றிசாட் பதுயுதீனின் மக்கள் சந்திப்பை சாய்தமருதில் தடுத்து நிறுத்தினர் ஹக்கீமின் ஆதரவாளர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் பொருட்டு ஹசன் அலி, அன்சில் போன்ற முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர்கள் சாய்ந்தமருதில் பொது கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்காக இடம் ஒன்றினை பெற்றுக்கொள்ள பல வாரங்களாக அலைந்து திரிந்ததனை காணக்கூடியதாக இருந்தது.
இந்த மு.கா. அதிருப்தி குழுவினருக்காக கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து கொடுப்பதில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சாய்ந்தமருது பிரமுகர்களே அதிகம் தீவிரமாக செயல்பட்டதனையும் காணக்கூடியதாக இருந்தது. கூட்டம் நடாத்துவதற்காக பொதுவான இடங்கள் பல தெரிவு செய்யப்பட்டிருந்தும் அதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததனால் அமைச்சர் ரிசாத்தின் சாய்ந்தமருது பிரமுகர் ஒருவர் பிரதேச செயலாளருடன் வாக்குவாதப்பட்டு தாங்கள் நீதி மன்றம் செல்லப்போவதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் அறியக்கிடைக்கின்றது.
இறுதியில் பாரிய இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை (07.04.2017) கூட்டம் நடாத்துவதற்காக சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தீவிர ஆதரவாளர் ஒருவருக்கு சொந்தமான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியினை கோரியிருந்தபோது, அந்த பிரதேசத்தினை சுற்றியிருந்த பொது மக்கள் பாரிய எதிர்ப்பினை தெரிவித்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்கள்.
இந்த பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து கூட்டம் நடாத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளார்கள். பின்பு நீதிமன்றம் சென்று அனுமதியினை பெற்றுக்கொள்ள முயற்சித்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றுள்ளது.
‘விழுந்தும் மீசையில் மண் படவில்லை’ என்பது போல, எவ்வளவுதான் முயற்சிகள் செய்தும் கூட்டம் நடாத்துவதற்கு சாய்ந்தமருதில் இடம் ஒன்று கிடைக்கவில்லை என்ற காரணத்தினை வெளியே சொல்லிக்கொள்ள வெட்கத்தினால், இறக்காமத்தில் ஏற்ப்பட்ட அசம்பாவிதத்தினை காரணமாக கூறி சாய்ந்தமருதில் கூட்டம் நடாத்துவதனை ஒத்திப்போட்டுள்ளதாக முடிவுரை எழுதியுள்ளார்கள்.
இதைவிட அதிகமானவர்கள் கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலினால் மரணித்தபோது நிந்தவூரிலும், பாலமுனையிலும், பொத்துவிலிலும் தொடர்ச்சியாக கூட்டம் நடாத்த முடியுமென்றால், இன்று கூட்டம் நடாத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லையே! இறக்காமத்தினை சாட்டாகவைத்து கூட்டத்தினை ஒத்திப் போட்டுள்ளதாக பொய் கூறுவது போன்றதுதான், ரவுப் ஹக்கீமுக்கு எதிரான இவர்களது பிரச்சாரமுமாகும்.
இங்கே முக்கிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிழை செய்துள்ளதாகவும், அவரை திருத்திக்கொள்ளவுமே நாங்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தினை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் இவர்களுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஏன் பின்னணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்? இதன் மூலம் அமைச்சர் ரிசாத் இவர்களுக்கு பின்னால் இருக்கின்றார் என்பது உறுதிப்படுத்த படுகின்றதல்லவா?
ரவுப் ஹக்கீமுக்கு எதிரான தங்களது விசம பிரச்சாரம் போதாது என்ற காரணத்தினால், முஸ்லிம் காங்கிரசில் உள்ளவர்களை பிரித்தெடுத்து அவர்கள் மூலமாகவே அவர்களது தலைவருக்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் போது அது முஸ்லிம் மக்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற புதிய அரசியல் தந்திரோபாயமே இதுவாகும்.
முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது
0 comments :
Post a Comment