அதிபர் ட்ரம்ப்- எப்பிஐ மோதல் முற்றுகிறது.
அமெரிக்க புலனாய்வு போலீஸ் பிரிவான எப்பிஐ அமைப்புக்கு எதிராக அந்த நாட்டு அரசு தரப்பில் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப், எப்பிஐ அமைப்பு இடையிலான மோதல் முற்றியுள்ளது.
கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்பை வெற்றி பெறச் செய்ய ரஷ்ய உளவு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து எப்பிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பிறகும் இவ் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய அரசு தரப்பு தீவிர முயற்சி செய்வதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாணை வெளியீடு
அமெரிக்க உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டி கண்காணித்து வருகிறது. இதன் தலைவராக ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டெவின் நூன்ஸ் உள்ளார். எப்பிஐ போலீஸாருக்கு எதிராக நேற்றுமுன்தினம் அவர் குறிப்பாணையை (மெமோ) வெளியிட்டார்.
அதில், “டொனால்டு ட்ரம்பின் பிரச்சார குழுத் தலைவர் கார்ட்டர் பேஜை எப்பிஐ உளவு பார்த்தது. அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. இதற்காக ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தை ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை பறிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பாணை மூலம் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசன்டைன், ரஷ்ய தலையீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் எப்பிஐ முன்னாள் இயக்குநரும் சிறப்பு அதிகாரியுமான ராபர்ட் முல்லர் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறிப்பாணை வெளியிட்டதற்கு எப்பிஐ மற்றும் நீதித்துறை வட்டாரங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. எப்பிஐ போலீஸாரின் நம்பகத்தன்மையை அரசு கேலிக்கூத்தாக்கி இருப்பது வேதனையளிக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியில் உறுப்பினராக உள்ள ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஆடம் கூறியிருப்பதாவது: எப்பிஐ விசாரணை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.
அந்த மரபை மீறி அரசு செயல்படுகிறது. குறிப்பாணையை வெளியிட்டு எப்பிஐ அமைப்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்களை குழப்ப அரசு முயற்சி செய்கிறது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான விசாரணையை முடக்க சதி செய்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
0 comments :
Post a Comment