யுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பரம்பரைக் குற்றங்கள் குறித்தும் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும்! : யோகா – ராஜன்
குறிப்பாக இக்கட்டுரையில், ஐ. நா. வின் நடைமுறை குறித்தும், சர்வதேச அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்ட வகையிலும் சுமந்திரனால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் (சாணக்கியம்) ராஜதந்திரம் குறித்து ஆழமான அழுத்தத்தை பிரயோகிக்க முனைகிறோம். அதேவேளை மொப்பிங் முறையிலான பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் மூலம், சுமந்திரனின் கருத்துக்ளை முறியடிக்க முனையும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான அரசியல் பொறுக்கித்தனத்தை வெளிப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதுமே இங்கு எமது பிரதான நோக்கம் ஆகும்!
தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் கூட்டமைப்பின் மிதவாத நடவடிக்கைகளுக்கேற்ற இளையவராக சுமந்திரனை கொண்டுவந்தார் சம்மந்தன். மாவை சேனாதிராசாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் ஏனையவர்களின் மௌனம்; சம்மதத்தின் அறிகுறியாயின.
இன்று கட்சியின் தலைவர் சம்மந்தன் கூட சுமந்திரனின் ஆலோசனைக்குட்பட்டுத்தான் தமது நகர்வுகளை மேற்கொள்கிறார் என்றால் மிகையாகாது. சுமந்திரனின் திறன் மீது அவ்வளவுக்கு நம்பிக்கையுடையவராக இருக்கிறார் சம்மந்தன்.
சர்வதேச மற்றும் ஐ.நா நடைமுறைகளைப் புரிந்துகொண்ட முறையிலமைந்த, சுமந்திரனின் ராஜதந்திர முறைமைகளை கொச்சைப்படுத்தும் விதமாக மொப்பிங் செய்து வருவதன் மூலம், தமிழ் அரசியலில் தமக்கான இடத்தை தக்கவைத்துவிட நினைக்கின்றனர் புலம் பெயர்ந்த தமிழர் கூட்டமும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் வகையறாக்களும்!
புலம்பெயர்ந்த தமிழரை தமது கட்டுக்குள் வைத்திருந்த புலிகள், கோப்பை கழுவியும், கக்கூசைத் தேய்த்தும் கஷ்டப்பட்டு உழைத்த மக்களிடம் வரி, வங்கிக் கடன், கப்பம், நகை நட்டு என்று பணத்தை வசூலித்ததை உலகறியும். அதே புலிகள், 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமது சூட்கேசுகளை நிரப்பிக்கொண்டு, கடை கண்ணியென்று பல்வேறு தொழில்களில் முதலீடுகளைக் குவித்துக்கொண்டு வசதியான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இப்புலிகள், மீண்டும் தமிழர் மீது மேலாண்மை செலுத்த முயற்சிக்கின்றனர். தமிழரின் பணத்தைக் கொள்ளையடித்த இக் கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை நோக்காகக் கொண்டு!
சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்படி விவகாரங்களில் சுமந்திரனுக்கு எதிர் முனையில் நின்றுகொண்டு கஜேந்திரகுமாருக்குச் சமனாக தமிழ் மக்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த முனையும் இன்னொரு நபர்!
இலங்கையில் இந்திய இராணுவம் அட்டகாசம் புரிந்த காலத்தில், புலிகள் மீதும் மக்கள் மீதும் படு கொலைகளை நடாத்திய மண்டையன் குழுவுக்கு பொறுப்பாக இருந்தவர் என்று இன்றும் பேசப்படுபவர். தாம் மேற்கொண்ட குற்றங்களுக்காக வருத்தத்தை தெரிவிக்காத இவரெல்லாம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முனைவதில் என்ன நியாயம் இருக்கிறது?
