Monday, January 29, 2018

‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன்.

எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை!

தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவித நியாயபூர்வமான பதில்களும் கூறாமல் மறுதளிக்கும், இவர்களை நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமே உரிய,
ஆறாவது அறிவான சிந்திக்கும் திறனை இழந்த இவர்களும் பாவம்தான்! எத்தனை நாட்களுக்குத்தான் இல்லாதவற்றைச் சொல்லி என்னைத் திட்டித்தீர்ப்பது. அவர்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும்.

அதுமட்டுமா? கேட்பாரில்லாத சிந்திப்பாரில்லாத திருந்துவாரில்லாத, இந்தச் சமுதாயத்தை எத்தனை நாட்களுக்குத்தான் இடித்துரைப்பது என்று, எனக்கேகூட அலுத்துத்தான் போய்விட்டது. தீர்க்கதரிசனமற்ற தலைவர்கள், சிந்தனையில்லா மக்கள், புத்திசாலிகளான எதிரிகள் என, எம் இனத்தைச் சூழ்ந்து கிடக்கும் ஆபத்துக்களைப் பார்க்க, என்னாகப் போகிறதோ எம் இனம்? என்று மனம் பதறுகிறது. அந்த வருத்தத்தோடும் சிந்தனையோடும் படுக்கையில் கிடந்தேன்.

➤➤➤

‘ட்றிங்’ ‘ட்றிங்’ ‘ட்றிங்’……. திடீரென தொலைபேசி அழைத்தது. எதிர் முனையில் எனக்கு நெருக்கமான ஒரு ஊடக நண்பனின் குரல். ‘ஜெயராஜ் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது. உங்கள் கடிதத்தால் நம் தலைவர்கள், இன நன்மை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இனித் தமிழர்களுக்கு நல்லகாலம்தான்’ என்று பரபரத்தான் அவன். வழக்கமாக நிதானமாகப் பேசும் அவன் குரலில், புதிதாய்த் தெரிந்த பரபரப்பு ஆச்சரியப்படுத்த, ‘என்ன சுந்தர்? (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ன நடந்தது?’என்றேன். ‘என்ன நடந்ததா? பெரிய ஆச்சரியம் நடந்திருக்கிறது. நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லையா?’ என்று, செய்தி சொல்லாமல் என்னையும் பதற்றப்படுத்தினான்.

➤➤➤

‘சரியப்பா விஷயத்தைச் சொல்லாமல் இதென்ன பரபரப்பு’ என்று சினந்தேன். அவன் நிதானமாகச் சிரித்தபடி தொடர்ந்தான். ‘உண்மை அறிந்த உற்சாகத்தில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை, நீங்கள் சொன்னாற்போல நம் தலைவர்களெல்லாம் ஒன்றுபட்டு, இனப்பிரச்சினை பற்றி பேரினத்தாரோடு பேச முடிவுசெய்து விட்டார்கள். எதிர்காலத்தை மனதில் கொண்டு இனி செயல்படுவதென்று, மிக ஆச்சரியமாக அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.’ என்றான். நானும் சற்று ஆச்சரியத்துடன், ‘அதென்ன எதிர்காலத்திட்டம்?’என்றேன்.

➤➤➤

அவன் விபரித்ததைக் கேட்க எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. ‘நான் காண்பது என்ன கனவா? அல்லது நனவா?’ என்று, பழைய படமொன்றில் சிவாஜிகணேசன் ஒரு வசனம் பேசுவார். நண்பன் சொன்னதைக் கேட்டதும் அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது. என் எழுத்திற்கு இவ்வளவு சக்தியா? என்று மனம் மமதைகொள்ள முயல, ‘சீச்சீ’ அது சத்தியத்திற்கான சக்தி என்று புத்தி சொல்லிற்று. அப்படி என்ன அவன் சொன்னான் என்று கேட்கிறீர்களா? அந்த அதிசயத்தை ஏன் கேட்கிறீர்கள் போங்கள்! கடவுளின் பார்வை தமிழினத்தின்மேல் விழத் தொடங்கிவிட்டது போலும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அழைப்பின் பேரில், நம் தமிழ்த்தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடி, அற்புதமான சில முடிவுகளை எடுத்திருக்கிறார்களாம். அவர்கள் எடுத்த முடிவுகளை விபரமாய் நண்பன் சொன்னான். அவன் சொன்னவற்றை இங்கே எழுதுகிறேன். பொறுமையாகப் படியுங்கள்!

