Saturday, February 17, 2018

சாய்ந்தமருதுக்கான சமாதானத் தூதுவர்! ஆடு நனைவதாக கண்ணீர் விட்டதாம் ஓநாய்! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சாய்ந்தமருதுவில் சுயேச்சையாகப் (தோடம்பழச் சின்னம்) போட்டியிட்டு வெற்றியீட்டிய அணியினரை இணைத்து கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைக்க வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கான பதிலை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கியிருந்தது. அதாவது, அமைச்சரின் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது நடந்து முடிந்த விடயம்.

ஆனால், இப்போது, அதே கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் இருதரப்பு சமரசவாதியாக செயற்பட்டு சாய்ந்தமருது சயேச்சைக் குழுவுடன் கலந்துரையாடி இந்த விடயத்தில் இணக்கப்பாட்டைக் கொண்டுவர அவர் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காமடி பண்ணுவதிலும் மற்றவர்களுக்கு நகைச்சுவை விருந்து படைப்பதிலும் மிகச் சிறந்த ஆளுமை கொண்டவர் அலிசாகிர் மௌலானா அவர்கள்.

கட்சியின் தலைமையின் கோரிக்கையையே சாய்ந்தமருது மக்கள் நிராகரித்துள்ள நிலையில் இவரது சமரசம் என்பது திண்டுக்கல் லியோனியின் நகைச் சுவையையும் மிஞ்சி விட்டதாகவே கருதலாம்

அலிசாகிர் மௌலானாவின் இந்த அறிவிப்பானது, எனக்கு பாசிக்குடா ஹோட்டலில் இடம்பெற்ற வாக்குவாதத்தையும் ஏறாவூரில் இரண்டாகப் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டதனையுமே நினைவுக்கு கொண்டு வந்தது.

ஆசனங்கள் அல்லது வட்டாரங்களில் அதிக ஒதுக்கீடு தேவை என்பதற்காக ஒரே கட்சியை சேர்ந்த இருவர், யானை, தராசு சின்னங்களில் வேட்பாளர்களை நிறுத்தி குறித்த கட்சியின் மொத்தப் பலத்தையும் இரண்டாகக் கூறு போட்டு பலவீனப்படுத்துவதில் ஒருவராகத் திகழ்ந்த அலி சாகிர் மௌலானா இப்போது முஸ்லிம் காங்கிரஸையும் சாய்ந்தமருது மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை முன்னெடுக்கப் போவதாக கூறியிருப்பதானது கடி ஜோக்.

எங்களது சாய்ந்தமருது மக்கள் ஏற்கனவே தங்களது நிலைப்பாட்டை அறிவித்து விட்டனர். ஆகவே, எவரது மத்தியஸ்தமோ சமரசமோ அந்த மக்களுக்குத் தேவையில்லை என நான் கருதுகிறேன்.

எங்களது மண்ணின் மைந்தர்களான அப்பாவிச் சிறுவர்கள் கூட கிரிமினல்களாகக் காட்டப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்ட போது கூட, தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு சரணாகதி அரசியலுக்குச் செல்லாதவர்கள் அந்த மக்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் கூட தங்களது பிள்ளைகளைப் பிடித்து விட்டார்களே என்று ஏக்கமடைந்து துயரம் கொள்ளாது, எங்களது பிள்ளைகள் சிறைப்பிடிக்கப்பட்டதால் எங்கள் மண்ணுக்கான போராட்டம் மங்கிவிடுமோ என்ற கவலையை மட்டுமே அவர்கள் சுமந்திருந்தார்.

கடைகளை மூடியும் தொழில்களைக் கைவிட்டும் சுட்டெரிக்கும் வெயிலில் சுடு மணலிலும் வீதிகளிலும் குந்திக் கிடந்து போராட்டம் நடத்திய எங்கள் தியாகச் செம்மல்கள் மேயர் பதவிக்காகவோ ஆட்சி அதிகார அந்தஸ்துக்காகவோ சோரம் போகமாட்டார்கள் என்பதனை அலி சாகிர் மௌலானா புரிந்து கொள்ள வேண்டும்.

எனது மண்ணின் மைந்தர்கள் நடத்திய போராட்டங்கள் வெறும் அரசியலுக்கு மட்டுமானதல்ல… அது அவர்களின் உரிமைக்கான ஒற்றுமைப் போராட்டம். தியாகத்தால் வென்றெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை ஒரு போதும் அவர்கள் யாருக்கும் தாரை வார்க்கப் போவதில்லை.

எங்களுக்குத் தேவை எங்களை நாங்களே ஆளும் உள்ளூராட்சி சபை ஒன்றே. அதற்காகவே பேராடினோம்... போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான எங்களது ஒற்றுமையின் வலிமையை எங்களது வலிகளை இன்று உலகறியச் செய்து விட்டோம். எங்களது கோரிக்கை நியாயமானது என்பதனைப் பலரும் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், உங்களுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றைப் பெற்றுத் தருகிறோம், மேயர் பதவி தருகிறோம் என்றெல்லாம் கூறினாலும் அதனை ஏற்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஏனெனில், எதிர்காலத்தில் எங்களுக்கென்று ஓர் உள்ளூராட்சி சபை கிடைத்தால் அது எங்களது போராட்டத்தால், தியாகத்தால் கிடைத்ததாகவே கருதப்படுமே தவிர, எந்த அரசியல் கட்சியாலும் கிடைக்கப் பெற்றதாக கூற முடியாது.

எங்களுக்கான உள்ளூராட்சி மன்றத்தை தங்கத் தட்டில் வைத்துத் தர வேண்டுமே தவிர, தகரத் தட்டில் வைத்து அல்ல என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

அலிசாகிர் மௌலானா அவர்களே!, எங்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் கடந்த காலத்தில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கவிருந்த நிலையில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் வெளிப்பைடையாகவே முன்னெடுக்கப்பட்ட போது நீங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு சமரசம் செய்திருக்க வேண்டுமல்லவா? எங்களது உரிமைகளை மதித்து அதனைப் பெற்றுத்த தர முயற்சித்திருக்கலாம் அல்லவா? ஏன் அன்று மௌனம் சாதித்தீர்கள்? இதற்கான பதிலை முதலில் நீங்கள் கூறுங்கள்.

இறுதியாக “எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை“ என லியோ டால்ஸ்டாய் கூறியதனை உங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ஆடு நனைவதாக ஓநாய் கண்ணீர் விடும் கதைதான் போங்க……
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

No comments:

Post a Comment