மற்றவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். முன்னாள் பிரதம நீதிபதி, இன்னாள் முதலமைச்சர் அரசியலை கற்பதற்கு ஆரம்பித்திருப்பவர், 30 ஆண்டுகால தமிழர் போராட்ட அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து எந்தவொரு உழைப்பையும் செலுத்தாதவர், கல்வி மற்றும் சாதிய பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டு பதவிக்கு வந்தவர்…
முதலமைச்சர் பதவி என்பது நிர்வாகப்பொறுப்பு மிக்க பதவி. அதாவது எக்சிகுயூரிவ் போஸ்ற் (Executive Post) முன்னாள் பிரதம நீதிபதியாக கடமையாற்றியவர் என்ற வகையில் நடுநிலை தவறாத சிறந்த நிர்வாகியாகத் தொழிற்படுவார், மாகாணத்தை வளப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர்நிர்வாகத்திறனில் தமது இயலாமையை மறைக்கும் பொருட்டு, மற்றவர் மீது பழிகளைச் சுமத்துவது மட்டுமின்றி, தமிழ் அரசியலின் தொங்கு தசையாகவும் தூங்கிக்கொண்டிருக்கின்றார்.
அதிஷ்டவசமாகக் கிடைத்த அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்பில் புலம்பெயர் தமிழரின் புனைவுகளுக்குப் பின்னால் கஜேந்திரகுமாரின் வாலில் தொக்கியபடி தனது அரசியலை நகர்த்தி வருகிறார்.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று விடலைகளாகத் தோற்றமளிக்கும் இவர்கள், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த வேளை பால்முகம் கூட மாறாத சிறிசுகளாக இருந்திருப்பர். அப்படியிருக்க… சுமந்திரன் மீது மேலும் அதூறுகளைப் பொழியும்பொருட்டும், அவரது கருத்துகளுக்கு எதிராகவும், வீராவேசப் பேச்சுக்களைக் கக்கித் தள்ளும் வகையிலும் அம் மாணவக் குஞ்சுகளை முடுக்கிவிட்டிருக்கிறது, சாயிற பக்கம் சாயிற செம்மறி ஆடுகளைப்போல “அறிவை வளத்து” வைத்திருக்கின்ற அக் கல்லூரி ஆசிரியர் கூட்டம்!
1970களில் „ஆண்டபரம்பரை மீண்டும் ஆள்வதில் என்ன தவறு என்று கேட்டு ”மரம் பழுத்தால் வெளவால் வரும், பாதுகாப்புத் தரும்“ என்று வீராவேசமாகப் பேசி, வாலிபங்களை உசுப்பேத்திவிட்ட காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா வகையறாக்கள், இன்றும் உயிருடன்தான் இருக்கின்றனர்!
அதுவும் மனைவி பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்துகொணடு! போர்க்களத்தில் இவர்கள் தமது விரல் நுனியைத்தன்னும் பதித்திருப்பார்களா?
ஆனால் இவர்களது உணர்ச்சிவயப்பட்ட பேச்சைக்கேட்டு ஆயுதத்தைக் காவிக்கொண்டு புறப்பட்ட பிரபாகரன்…? கைகளைத் தூக்கிக்கொண்டு அபத்தமான முறையில் ஆமிக்காரனிடம் சரணடைந்த, ஆண்டு 2009ன் நிலைமை மீண்டுமொரு முறை தமிழனுக்கு வேண்டுமா?
உண்மையான விடுதலை உணர்வோடு இண்டைக்கு பிரபாகரன் எழுந்துவரும் நிலையேற்பட்டால், கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்துக் கல்லூரி ஆசிரியர் கூட்டம் மற்றும் புலம்பெயர்ந்த புலிக்கூட்டத்தையும் நோக்கித்தான் பிரபாகரனது முதல் வெடி பாயும்!
வேண்டாம். இத்தகைய ஒரு சூழல் தமிழனுக்கு மீண்டுமொருமுறை வந்தவிடக்கூடாது என்பதில்தானே மிக எச்சரிக்கையாக இருக்கிறார் சுமந்திரன். அதேவேளை அவருக்கும் எல்லைகள் உண்டு என்பதையும் தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.
சர்வதேசத் தரப்பிலும் பரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர் சுமந்திரன். சர்வதேசம் ரணில், மைத்திரி அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் அதனை கூர்மையாகப் புரிந்துகொண்டு, தனது நிலைப்பாட்டை நகர்த்திக்கொண்டவர். சர்வதேசப் பரப்பில் அவர்களுடைய தரத்திற்குச் சமனாக பேச்சுக் கொடுக்கக் கூடிய நபராகவும் அவர் இருக்கின்றார் என்பதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் நேர்மையும் கூட. அத்தகைய ஒருவர் மீது, அவதூறுகளைப் பொழிவதென்பது, கடைந்தெடுத்த கடைநிலை அரசியல் வழிமுறை.
பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்கள் சுமந்திரன் மீது மொப்பிங் செய்வதற்கான காரணம் வேறொன்றுமில்லை. “எப்போ அண்ணன் சாவான்? திண்ணை காலியாகும்” என்ற மன நிலைதான். அதன்பொருட்டு அதற்கான கொலை முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் மிதவாதத் தலைமைகளுக்கென்று ஓர் இடமிருப்பது இயல்பு. சிறந்த உதாரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம். ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டப் பாதையில் பயணித்தவர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஜசீர் அரபாத். (தென் ஆபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவையும் இவ் வரிசையில் இணைத்துக்கொள்ளலாம்) பின், காலப்போக்கில் மிதவாத அரசியலுக்குள் நுழைந்த இவருக்கென்று பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலர்ற்றில் தனியிடமும், மதிப்பும் இருப்பதை அறிவோம்.
அவரின் இறுதிக்காலம் வரை ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட அவரை போட்டுத்தள்ளுவதற்கு எண்ணியதில்லை. அதிஷ்டசாலிகள் பாலஸ்தீன மக்கள். அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை. (அரபாத் போன்ற பொறுப்புமிக்க தலைவராக அமிர்தலிங்கம் இருந்தாரா என்பதை (அரசியற் தவறுகளை) ஆய்வதற்கான தருணம் இதுவல்ல.)
ஆனால் இன்னும் பாடங் கற்றுகொள்ளாத தமிழர் சமூகம், மீண்டுமொரு மிதவாத அரசியல் வழிகாட்டியை தமது கொலைவெறிக்கு உட்படுத்த எத்தனித்திருக்கிறது. சுமந்திரன் மீதான கொலை முயற்சி தடுக்கப்பட்டதன் மூலம், தமிழர் மத்தியில் இடம்பெறக்கூடிய எத்தனையோ அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் புலிக்கூட்டத்தின் அவஸ்த்தைக்கு ஆளாகும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களும், ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழருக்குப் பின்னால் இழுபடும் அவலநிலை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இக் கொலை முயற்சியைத் தடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த தனிநபர், பொலீசார் மற்றும் அனைவர்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களினதும் நன்றிகள் உரித்தாகட்டும்!
உண்மையில் புலம்பெயர்ந்த தமிழரின் தீவிரவாதக் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது போல் நடிப்பவர்தான் கஜேந்திரகுமார். ஆனால் இவரது பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அடியொற்றி நோக்குவோமானால், தமிழ் மக்கள்மீது தனது அதிகாரத்தை நிறுவும்பொருட்டு எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடியவர் இவர் என்பதை அறியமுடியும். அவ்வகையில்தான், இன்றைய இவரது வழிநடத்தல் இளைஞர் பரம்பரையை மீண்டுமொருமுறை ஆயுதமேந்த வைப்பதாக நகர்கிறது. இப்போக்கு இன்னுமொருமுறை எமது மக்களை அழிவுக் குழியில் வீழ்த்திவிடும். இத்தருணத்தில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகத்தான் அமிர்தலிங்கத்தின் வாழ்வு முடிவுக்கு வந்ததை கஜேந்திரகுமார் எண்ணிப்பார்ப்பது சிறப்பு!
ஐ.நா. வின் நடைமுறை குறித்து கஜேந்திரகுமார் ஒன்றும் அறியாதவரல்லர். இருந்தும் சுமந்திரனுக்கு எதிராக எதிர் வாதம் புரியும் சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் வகையறாக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் கூட்டத்தையும் ஒருங்கமைத்துக்கொண்டு, தமிழ்மக்கள் மீது முழு அதிகாரம் செலுத்துவதுதான் பொனம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான உள்நோக்கம். இது இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இவரது பரம்பரை இலக்கு இது. பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மிச்சமாகத் தொடருகின்ற அதிகார வெறி!