➤➤➤

அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில்,
➧ தமிழரசுக்கட்சி.
➧ தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி
➧ தமிழ் காங்கிரஸ் கட்சி
➧ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
➧ தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சுரேஸ் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - வரதராஜப்பெருமாள் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
➧ ஜனநாயக போராளிகள் கட்சி

என்பவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனராம். ‘என்னது? தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியும், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், வரதராஜப் பெருமாளும் கூடவா அழைக்கப்பட்டனர்?’ என்று, ஆச்சரியத்துடன் நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ‘ஐயா பொதுமகனாரே! தயவு செய்து உங்கள் திருவாயைச் சற்று மூடுங்கள். என்னவோ ஏதோ! அவர்களும் தமிழ்மக்கள் பிரதிநிதிகளாய் அங்கீகரிக்கப்பட்டவர்கள்தானே. குற்றம் என்று பார்த்தால் மேற் சொன்ன எல்லாரிடமும் ஏதோ ஒரு குற்றத்தைச் சொல்லலாம்தானே. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்று நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். பிரிவுக்கான காரணம் தேடும் நேரமில்லை இது. உறவுக்கான காரணம் தேடும் நேரம். முதலில் எல்லோரும் ஒன்றுபடட்டும். தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றபின், மக்கள் மன்றில் அவரவர் தம்மை நிரூபித்துக் கொள்ளட்டும். ஒற்றுமையின் உன்னதத்தை அவர்களே விளங்க முற்படும் போது, பொதுமகனாராகிய நீர் தயவு செய்து அதைக் குழப்பாதேயும்’, ‘சரி சரி மேற்கொண்டு விடயத்தைச் சொல்லும் என்கிறீர்களா?’ இதோ உங்கள் உத்தரவுக்குப் பணிகிறேன்.

➤➤➤

அன்றைய கூட்டத்தில் மேற்படி கட்சியினர் ஒன்றிணைந்து, ஏகமனதாக சில முடிவுகளை எடுத்துள்ளார்களாம். நண்பன் சொன்ன அவர்தம் முடிவுகளைக் கீழே செய்திகளாய்த் தருகிறேன். ஆச்சரியத்தில் நீங்கள் மயங்கி விழும் வாய்ப்புண்டு. எதற்கும் ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

➤➤➤

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி நண்பன் சொன்ன விடயங்களைச் சுருக்கித் தருகிறேன்.

➧➧ முதலில் மேற்படி கட்சிகள் பத்தாண்டுகால அடிப்படையில் தமது கட்சிகளை கலைத்து விடுவதாய் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் கட்சிப் பிரிவுகள் இருக்குமாயின் எப்படியும் தத்தமது கட்சியின் வளர்ச்சி நோக்கியே தலைவர்கள் இயங்க முயற்சிப்பர். எனவேதான் இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகள் தத்தமது சொந்தக்கட்சிகளை கலைத்துவிடுவது எனும் முடிவு எடுக்கப்பட்டதாம்.

➧➧ அடுத்ததாய், இனி ஒருவரையொருவர் ‘துரோகிகள்’ என்று குற்றம் சாட்டுவதில்லை என தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனராம். முடிந்த வரலாற்றுப்பாதையில் எல்லாக் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருப்பது நிதர்சனமாகும். சந்தர்ப்பத்திற்கேற்ப தத்தம் குற்றங்களை மறைத்து மற்றவர்களது குற்றங்களை விரிவித்து சுயலாபம் காணும் எண்ணம் இருந்தால் கட்சிகளுக்கிடையிலான பகையுணர்வு நிலைத்தே நிற்கும். எனவேதான் மற்றவர் குற்றத்தில் தத்தமது தகுதியை நிரூபிக்க முயலாமல் பழைய வரலாறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாய் இருப்பதற்காயும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

➧➧ தத்தமது கட்சியின் வளர்ச்சி அடிப்படையிலன்றி இனவளர்ச்சி அடிப்படையில் ஒருமித்துச் செயல்படுவதாகவும், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தத்தம் கட்சிக்கு வாய்ப்பாகச் செயற்பட முனைவதில்லை எனவும் தமது கட்சி ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் கூட கட்சி மனப்பான்மையிலிருந்து வெளிவரச் செய்து இனநலன் நோக்கி ஒருமித்து இயங்கச் செய்வது எனவும் தலைவர்கள் உறுதி பூண்டனர். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்புக்கள் பெயரளவில் கூட்டமைப்புக்களாய் இருந்தனவேயன்றி இனநலன் நோக்கிய ஒருமைப்பாட்டுணர்வோடு அவை இயங்கவில்லை. அந்த ஆபத்து தொடராமல் இருக்கவே தலைவர்கள் அனைவரும் மேற்படி உறுதியைப் பூண்டுள்ளனராம்.

