Saturday, March 31, 2018

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் தப்பிப்பிழைப்பாரா? தாவுஸ் எம்.அஸாம்

தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து இன்று வரை தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

தற்போது மீண்டும் அவர் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இருப்பினும் இம்முறை இதற்கு முன்னர் முகம் கொடுத்த சூழ்நிலைகளை விட சற்று இக்கட்டானதாக உள்ளது. இதற்கு முன்னர் அவர் முகம் கொடுத்தது தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டங்களுக்கே. ஆனால் தற்போது அவர் முகம் கொடுத்திருப்பது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலைக்காகும்.

பிரதமரின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முதலாவது காரணம் இறுதியாக நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளாகும். அத்தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாசஸ்தலத்திற்கு அழைத்து பிரதமர் பதவியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக இணையதளத்தில் சில உத்தியோகபூர்வமற்ற செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் அவற்றில், ஜனாதிபதியின் கூற்றுக்கு பிரதமர் செவிசாய்க்கவில்லை என்றும் ஐ.தே.க.வின் தலைமை மற்றும் பிரதமர் பதவியை தீர்மானிக்கும் உரிமை சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என்றும் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.

எது எப்படியோ ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி தற்போது கேள்விக்குறியாக இருப்பது கடந்த 21 ஆம் திகதி அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையினாலாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாலேயே மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 51 உறுப்பினர்களுடன் ஆளும்கட்சியில் இருக்கும் சுதந்திரக் கட்சி 4 உறுப்பினர்களும் மேற்படி நம்பிக்கையில் லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர். ரீ.பி.ஏக்கநாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரே ஆளும் கட்சியில் இருந்து கைச்சாத்திட்டவர்கள்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது குறிப்பிட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையிழக்கப்படுமாயின் அவரை நீக்குவதற்குமுன்வைக்கப்படும் முன்மொழிவாகும். பாராளுமன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சிறியானி பண்டார எழுதிய ‘இலங்கை பாராளுமன்ற செயற்பாடுகள்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு 2/3 பெரும்பான்மை அவசியமில்லை. சாதாரண பெரும்பான்மை போதுமானதாகும். அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடையும் பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செவதே பாராளுமன்ற சம்பிரதாயமாகும்.

இதற்கு முன்னர் பல அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த போதும், பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைமுன்வைக்கும் நான்காவது சந்தர்ப்பமே இது. இலங்கை வரலாற்றில் பிரதமர் ஒருவருக்கெதிராக முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது 1957 செப்டம்பர் 4 ஆம் திகதியாகும். அது அப்போது பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டதாகும். அதன் பிறகு 1975 டிசம்பர் 23 ஆம் திகதி அப்போதைய பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையவில்லை. அதன் பின்னர் பிரதமர் ஒருவருக்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது 2015 மே 21 ஆம் திகதி அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே. இருப்பினும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை 91 மேலதிக வாக்குகளால் அவர் வெற்றி கண்டார். அப்போது அவருக்கு சார்பாக 151 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. எதிராக 57 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

ரணில் விக்ரமசிங்க அப்போது அதிக வாக்குகளினால் வெற்றி பெறுவதற்குக் காரணம் அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இருந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததனாலாகும். ஆனால் தற்போது இருப்பது 2015 இல் இருந்த அரசியல் சூழ்நிலையல்ல. ரணிலுக்கு பிரதமர் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி முதலாவது கூறியது ஜனாதிபதி மைத்திரிபாலவாகும். அதனால் தனது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வாக்களிக்கும் படி சுதந்திரக் கட்சியிடம் கேட்கும் சந்தர்ப்பமும் இல்லை. இம்முறை ரணிலுக்கு எதிராக திரும்பாவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இருப்பு கேள்விக்குறிதான்.

அடுத்துள்ள பிரச்சினை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் இல்லாமல் ரணிலால் நம்பிக்கையில்லாப் பிரேரனையை வெற்றிகொள்ளமுடியுமா? என்பது தான். அதற்கான விடையிருப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கையிலாகும்.

பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் தொகை 225 ஆகும். 2015 தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை எந்தக் கட்சியும் பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது ஐக்கிய தேசிய முன்னணியாகும். அத்தொகை 106 ஆகும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 95 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தது 16 ஆசனங்களாகும். மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு 1 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டதோடு, ஈ.பி.டி.பி கட்சியும் 1 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டாலும் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். காரணம் கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே பல இடங்களில் போட்டியிட்டன. தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளாகும். எனவே மேற்படி தனித்துப் போட்டியிட்டு பெற்றுக் கொண்ட ஓர் ஆசனமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாரும். அவ்வாறு பார்க்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 107 ஆகும்.