ஆழ்ந்து நோக்கின் மக்கள்மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்தவித அடிப்படைத் தகுதியும் அற்றவர் கஜேந்திரகுமார்!
பேரன் பொன்னம்பலம் அப்பாவி வழக்காளிகளை சுரண்டிக் குவித்த பரம்பரைச் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் கஜேந்திரகுமார். அப்பணத்தில் இருந்து, காலிழந்து, கையிழந்து அவதிப்படும் வன்னி மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தை சரிசெய்யும்பொருட்டு ஐந்து சதத்தைத் தன்னும் கொடுத்திருப்பாரா பொன்னம்பலம் கஜேந்திரகுமார்?
”தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்” அரசியல் நடவடிக்கைகள் பலவும், புலம்பெயர்ந்த புலிகளின் பணத்தில்தான் நிகழ்வதாக அறியக்கூடியதாக இருக்கிறது. இப்போக்கு உண்மையாக இருந்தால் உங்களைப் போன்ற பணமுதலைகள் கோப்பை கழுவி கஸ்ரப்பட்டு உழைக்கின்ற மக்களின் பணத்தை அபகரிப்பதென்பது எவ்வளவு அபத்தம்!
இன்றைய உலகில், பரம்பரை ரீதியான, பழைய, பழைய தவறுகளையும், குற்றங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் சர்வதேச அரசியல்வாதிகள். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது பேரனார் ஜீ.ஜீ. பென்னம்பலம் செய்த வரலாற்றுத் தவறுகள், குற்றங்கள் குறித்து இதுவரை எங்கேயாவது பிரஸ்தாபித்தது கிடையாது.
1945ல் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக சோல்பரிக் கமிஷனுக்கென்று ஆங்கிலேயருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை, சோல்பரி அரசியல் சாசனத்தில் இடம்பெறவிடாது தடுத்ததன் மூலம், அம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை தடுத்து நிறுத்தியவர் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அது மட்டுமல்ல, 1948ல் யூஎன்பி அரசுடன் இணைந்து 10 இலட்சம் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்ததன் மூலம், அவர்களுக்கான வாக்குரிமையையும் இல்லாமல் செய்வதற்கு கால்கோலாக இருந்தவர்தான் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம்!
இவ்விதங்களில் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குத் தடையாக இருந்து, மாபெரும் வரலாற்றுக் குற்றங்களை வரைந்து சென்றவர்தான் பேரனார் ஜீ.ஜீ. இன்று அதே தமிழ் இனத்தின் தலைவனாக வலம் வர எண்ணுகிறார் கஜேந்திரகுமார். பரம்பரை வழியில் மக்கள்மீது அதிகாரம் செலுத்திவிடலாம் என்ற துடிப்புடன்!
இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் என்று குற்றங்களை சுமத்தி, ஜெனிவா வரை வந்து நீதி கோரும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரிடம் நாம் கேட்பது, (1945ல் சோல்பரி அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிக்கையை பதியவிடாது தடுத்தது மற்றும் 1948ல் மலையகத்தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது உள்ளிட்ட) மேற்படி உங்கள் பரம்பரை விட்டுச் சென்ற குற்றங்களுக்காக யாரிடம் பாவ மன்னிப்புக் கேட்கப்போகிறீர்கள்?
அறிவோடு இருந்துகொண்டு தவறிழைத்தவர்கள் நீவிர்! அதிகாரத்திலும் இருந்துகொண்டு மாபெரும் குற்றங்களை புரிந்த பரம்பரையின் வரிசு நீங்கள்! அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும்!
உங்கள் பேரனாரின் சொத்துக்களில் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு, அவரது புகழுக்கும் பேருக்கும் (பொன்னம்பலம் கஜேந்திரகுமார்) அதிபதியாக விளங்கும் நீங்கள், இனிமேலாவது உங்கள் பேரனின் சகல விதமான குற்றங்களுக்கும் தார்மீகப் பொறுப்புடைய நபராக உங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அடிப்படை மனித அறத்தின் பிரகாரம் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பொது மன்னிப்புக் கேட்பதே சிறப்பு!
நன்றி தேசம்நெற்
0 comments :
Post a Comment