➧➧ ‘தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என இக்கூட்டமைப்புக்குப் பெயரிடுவது எனவும் தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்துமுகமாகவும், அவர்கள் தம் வாழ்வொளியைக் காக்க ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதைக் குறிக்குமுகமாகவும் பல கைகள் ஒன்றிணைந்து ஒரு ஜோதியை காப்பதான சின்னத்தை இக் கூட்டமைப்பின் சின்னமாக ஏற்றுக்கொள்வது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்துள்ளனராம்.

➧➧ இவ்வமைப்புக்கான தலைமையகக் கட்டிடத்தை வடக்கு, கிழக்கு எனும் பிரிவு ஏற்படாவண்ணம் இரு பிரதேசங்களுக்கும் பொதுவான ஒரு இடத்தில் தமிழர்தம் பாரம்பரியத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நம் கலாசார முறைப்படி பிரமாண்டமாக அமைப்பதென்றும் முடிவு செய்தனராம்.

➧➧ இவ்வமைப்புக்கான உறுப்பினர் படிவங்கள் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது எனவும் மாதந்தோறும் இவ்வுறுப்பினர் எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்காணிப்பது எனவும்  வருடத்தில் ஒருதரம் அத்தனை உறுப்பினர்களையும் ஒரு பொது இடத்தில் திரட்டிப் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவது எனவும் அப் பொதுக்கூட்டத்திற்கு இலங்கையில் இருக்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் விருந்தினர்களாய் அழைப்பதோடு ஒரு வெளிநாட்டுத் தலைவரை சிறப்பு விருந்தினராகவும் அழைப்பித்து நம் இனஒற்றுமைப்பலத்தை உலகறியச் செய்வதெனவும் தலைவர்கள் முடிவு செய்தார்களாம். நமது தாயகத்தில் இன்று இருபத்திரண்டு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாகவும் அவர்களுள் பதினைந்து இலட்சம் பேர் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும்; புலம்பெயர் நாடுகளில் எட்டரை இலட்சம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. (2012 கணக்கெடுப்புப்படி) இப்புதிய கூட்டமைப்பை ஆரம்பித்து ஒரு வருட எல்லைக்குள் நம் தாயகத்தில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் புலம்பெயர் நாடுகளில் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் இக்கூட்டமைப்பின் உறுப்பினர்களாக்குவது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்தனராம்.

➧➧ அரசியல் சார்ந்து வரும் பதவிகளை வழங்குவதில் தகுதிக்கு முதலிடம் கொடுத்த பின்பு அத்தகுதி பெற்ற, இனவளர்ச்சிக்கு உண்மையாய்ப் பாடுபடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குவது என்றும், அச்செயல் மூலம் இனநலன் நோக்கி இயங்குவோரை ஊக்குவிப்பது என்றும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாம்.

➧➧ மேற்படி கூட்டமைப்புக்கென பெரிய அளவிளான நிதித்தளம் ஒன்றை உருவாக்குதல் அவசியம் என்பதால் மாதந்தோறும் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் உறுப்பினர்களால் திரட்டப்படும்  நிதியை, ‘ஈழத் தமிழர் நல்வாழ்வு நிதியம்’ என்னும் பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அந்நிதியத்தில் அதனைச் சேமித்து  தமிழ்ப் பிரதேசங்களின் அவசியமான மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அந்நிதியைப் பயன்படுத்துவது எனவும் தலைவர்கள் முடிவெடுத்தனராம்.

➧➧ மேற்படி அமைப்புக்காக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பதான ஊடக அமைப்புக்களை உருவாக்குவது எனவும் அதன் மூலம் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி, எதிர்ப்பரப்புதல் செய்வோரை முறியடித்து வெற்றி கொள்வதெனவும் தமது ஊடக பலம் கொண்டு கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைவோரைப் புறந்தள்ளி செயல்படுவதெனவும் அவ் ஊடகங்களின் மூலம் மாற்றினத்தாரும் தமிழர்தம் நியாயபூர்வமான கோரிக்கைகளை அறியும் வண்ணம் பரப்புதல் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டதாம்.

