவற்றை அரசு உடன் செய்யவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட கடைகள் வீடுகள் உடன் திருத்தப்பட வேண்டும். அளுத்கமவில் இழுத்தடித்துபோல் அல்லாமல் ஒரு சில வாரங்களுக்குள் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். அதுவரை தொழில்களை இழந்தவர்களுக்கு ஒரு தொகை குடும்பச்செலவுக்கு வழங்க வேண்டும்.

இவற்றிற்குமேலாக, ஒரு ஆணைக்குழு நியமித்து அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன கலவரங்கள் தொடர்பாக விசாரித்து இவற்றின் பிரதான சூத்திரதாரியை நாட்டுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினைபோன்ற சில முக்கியவிடயங்களுக்கும் தீர்வுதரவேண்டும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை


நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் வாக்கெடுப்பிற்கு உடனடியாக வராது. சற்றுக் காலம் எடுக்கும். இந்தக்காலப்பகுதிக்குள் இவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்படுமானால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவு வழங்கலாம்.

முஸ்லிம்களின் பாதுகாப்பு நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டு நமது முக்கிய பிரச்சினைகளும் தீர்க்கப்படுமானால் அதன்பின் நீங்கள் மீண்டும் அரசில் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை அனுபவிப்பதில் ஆட்சேபனையில்லை. மாறாக, இவை எதனையும் நிறைவேற்ற ஆயத்தமில்லையெனில் பிரதமரைத் தோற்கடிப்போம். அதன்பின் இன்ஷாஅல்லாஹ்,

புதிய பிரதமராக வருபவரிடம் இதே நிபந்தனைகளை முன்வைத்து எதிரணியில் இருந்து ஆதரவு வழங்குவோம். நமது நிபந்தனைகளை அவர் நிறைவேற்றுவதைப்பொறுத்து நேரடியாக ஆட்சியில் பங்கெடுப்பதைத் தீர்மானிப்போம். நமது கையில்தான் துரும்பு இருக்கின்றது; என்பதை மறந்துவிட வேண்டாம். உங்கள் அமைச்சுப் பதவிக்காக தயவுசெய்து சமூகத்தை நட்டாற்றில் விடவேண்டாம். உடனடியாக அரசைவிட்டு வெளியேறுங்கள்.

நாம் இல்லாமல் எந்தவொரு அணியாலும் ஆட்சியமைக்க முடியாது; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். யானைக்கு அதன் பலம் தெரிவதில்லையாம் அது சாகும்
வரை; என்பதுபோல் இருந்துவிடாதீர்கள்.

கணக்கைப் பாருங்கள்:
ஐ தே க: 106+1= 107
சு க. : 95
த தே கூ: 16
மிகுதி JVP & டக்ளஸ்

ஐ தே கட்சியின் 107 இல் 17 முஸ்லிம். அதில் 12 முஸ்லிம் கட்சிகள்
சு க யில் 4

107-17= 90
T N A=. 16
Total = 106 பிரதமர் வெல்ல முடியாது. இதில் ஐ தே கட்சி கழுத்தறுப்பு எத்தனையென்று தெரியாது. ஜனாதிபதி பிரதமரை ஆதரித்தாலும் எத்தனை தேறுமென்று கூறமுடியாது. இத்தனையும் தாண்டி பிரதமர் வெற்றிபெற்றால் பெற்றுக்கொண்டு செல்லட்டும். உதவாக்கரை ஆட்சியில் இருப்பதைவிட எதிர்க்கட்சி அரசியல் செய்வோம், நம் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவோம்.

ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள், வெற்றிபெற்றாலும் பிரதமரால் சுமுகமாக ஆட்சியைக் கொண்டுசெல்வது கடினம். பெரும்பாலும் நாம் இல்லாமல் வெற்றிபெறவேமாட்டார். மறுபுறத்தில் பிரதமர் தோற்று மஹிந்தவும் மைத்திரியும் இணைந்தாலும் நாம் இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.

இவ்வளவு சக்தியை வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவிகளைக் காப்பாற்றுவதற்காக இனவாதிகளிடம் அடிவாங்குகின்ற சமூகமாக இருக்கப்போகின்றோமா? சிந்தியுங்கள்.

அரசைவிட்டு உடனே வெளியேறுங்கள்ச. மூகம் அதற்குரிய அழுத்தத்தைக் கொடுங்கள்.

No comments:

Post a Comment