நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 3) வ.அழகலிங்கம்.
நாட்டின் செல்வம் யாருக்கு உடைமை என்பதே அரசாங்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அரசியல் அறிக்கைகள் கூறுகின்றன. நாடு ஒரு தனிமனிதனின் உடமை என்றால் அது முடியாட்சி. நாடு பிரபுக்களுக்குச் சொந்தமானதென்றால் என்றால் அது பிரபுத்துவ ஆட்சி. ஆளும் சிறிய நிர்வாகக்குழு நாட்டின்பெரும்பான்மைச் செல்வங்களை அபகரித்து வைத்திருந்தால் அது ஒரு குறுங்குழு ஆட்சி(ஒலிகாய்ச்சி). மக்கள் அனைவருக்கும் உடமை என்றால் அது மக்கள் பொது உரிமை ஆட்சி. இந்த விளக்கத்தின் படி கம்பன் காட்டிய அரசை முடியாட்சி என்று கூறமுடியாது. பூவலயம் இன்று தனி அன்று, பொது என்று அவன் நாட்டையும், அதன்செல்வங்களையும் மக்களின் பொதுவுரிமையாக்குகிறான். இதனை மக்கள் பொதுவுரிமை அரசு என்று கூறுவதே பொருத்மானதாகும்.
இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி:
'பாவமும் அருந் துயரும் வேர் பறியும் என்பார்;
பூவலயம் இன்று தனி அன்று பொது என்பார்;
தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும் என்பார்;
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?',, என்பார்.
இராமன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர். இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர் (இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.
பூவலயம் இன்று தனி அன்று பொது(1592) என்று கம்பன் கூறி மகிழ்ந்த இந்த வாக்கியம் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டியது போல அக்காலத் தமிழரின் அரசியற் கோட்பாடு அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதுவே அவன் கோட்பாடு அனைத்துக்கும் அடிப்படை. இதுவே அவன் கோட்பாட்டின் மூல வாக்கியம். இந்த மூலத்திற்கே நாம் மீண்டும் போக வேண்டும். அப்பொழுதுதான் விமோசனமோ விடுதலையோ கிடைத்ததாகும். பொது உடைமை விரோதிகள் கடைகெட்ட மக்கள் விரோதிகள். ஊரைக் கொள்ளையடித்து உலைமூடியால் மூடுபவர்கள். அரசியல்வாதிகளின் கொள்ளையடித்த காசுகளைப் போடுவதற்கென்றே வங்கிளை உருவாக்கி வைத்திருப்பது ஷபனாமாப்| பத்திரம் ஷபரடைஸ்| பத்திரம் என்று நாளாந்தம் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜேர்மனியைப் பிஸ்மார்க் ஆட்சி செய்த காலத்தில் ஜேர்மனி ஒன்றிணைக்கப்டாமல் சிறு சிறு சிற்றரசுகளாக இருந்தது. சிற்றரசர்கள் இடையிடையே கூடி மனங்கலப்பார்கள். ஒருமுறை இந்த ஒன்றுகூடலின்போது ஓர் அரசன் சொன்னான் நான் 25 அறைகளையுடைய ஒரு மாளிகையை வைத்திருக்கிறேன். மற்றொருவன் சொன்னான் நான் எதிரகளால் உடைக்க முடியாத கோட்டையை வைத்துள்ளேன். மற்றொரு அரசன் சொன்னான் நான் எந்தக் கோட்டையையும் உடைக்கைக் கூடிய பீரங்கிகளை வைத்திருக்கிறேன். இப்படியே எல்லாரும் தாங்கள் வைத்திருப்பவைகளைப் கூறிமுடிந்தபின் தென்மாநிலத்தைச் சேர்ந்த ஷசுவாபன|; என்ற வறிய நாட்டைச் சேர்ந்த சிற்றரசன் ஒன்றும் பேசாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்தான். நீயும் ஏதாவது சொல்லேன். நீயும் உன் நாட்டைப்போல் ஏழையாகி விட்டாயோ என்று நக்கலும் நையாண்டியும் செய்து கல கலவென்று சிரித்தார்கள். அந்தச் சிற்றரசன் எழுந்து நிதானமாக அடிக்குரலில் 'நான் எந்நாட்டிலுள்ள எந்த வீட்டிற்குப் போனாலும் என்னை அவர்கள் தங்கள் மடியிலே உறங்க வைப்பார்கள். அவர்களது உரிமையின் பாத்திரவாளி நான். நான் என்னை இழந்து அவர்களின் இதயத்தை வென்று வைத்திருக்கிறேன். அவர்களது கண்ணீரைப் பாராது நான் சாகவேண்டும். இதுதான் எனது இலட்சியம்||
இந்தக் கதை ஷசுவாபன்| நாட்டுப் பாடப் புத்தகங்களில் இப்பொழுதும் வந்து கொண்டிருக்கின்றது. இதன் பலாபலானால் இந்த மாநிலம் ஜேர்மனியின் முக்கிய தொழில் நகரமாக இன்று திகழ்கிறது. இங்கேதான் ஜன்ஸ்டையின் பிறந்தார்.