➤➤➤

‘என்னையா பொதுமகனாரே! இந்த விழி விழிக்கிறீர்கள். கவனம் விழி வெளியே விழுந்துவிடப்போகிறது! நம் தலைவர்களின் இனநலன் நோக்கிய, இத்திடீர் மாற்றங்களைக் கேட்டால் யாருக்குத்தான் வியப்பு வராது.
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால், இனி நாங்கள் யாரைத்திட்டி இணையங்களில் எழுதுவது என்று யோசிக்கிறீர்கள் போல, யார் தப்புகிறார்களோ இல்லையோ நானும் கம்பனும் தப்பினோம். இவர்களை புலி கலைத்தது எலி கலைத்தது என்று, இனி நீங்கள் கற்பனைக் கதைகளை எழுத முடியாதாக்கும். பகைமையை ஒழிப்பதென்று தலைவர்களே முடிவு செய்தபிறகு, நீங்களும் பகையை ஒழித்துத்தானே ஆகவேண்டும்.

ஒற்றுமையை விடப் பகைதான் சுவையானது என்று நினைக்கிறீர்களோ? உங்களது இந்த மனநிலையால்த்தானே தலைவர்களும் பிரிந்து கிடந்தார்கள். இனியாவது திருந்த முயலுங்கள். எதற்கும் ஒரு ‘பிளேன்ரீ’ குடித்து நிதானித்த பின் வாருங்கள். இவ்வளவத்தோடு விஷயம் முடிந்து விடவில்லை. இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. என்ன அதற்குள் ‘ரீ’ குடித்துவிட்டீர்களா? அத்தனை ஆர்வமாக்கும்? சரிசரி மேலும் படியுங்கள்

➤➤➤

இதுவரை தன்னாதிக்கப் போட்டி போட்டுக்கொண்டிருந்த நம் தலைவர்கள், இனி அதிகாரங்களைப் பரவலாக்குவது என்று முடிவு செய்து, நிர்வாகத்தினுள் உண்மையான ஜனநாயக முறையைக் கொண்டு வரப்போகிறார்களாம். எத்துணை அதிசயமான செய்தி! முன்பு போல் தனிமனிதர்களிடம் அதிகாரங்களைக் குவிக்காமல், நிர்வாகப் பரவலாக்குதலுக்காக சரியான ஜனநாயக முறைப்படி, பதினைந்து சபைகளை அவர்கள் அமைக்கப்போகிறார்களாம்.

அந்த சபைகள் பற்றிய விபரங்களைக் கீழே தருகிறேன்.

➤➤➤


01. அரசியல் வழிகாட்டுனர் சபை

மேற்படி சபையில் அரசியல் அனுபவமிக்க மூத்த தலைவர்கள் அங்கத்தினர்களாய் நியமிக்கப்படுவார்களாம். இவர்கள் வேறேதும் பதவிகளை ஏற்காமல் தமது அரசியல் அனுபவங்களைக் கொண்டு மற்றைச் சபையினருக்கு வழிகாட்டுதல் செய்வதிலும் பிரச்சினைகள் உருவாகும் போது அவற்றை நிதானமாய்க் கையாள துணை புரிவதிலும் உதவி நிற்பராம். இச்சபையில்  தமிழினத்தின் உரிமைபற்றி அக்கறையுடைய பிற இனத்தலைவர்கள் ஓரிருவரும் இணைத்துக் கொள்ளப்படுவராம்.

02. பாராளுமன்ற உறுப்பினர் சபை

மேற்படி சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களாய் உள்ள அங்கத்தவர்கள் அனைவரும் இடம்பெறுவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வில், தகுதியின் அடிப்படையில் தக்கவர்களை  ஒன்பது தலைவர்களும் ஒன்றுகூடி சிபாரிசு செய்வராம். இச்சிபாரிசு மக்கள்சபையில் (இச்சபை பற்றிய விபரம் பின்னே தரப்படுகிறது.) அங்கீகரிக்கப்பட்ட பின்பே மேற்படி உறுப்பினர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவார்களாம். இவ்  உறுப்பினர்கள் இன உரிமை பற்றிய விடயங்களைப் பாராளுமன்றத்தில் முன்னெடுப்பதிலும் இன நலன் பற்றிய விடயங்களை பாராளுமன்ற அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும் உரிமை பெற்றிருப்பராம்.