தற்போதுள்ள நிலவரப்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 95 பேரில் 54 பேர் இருப்பது மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக தற்போது 41 உறுப்பினர்களே உள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு ரணிலுக்கு எதிராக வாக்களிப்பதே. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்தால் 101 உறுப்பினர்களே உள்ளனர். இருப்பினும் இவ்விரண்டு கட்சிகள் மாத்திரம் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ளமுடியும் என்று ஊகிக்க முடியாது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அமைதியான போக்கையே கடைப்பிடிக்கின்றது. இருப்பினும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு கட்சியான ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்லஸ் தேவானந்தா மஹிந்தவின் பக்கமே சார்ந்துள்ளார். அவ்வாறு பார்க்கும் போது அவரின் வாக்கு ரணிலுக்கு எதிரானதாகவே இருக்கும். இவ்வாக்கும் ரணிலுக்கு எதிராகத் திரும்பும் போது ரணிலுக்கு எதிரான மொத்த வாக்குகள் 102 ஆக உயரும் என ஊகிக்கலாம்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளே தற்போது ரணிலின் விதியைத் தீர்மானிப்பதா அமையும். அதாவது தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஓர் உறுப்பினரோடு ஐக்கிய தேசியக் கட்சியின் மொத்த உறுப்பினர்களின் தொகை 107 ஆகும். அதில் சரியாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 82 பேரே உள்ளனர். ஏனைய 24 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட கூட்டாளிக் கட்சிகளே. அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சக கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன், திகாம்பரம், சதுர சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் அந்த 24 இல் அடங்குகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 82 பேரில் சபாநாயகரும் உள்ளடங்குகின்றார். பாராளுமன்ற சம்பிரதாயத்தின்படி சபாநாயகர் பொதுவானவரே. அவர் பக்கச்சார்பாக செயற்பட முடியாது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விஜயதாச ராஜபக்ஷவும் தற்போது அரசுடன் முரண்பாடான ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளார். அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் தெரிவான அதுரலிய ரதன தேரரும் தற்போது அரசாங்கத்துடன்முரண்பட்டே உள்ளார். மேலும் சதுர சேனாரத்னவும், தற்போதைய முறைமை மாற்றப்பட வேண்டும் என்ற கொள்கையுடனே உள்ளார்.

அவ்வாறு கருஜயசூரிய, சதுர சேனாரத்ன, ரதன தேரர், விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்டோரின் வாக்குகளைக் குறைத்துப் பார்க்கும்போது ரணிலுக்கு ஆதரவாகக் கிடைப்பது 103 வாக்குகளே.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் உட்கட்சிக்குள் சில முறுகல் நிலைகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலஅமைச்சர்கள், உறுப்பினர்கள் பகிரங்கமாகவே தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்று அண்மையில் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தனர். வசந்த சேனாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் இவ்விடயத்தில் மும்முரமாக நின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கருத்துப்படி சரியான தருணம் வரும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்காளிப்பார்கள் என்பதாகும்.

எனவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கணக்குப்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர்கள் வெற்றிகொள்வது உறுதி என்பது அவர்களது அனுமானமாகும். இந்த அனுமானமானது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் போடப்பட்ட கணக்காகும்.

இவ்வாறிருக்க சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் தற்போதைய கருத்துக்களின்படி அவரின் நிலைப்பாடு ரணிலுக்கு ஆதரவாக உள்ளதாகவே தெரிகிறது. அவரோடு மேலும் ஒரு சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிய வருகிறது.

எது எப்படியோ நம்பிக்கையில்லாப் பிரேரணையானது கத்தி மேல் நடப்பது போன்ற நிலையில்தான் உள்ளது. தற்போது பலதரப்பட்ட கருத்துக்கள் பல கோணங்களில் விசிறப்பட்டாலும் இறுதித்தீர்மானம் எட்டப்படுவது இறுதித் தருணத்தில் பெறப்படும் வாக்குகளின் அடிப்படையிலாகும். அதனடிப்படையில் ரணிலின் விதி தீர்மானிக்கப்படுவது ஏப்ரல் நான்காம் திகதியாகும்.

No comments:

Post a Comment