நாடு தனியொருவனுக்கு உடைமையான தல்ல. மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்து குடியாட்சிக் கொள்கை பரவிய இக்காலத்தில் சாதாரணமாகத் தெரியலாம். கம்பன் இதைக் கூறிய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் மகத்துவம் புரியும்.
ஆள்பவன் ஆண்டவனுடைய அம்சம். நாடும் மக்களும் அவனுடைய உடைமைகள் என்ற கோட்பாடு கோலோச்சிய நாட்டிலும் காலத்திலும் அவன் இதைக் கூறினான்.
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெகுடை நிழற்றிய ஒருமையோர் (புறநாநூறு.189)
என்றும்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொது சொல் பொறாஅது
கடந்தடு தானைச் சேரலாதன்( புறநாநூறு.8)
என்றும்
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்(புறநாநூறு.51)
என்றும் 'பொது|| என்ற சொல்லைப் பொறுக்க முடியாத மாமன்னர்களின் ஏகாதிபத்தியத்தைப் புலவர்கள் புகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஷபூவலயம் இன்று தனி அன்று, பொது| என்ற கருத்து உதிப்பது வியப்பக்குரியது மட்டுமல்ல, புரட்சிகரமானது. காலவுணர்வுக்கு மாறாக இப்படிக் கூற வேண்டுமென்றால் ஒருவனுக்கு மனிதாபிமானமமும், உண்மை அறிவும், பரஞானமும, தூரப்பார்வையும், தீர்க்கதரிசனமும், புரட்சி மனப்பான்மையும் வேண்டும். கம்பனுக்கு இவை எல்லாம் இருந்தன. கம்பனுக்குப் பின்னாலும் கூட இந்தக் கருத்தையாரும் எடுத்தாளாதது அவனது தனித்துவத்தையே காட்டுகிறது. இது கவிதை ஆவேசத்தில் தெறித்த தற்செயலான கருத்து எனக் கூற முடியாதவாறு கம்பன் மீண்டும் மீண்டும் பல இடங்களில் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றான்.
'கம்பன் கோன் நிகர் குடிகள்,,(126) என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். இதன் மூலம் மக்கள் இறையாண்மையில் சமமான பங்குடையவர் என்பதைத் தெரிவிக்கிறான்.
'காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்,, (அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:386)
காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்திக் கூறுவர்.
இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.
முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆகிய அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்திக் கூறும். உலகில் முறை வேண்டியவர்களும் வலியவரால் நலிவு எய்தினவர்களும், குறைகூற வேண்டியவர்களும், வறுமையுற்று இருந்தவர்களும் காண்டற்கு இலகுவாக ஆட்சியாளன் இருக்க வேண்டும்.
குடிமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாடாள்வோன் அக்கறை செலுத்தவேண்டும். நாட்டுத்தலைவன் என்ற எண்ணத்தால் செருக்குற்று குடிகளிடமிருந்து விலகி இருக்கும் தலைவனிடம் அவர்கள் குறைகளைக் கூறமுடியாத நிலை இருந்தால் அவனால் நாட்டின் உண்மையான நிலையை அறிய முடியாமல் போய்விடும். சிடுசிடுக்கும் குணம் கொண்டவர்களிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்துவதில் எவருக்கும் பயம் ஏற்படும். அந்த அச்சத்தால் சொல்ல வந்த கருத்தையும் சொல்லாமலே விரைந்து வெளியேறி விடுவார்கள். அதனால் தலைவனுக்கும் நாட்டுக்குமே கூட நெருக்கடி ஏற்படலாம்.