03. மாகாண, உள்ளூராட்சி உறுப்பினர் சபை

மாகாண, உள்ளூராட்சி சபைகளின் அங்கத்தவர்கள் அனைவரும் இச்சபையின் உறுப்பினர்களாய் இயங்குவராம். உறுப்பினர்களின் தேர்வும் முன் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்வைப் போலவே அமையுமாம். இவர்கள் பிரதேச முன்னேற்றம் பற்றிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை மட்டும் பெற்றிருப்பராம். இன உரிமை பற்றிய விடயங்களில் இவர்களுக்கு அதிகாரம் இருக்காதாம்.


04. சட்ட ஆலோசகர் சபை

இச்சபையில் தமிழினத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்க சட்டத்துறைசார் அறிஞர்களும் புலம்பெயர்ந்து வாழும் சட்டத்துறை அறிஞர்களும் அங்கத்தவர்களாய் சேர்த்துக் கொள்ளப்படுவராம். மேற்படி கூட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் புதிய விடயங்களை சட்டமயமாக்கும் பொறுப்பும், உலக அரங்குகளில் தமிழர் உரிமை பற்றி முன்வைக்கப்படும் விடயங்களை சட்ட நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய அரசாங்கத்தினால் தமிழர் நலன் நோக்கிய திட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் வேளைகளில் அவற்றை நீதிமன்றத்தில் சந்திக்கும் பொறுப்பும் மற்றும் இன்னபிற சட்டம் சார்ந்த விடயங்களைக் கையாளும் பொறுப்பும் இக்குழுவினருக்கு உரியதாகுமாம்.

05. பொருளாதார ஆலோசகர் சபை

இச்சபையில் தமிழினத்தைச் சார்ந்த பொருளாதார அறிஞர்களும், வெற்றி பெற்ற வர்த்தக  நிறுவனங்களின் தலைவர்களும், நிதி அமைச்சில் பணியாற்றிய, பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அங்கம் வகிப்பராம். வடகிழக்கில் அமைந்த பிராந்தியங்களின் தகுதிகளுக்கேற்ப பொருளாதார வளர்ச்சி பற்றி திட்டமிடும் பொறுப்பும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ‘தமிழர் நல்வாழ்வு நிதிய’ நிர்வாகத்தினை முன்னெடுக்கும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

06. கல்வி ஆலோசகர் சபை

தமிழர் பாரம்பரிய கல்வி முறையை உட்படுத்தி, உலக கல்வி நிலையைச் சமப்படுத்தும் புதிய கல்வி நெறியை அறிமுகப்படுத்தும் பொறுப்பும் தொழில் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கல்விப் பாதையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய கல்வி அமைச்சின் ஆலோசனைகளுக்கப்பால் கல்லூரி, பாடசாலை முதலியவைகளை செம்மையுறச் செய்யும் திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

07. கலை, பண்பாடு, கலாசார ஆலோசகர்கள் சபை

தமிழினத்தின் பாரம்பரியமான கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்காத வகையில், அவற்றை நவீனமயப்படுத்தி ஈழத்தவர்க்கான தனிப்பாணிகளை உருவாக்குதலும் இளையோர் மத்தியில் அவ்வாற்றல்களைப் புகுத்தலும் அவர்தம் ஆற்றல்களை உலகளாவி வெளிக்கொணர வழி செய்யதலும் ஒழுக்கயீனங்களால் சமுதாய சமநிலை தவறும் இடங்களில் அவற்றைச் சீர்செய்தலுமான பொறுப்புக்களும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

08. வெளிநாட்டுத்தொடர்பாளர்கள் சபை


இனப்பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணலும் தமிழர் சார்பான நிலைப்பாட்டால் அந்நாடுகள் பெறக்கூடிய ஆதாயங்களை அவர் தமக்கு இனங்காட்டுதலும் தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் ஆதரவினையும் அந்நாடுகளிடம் பெறுவதற்கான வழிகள் சமைத்தலும் சமத்துவ வாழ்வுக்கான அந்நாடுகளின் அரசியல் நெறிகளை அறிந்து கொள்ளுதலும். நமது அரசோடு அந்நாடுகளைப் பேசச்செய்து அந்நெறிகளை புதிதாய் ஆக்கப்படும் அரசியல் அமைப்பில் இணைத்துக்கொள்ளச் செய்தலும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.

09. பிராந்தியத் தொடர்பாளர்கள் சபை


வடக்கு, கிழக்கிற்கு உள்ளேயும் இலங்கை முழுவதினுள்ளும் இருக்கும் தமிழர்தம் பிராந்திய வேறுபாடுகளைக் களைதலும் அவற்றிற்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதலும் இப்பிராந்தியங்களில் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றால் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும் மக்கள் நலன் நோக்கிய பொதுத்திட்டங்களில் பிராந்திய வேறுபாட்டுப் பாதிப்புக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்வதும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.

10. இன நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை

நாடு முழுவதும் பிரிவுற்றிருக்கும் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைதலும் ஏற்கனவே விழைந்த இனப்பகை பற்றிய விடயங்களை நீக்க முயலுதலும் எல்லா இனத்திலும் உள்ள நல்லவர்களை ஒன்றிணைத்து அவர்தம் குரலை ஓங்கச் செய்தலும் இளையோர் மத்தியில் இன ஒற்றுமையை உருவாக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.

11. சமய நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை
பிராந்தியங்களில் பலம் பெற்றிருக்கும் சமயங்கள் மற்றைய சமயங்களில் நலன்களைப் பாதிக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுதலும் மக்கள் தத்தம் சமயத்தைப் பேணுவதோடு மாற்றுச்சமயத்தை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குதலும் சமயச் சண்டைகளை நீக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.

12. புலம்பெயர் இன அக்கறையாளர்கள் சபை

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தொகை இன்று எட்டரை இலட்சத்தையும் தாண்டி விரிந்திருப்பதாய் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இப்புலம்பெயர் தமிழர்கள் தத்தம் புகழ் நோக்கி தாய்மண்ணில் சில நற்காரியங்களை ஆற்றுகின்றனரேயன்றி ஒருமித்த அவர்களது ஆதரவுப்பலத்தை இன்னும் நம் இனம் பெறவும் பயன்படுத்தவுமில்லை. அதற்கான ஓர் புதுத்திட்டம் அமைக்கப்படல் வேண்டும் என்றும் முன் சொன்னாற்போல ஈழத்தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மேற்படி கூட்டமைப்பின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு நேர்மையான நிர்வாகிகள் அங்கு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் மூலம் வாரத்திற்கு ஒருதரம் புலம்பெயர் தமிழர் ஒருவர் தாயகத்திற்காக ஒரு பிரித்தானியப்பவுண் வழங்கும் முறைமையை கொணரவேண்டும் என்றும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனராம். ஒரு பவுண் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு மிகச் சிறிய தொகையேயாகும். (அவர்கள் ஒரு ‘பேகர்’ சாப்பிடுவதை விட குறைந்த தொகை) புலம் பெயர்ந்து வாழும் எட்டரை  இலட்சம் பேரில் குறைந்தது ஏழு இலட்சம் பேரையாவது இத்திட்டத்தில் இணைத்தால் மாதம் ஒருதரம் 7 இலட்சம் பவுண் நிதியாகக் கிடைக்கும். அது கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் பதினைந்து கோடி ரூபாவாகும். இப்பணத்தை நம் மண்ணுக்கு முறைப்படி கொண்டுவருவது பற்றி அரசுடன் பேசி வழி செய்யவேண்டும். இப்பணத்தைக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலுமாக ஒவ்வொரு மாதமும் சில பொருளாதாரக் கல்வித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அரசைச் சாராமலே நம் தாய்மண்ணை நாம் வளப்படுத்தலாம் என முடிவு செய்துள்ள தலைவர்கள் மேற்படி திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் அதிகாரத்தை இச்சபைக்கு வழங்கவுள்ளனராம்.

13. தாயகக் கட்டமைப்புத் திட்ட ஆலோசகர் சபை

இச்சபையில் நம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் பொறியியளாலர்களும் வரைபடக்கலைஞர்களும் அங்கம் வகிப்பராம். கடந்த பல ஆண்டுகளாக நமது தாயகப் பிரதேசம் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உட்படுத்தப்படாமல் பல்லாண்டுகளுக்கு முன் இருந்த நிலையிலேயே மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. நவீன வளர்ச்சிக்கேற்பவும் உலக நாடுகளை சமப்படுத்தும் வகையிலும் நம் தாயகக்கட்டமைப்புத் திட்டம் நவீனமயப்படுத்தப்படுதல் வேண்டும். இத்தகு பொறுப்புக்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெறுமாம்.