மக்களுக்குப் பயப்படுகிற அரசாட்சியே ஜனநாயகம். மக்கள் அரசுக்குப் பயந்து வாழ்வார்களேயானால் அது ஒரு சர்வாதிகார ஆட்சியாகும். இதுவே ஆதிகால றோமர்களின் அரசியற்கோட்பாடு.
'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு...
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் மக்களைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட மக்கள் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.
நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.
ஒளவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,
மக்கள் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறார்களோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.
பசியும்,பிணியும், பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி என்கிறது சிலம்பு.
பசியால் வாடாமல் இருக்க அறம் தழைத்து, மழை பொய்க்காது, உழவு சிறந்து, விளைச்சல் பெருகியிருக்கவேண்டும். முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்கள் மக்களின் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படுவது. அத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டோர் வாழாத நாடாக இருக்கவேண்டும். நல்ல அமைச்சர்களும், அரசனும், அரசனுக்குப் பின்னால் வரும் சிறந்த குடிமக்களும், உறுதியுடன் உடனிருப்பதால் கொல்லுகின்ற எத்தகைய பகையும் வெல்லமுடியாததாக இருக்கவேண்டும். இதையே சிலப்பதிகார வரிகளும் 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' (சிலம்பு:5:72-3) என்கிறது. சீவக சிந்தாமணியும், 'பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையுமென்ன' (சீவக:2375) என்கிறது.
'ஒன்றுடன் பதினை யாண்டைக்கு உறுகடன் இசைவன் விட்டான்
இன்றுளீர் உலகத் தென்றும் உடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையும் என்ன
மன்றல மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்த தன்றே,,.-(2375)
மன்னன் சீவகன் இன்று முதல் பதினாறு ஆண்டுகளுக்கு உரிய வரிகளை நீக்கிவிட்டான். இன்றுபோல் நீங்கள் என்றும் உலகத்துடன் ஒட்டி வாழ்வீராக. மக்களைத் துன்புறுத்தும் பசியும், பிணியும், பொருந்தாத பகையும் நீங்குக என்று அப்பொழுது மணம் கமழும் இராசமாபுரத்தின் வீதிகள் தோறும் அழகிய முரசம் முழங்கியது.
'நோக்கொழிந்து ஒடுங்கின் ஈர்க்கும் நோய்கொளச் சாம்பின் ஈர்க்கும்
பூக்குழல் மகளிர் கொண்டான் புறக்கணித் தடப்பட் டீக்கம்
கோத்தரு நிதியம் வாழக் கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழுநகர் அறைவித்தானே.-(2376)
மேலும், 'கண்பார்வை இழந்து மெலிந்தவர்க்கும், நோயுற்று மனம் தளர்ந்வர்க்கும், மலர்க் கூந்தலுடைய பரத்தையிரிடம் கொண்ட வேட்கையாலே கணவனால் புறக்கணிக்கப்பட்ட மனைவியர்க்கும் வாழ்வுக்குரிய வீடும், இடையறாப் பெருஞ்செல்வமும் மன்னவன் நல்குவான்.. என்று அந்தச் சிறந்த நகரிலே இழுத்துக் கட்டப்பட்ட வாரையுடைய முரசினை அறைந்து அறிவித்தான்.
மக்கள் இன்பத்தோடு வாழ்தல்
'திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத்து உறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல உளமகிழ்ந்து ஒளியின் வைகிப்
பருவரு பகையும் நோயும் பசியும்கெட்டு ஒழிய இப்பால்
பெருவிறல் வேந்தர் வேந்தற் குற்றது பேச லுற்றேன்...-(2377)
இவ்வாறு மாமன்னன் அருள, அவன் நாட்டு மக்கள் துன்பத்தைத் தரும் பகை, நோய், பசி ஆகியன தொலைய, ஒருவனுக்கு ஒருத்தி என மனமகிழ்ந்து புகழுடன் வாழ்ந்து வந்தனர். இனி, பேராற்றல் மிக்க மன்னர் மன்னனான சீவனுக்கு நேர்ந்ததைக் கூறத் தொடங்கினான்.
சமூகநலம் பேணும் ஆட்சியின் இன்றியமையாத தன்மையைத் தமிழர் தொன்று தொட்டே உணர்ந்து இருந்தனர்.
'பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.,, (குறள் 732: நாடு அதிகாரம்)
நல்ல நாடு என மதிக்கப்பெறும் நாடொன்று மிகுந்த செல்வ வளம் பெற்று, அதனால் பிறநாட்டு மக்களும் புலம் பெயர்ந்து குடியமர வருவதற்கு விழையும் நாடாகவும், கேடு என்பதே அரிதாகி இல்லாமல் ஒழிந்து, உற்பத்திப் பொருட்களால் நிரம்பி சிறந்ததாகவும் இருப்பதேயாம்.
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.,,
(குறள் 738: நாடு அதிகாரம்)
பிணியின்மை – நோயின்மை
செல்வம் – ஆக்கம், பொருளுடைமை
விளைவு – செழிப்பான விவசாயமும், விளைச்சலும்
இன்பம் – மகிழ்ச்சி
ஏமம் – பாதுகாப்பான காவல்
அணியென்ப – அணிகலம் போன்றன
நாட்டிவ் வைந்து – ஒரு நாட்டுக்கு இந்த ஐந்தும்
நோயற்ற மக்களும், ஆக்கமாகியச் செல்வச் செழிப்பும், மக்களின் உணவுத் தேவைகளை நிறைவுசெய்யும் மிகுந்த விளைச்சலும், மக்கள் பொதுவாக மகிழ்ச்சியுடன் இருப்பதும், பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதும் ஆகிய இவ்வைந்துமே ஒரு நாட்டுக்கு அணி அல்லது அழகு செய்வதாக நூல் வல்லோர்கள் கருதுவர் என்கிறது இவ்வெளிய குறள்.
'சர்வாதிகாரிகள் படைப்பாளிகள் அல்ல. அவர்களே படைக்கப் பட்டவர்கள். பற்றாக்குறைப் பொருளாதாரம்தான் சர்வாதிகாரிகளைப் படைக்கிறது என்று கார்ல் மாக்ஸ் 18 ஆம் புறுமேயர் என்ற புத்தக்த்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பற்றாக்குறைப் பொருளாதாரம் நிலவினால் மக்களின் ஒரு பகுதியனருக்கு வஞ்சகம் செய்ய வேண்டிவரும். அவர்களைத் திருப்திப்படுத்தி ஆளமுடியாது. அவர்கள் தேவைப் பொருட்கள் போதும் போதுமென்ற அளவுக்கு உற்பத்தி செய்யும் மட்டத்திற்குத் தொழில் நுட்பமும் விஞ்ஞானமும் வளாந்தால் மாத்திரம்தான் பொதுஉடைமைச் சமுதாயம் வரும் என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனப் படுத்தியுள்ளார். அதுவும் உலகமேடையில் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதை அடித்துக் கூறியுள்ளார். குண்டான் சட்டிக்குள் குதிரைவிட்டுக்கொண்டு பொதுவுடமை பேச இயலாது.
பொருளியல் என்பது பற்றாமையை நிர்வகிப்பது, பற்றாப் பயன்பொருள்களைப் பகிர்வது, பரிவர்த்தனை செய்வது என்றே அர்த்தப் படுத்தும். மறக்குல மகளிர் மன்னனை வாழ்த்தும்போது பெருநில மன்னன் ஆளும் நாடு முழுவதும் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரப்பதாக என்று சாமியாடிக்கொண்டு கூறுவதாக ' பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' என்று நாட்டு வளத்தையும் மக்கள் நலனையும் இணைத்துக் குறிப்பிட்டுப் பாடுகிறார், இளங்கோவடிகள். இந்தப் பாடல் அடிகள், இளங்கோவடிகளின் மிக உயர்ந்த மனிதாபிமான தத்துவஞானக் கருத்தைக் குறிக்கிறது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பசி நீங்க வேண்டும். வயிறார அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். பிணிகள் நீங்கி மனித சமுதாயம் நல்வாழ்வு பெறவேண்டும். போர்கள் ஒழிந்து, பகைகள் நீங்கி, நாடுகளும் மக்களும் அமைதியான சேதமில்லாத வாழ்க்கையைப் பெறவேண்டும். மழை பொழிந்து, நீர்வளம் பெருகி, நாடு அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பது இளங்கோவடிகளின் சீரிய சிந்தனைகளாகும்.
ஒரு நாட்டில் இருக்க வேண்டுவனவற்றுள் தலையாயது தள்ளா விளையுள் ஆகும் எனக் கூறியதற்கு ஏற்ப, ஒரு நாட்டில் இருக்கக் கூடாதன வற்றுள் தலையாயது பசித்துன்பம் என்று கூறியுள்ளார்;. பசி வந்திடின் பகை வந்திடும். பகைக்குக் காரணம் பசியே ஆதலின், நாடு பகைப்பயம் அற்று வாழ வேண்டுமாயின் பசிநோய் அற்று வாழ வேண்டும்;. ஆகவே, முதற்கண் அகற்றப்பட வேண்டுவது பசிப் பேயே. ஆகவேதான்,
'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு'
என நாட்டிற்கு நலிவு தரும் நோய்களுள் பசி நோயை முதற்கண் கூறியுள்ளார் வள்ளுவர். 'பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' என வாழ்த்துக் கூறும் போதும், பசி நீங்கி வாழும் வாழ்வினையே முதற்கண் வைத்து வாழ்த்தியுள்ளார்கள் சிலம்பாசிரியர் அடிகளாரும், மேகலை ஆசிரியர் சாத்தனாரும். ஆகவே, பகை வளரக் காரணமாவது பசியே. பற்றாமையால் வந்துற்ற பசித் துன்பத்தைப் போக்கவே, பொருளென்னும் பிரிவில் அரசியலைத் திருவள்ளுவர் அமைத்திருக்கின்றார். அரசர்கள் தமக்குக் கிடைத்த அதிகாரம் பிறருக்கு நன்மைசெய்யும் பொருட்டே என்பதை அறிந்திருந்தார்கள். குடிகளுடைய நலத்தைத் தம் நலமாகக் கொண்டிருந்தார்கள். காவலன் கோல் கோடின் உலகு அழிந்துவிடும் என்பது அவர்கள் கொள்கை.
,,குடிபழி தூற்றுங் கோலோனாகுக.' என்கிறது புறநாநூறு.
'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
கவலன் காவான் எனின்.,, -(560)
காத்தற்குரிய காவலானான அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட உயிர்களைக் காப்பாற்றானாகில் அறம் இல்லாத அவன் நாட்டு உற்பத்தி சொய்யும் தொழிலைச் செய்பவர்கள் தங்களது தொழிற்கலையை மறந்து விடுவர்.
ஓர் அராஜக நாட்டில் பரம்பரம்பரையாக, வாழையடி வாழையாக வளர்ந்து வந்த உற்பத்தி நுட்பங்பளை மக்கள் மறந்துவிடுவர். நிர்வாகம் சீரற்ற நாட்டிலே முதலில் அழிவது தொழில்களாகும்.
அது என்ன 'அராஜகம்'?
அராஜகம் என்பது வடமொழிச் சொல். இந்தச் சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் அ-ராஜகம:; அதாவது அரசன் அற்ற நாடு அல்லது ஆட்சி அற்ற நிலமை. பிற்காலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெடும்போது ஏற்படும் குழப்ப நிலைக்கும் இதைப் பயன்படுத்தத் துவங்கினர்.
ஒரு நாட்டிற்கு அரசாட்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அரசன் இல்லாத நாடு எப்படிச் சீரழியும் என்றும் இந்தியர்கள் நன்கு கணக்குப் போட்டு வைத்தனர். வால்மீகி ராமயணத்தில் தசரதன் இறந்தவுடன் பரதனுக்கோ அல்லது இட்சவாகு வம்சத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருக்கோ உடனே முடிசூட்ட வேண்டும் என்று சொல்லும் இடத்து, அராஜகம் பற்றி நீண்ட சொற்பொழிவு வருகிறது..
இது மிகவும் படித்துச் சுவைக்க வேண்டிய பகுதி — .காரணம் என்னவென்னில் இதையே திருப்பிப் பார்த்தால், அரசன் நேர்மையாக ஆண்டால், என்ன என்ன கிடைக்கும் என்பதை ஊகித்து அறியலாம்.
தொடரும்...
முன்னைய பகுதிகளை தொடர்கட்டுரைகள் பகுதியில் காணலாம்...
0 comments :
Post a Comment