14. விவசாய முன்னேற்ற ஆலோசகர் சபை

நவீன விவசாய முறைகளை அறிமுகஞ் செய்தல், பிராந்திய நீர்வளங்களைப் பெருக்குதல், கால்நடை வளர்ப்பிலும் அவற்றின் பயன்களை சேமித்து விநியோகத்திலும் நவீன முறைகளைப் புகுத்துதல், விவசாயப் பயன்பாடுகளை சேகரித்துப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல், வடக்கு கிழக்கில் வெறுமையாய் உள்ள நிலப்பரப்புக்களைக் கையகப்படுத்தி விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், வீட்டு விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் முதலிய விடயங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெற்றிருக்குமாம்.

15. போர் பாதிப்பாளர் நல்வாழ்வுத் திட்ட ஆலோசகர் சபை

நடந்து முடிந்த போரினால் பாதிப்புற்ற அங்கயீனர்கள், விதவைகள், அனாதைகள், சொத்திழந்தோர் போன்றோரின் நல்வாழ்வு மீட்புத்திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தினை கொண்டிருக்கும் இச்சபை, புலம்பெயர் இன அக்கறையாளர் சபையினூடு பெறப்படும் நிதியத்தின் ஒரு பங்கை இப்பணிகளுக்கு பயன்படுத்துதல் பற்றி ஆராய்ந்து இச்சபை செயல்படுமாம். அரசியற்சபையின் பெரும்பான்மை அபிப்பிராயம் பெறப்பட்டே, இச்சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

➤➤➤

இதையெல்லாம் ஊடக நண்பன் சொல்லச்சொல்ல, என் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது போங்கள். உங்கள் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவும்தானா? என்றேன் நண்பனிடம். என்ன அவசரப்படுகிறாய் கொஞ்சம் பொறு என்றவன், மேலும் சில செய்திகளைச் சொன்னான். அவன் சொன்னவற்றைக் கேட்டு, இத்தனை ஆற்றல்களையும் வைத்துக் கொண்டா, நம் தலைவர்கள் இதுவரை சும்மா இருந்தார்கள் என ஆச்சரியப்பட்டேன். அவன் சொன்னவற்றையும் சொல்லி முடித்துவிடுகிறேன்.

➤➤➤

மேற்படி சபைகளைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மொத்த சபை அங்கத்தவர்களை உள்ளடக்கி, அரசியற்சபை, மக்கள்சபை என இருவகையான சபைகளை, இக்கூட்டமைப்பினுள் உருவாக்குவார்களாம். இவற்றுள் அரசியற்சபை, இன முன்னேற்றம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்குமாம். மக்கள் சபை அரசியற்சபையை சரியாக வழிநடத்தும் பொறுப்பினைக் கொண்டிருக்குமாம். அரசியற்சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், மக்கள் சபையால் ஏகமானதாகவோ பெரும்பான்மையாகவோ அங்கீகரிக்கப்பட்ட பின்பே,
நடைமுறைப்படுத்தப்படுமாம்.

மேற்படி அரசியற்சபையில் 9 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும் அங்கம் வகிப்பார்களாம். முரண்பாடுகள் ஏற்படின் வாக்களிப்பில், பாராளுமன்றத் தலைவர்களுக்கு ஐந்து வாக்குகளும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மூன்று வாக்குகளும், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஒரு வாக்கும் வழங்கப்படுமாம். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஏகமனதாக அல்லது பெரும்பான்மையாக எடுக்கும் முடிவுகள், மக்கள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின்பே, அவை நடைமுறைப்படுத்தப்படுமாம்.

➤➤➤

மக்கள்சபையில் மேற்படி பதினைந்து குழுக்களிலும் உள்ள ஒவ்வொருவர் அங்கம் வகிப்பார்களாம். அங்கம் வகிக்கும் உறுப்பினரை அந்தத்தச் சபையினரே தேர்ந்தெடுத்து, மக்கள்சபைக்கு அனுப்பி வைப்பார்களாம். அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவற்றின் கூட்டங்களும், அவ்விரண்டு சபைகளும் இணைந்து நடத்தும் கூட்டமும் மாதம் ஒருதரம் நடாத்தப்படுமாம். மக்கள்சபையில் அமைந்துள்ள பதினைந்து குழுக்களும், வாரந்தோறும் தனித்தனி சந்தித்து, தத்தம் துறை சார்ந்த மக்கள் நலம் பற்றிய திட்டங்களை வடிவமைக்குமாம். அங்ஙனம் அவர்களால் வடிவமைக்கப்படும் திட்டங்கள், அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவை இணைந்து நடாத்தும் கூட்டங்களில், பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை, அரசியல்சபை ஏற்றுக்கொள்ளுமாம்.

மாகாணசபை, உள்ளூராட்சிசபை ஆகியவற்றில், எதிரணிகள் இருக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போவதால், மேற்படி கூட்டமைப்பின் உறுப்பினர்களே, கொண்டு வரப்படும் திட்டங்களை திறந்த மனதோடு விவாதித்து, மக்கள் நலம் நோக்கி அத்திட்டங்களை நெறிப்படுத்தவேண்டும் என்றும், தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

➤➤➤

உங்கள் மனநிலை எப்படியோ தெரியவில்லை. மேற்சொன்ன செய்திகளை ஊடக நண்பன் விபரித்ததும், என் கால்கள் தரையிலிருந்து மேலே கிளம்பிப் பறப்பதாய் உணர்ந்தேன். இனி என்ன? ஈழத்தமிழினத்தை எவராலும் அசைக்க முடியாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று தலைவர்கள் உணர்ந்து கொண்டார்கள். தலைவர்கள் உணர்ந்தால் இனி மக்களும் உணர்வார்கள். ‘அவன் கெட்டவன்’, ‘இவன் நல்லவன்’ என்று பிரிவுகள் பேசி, நம்மை நாமே பலயீனப்படுத்தும் துன்பம் இனி தொலைந்து போகும். ஆளுக்கொருவராய் அறிக்கைகள் விட்டு சீர்குலைந்த நம் இனம், இனி எதிரிகள் உள் நுழையாவண்ணம் இறுக்கமுறும். ஒற்றுமைப் பலத்தை எவர்தான் மதிக்காமல் இருக்கமுடியும்? தமிழர்கள் தலைநிமிரப் போவதை எவராலும் இனி தடுக்க முடியாது, என்றெல்லாம் எண்ணி என் மனம் துள்ளியது. ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று, உரக்கக் கூவியபடி உற்சாகத்தில் ஒரு துள்ளுத்துள்ளினேன்.

➤➤➤

‘தொப்படீடீடீடீர்’ என்று ஒரு சத்தம். முதுகு கையெல்லாம் ஒரே வலி. என்ன நடந்தது என்று நிதானிப்பதற்கு முன்? வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அறைக்குள் ஓடி வந்தார்கள். தரையில் இழுத்துப் போடப்பட்ட திமிங்கலம் போல, கட்டிலால் நிலத்தில் விழுந்து கிடக்கும் என்னைப் பார்த்து, ‘என்ன?’, ‘என்ன?’ என்று எல்லோரும் பதறினார்கள். அரைத்தூக்கத்தில் இருந்த நான், ‘ஆர் விழுந்தால் என்ன? தமிழினம் இனித் தலைநிமிர்ந்து விடும், நம் தலைவர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள், வாழ்க! தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என்று உரத்துக் கூவ, எல்லோரும் என்னைக் கவலையாய்ப் பார்த்தார்கள்.

‘தலையில் அடிபட்டிருக்கும் போல, ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்’ என்று டாக்டர் நண்பர் சொல்ல, ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவராய்ப் பிடித்து என்னைத் தூக்க முனைகிறார்கள். முழுமையாய்த் துயில் கலைய, அப்போதுதான் நான் கண்டது கனவு என்பதும், கனவில் துள்ளிய துள்ளலில் கட்டிலால் விழுந்திருக்கிறேன் என்பதும் தெரிகிறது.

கண்ணோரத்தில் கண்ணீர். விழுந்த வலியால் அல்ல. இனிய கனவு முடிந்த வலியால். கனவிலாவது நல்லதைக் கண்டேனே! கனவுதான் வெற்றியின் முதல்படி என்றார் அப்துல்கலாம். யார் கண்டது? தமிழர்க்கு நல்ல காலம் வரும் போது, என் கனவும் நனவாகும் போல!.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com