நேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் வில்பத்து விவகாரம் சம்பந்தமாக எமது முஸ்லிம் மக்களுக்கான பல படிப்பினைகளையும், உண்மைகளையும் அறியக்கூடியதாக் இருந்தது. வில்பத்து பிரச்சினை எப்போது ஆரம்பமானதோ அன்றிலிருந்து ஊடகங்களில் ஒன்றுக்கொன்று முரணான பல செய்திகளை கண்டிருக்கின்றோம். இப்பிரச்சினையில் அதனுடன் சம்பத்தப்பட்ட பிரதேசத்தின் அமைச்சரான ரிசாத் பதியுதீன் அவர்கள் தமிழ் ஊடகங்களில் மட்டும் வில்பத்து பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அறிக்கைகளையும், போராட்டங்களையும் நடாத்தி வந்தார் என்று அறிந்துள்ளோம்.
அதாவது ஜனாதிபதியுடன் சீறிப்பாய்ந்தார், பைல்களை தூக்கி வீசினார், ஜனாதிபதியுடன் வாக்குவாதப்பட்டார், புயலானார், போராட்டம் நடாத்தினார், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போனார் என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் மூலமாக பல புனையப்பட்ட கதைகள் எல்லாம் கேள்வியுற்றோம். ஆனால் இந்த கதைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்பது நேற்றைய அதிர்வு மூலம் அறிந்திருந்தும் நாங்கள் அதிர்ந்துபோகவில்லை.
அதாவது வில்பத்து விவகாரம் சம்பந்தமாக இதுவரையில் ஜனாதிபதியுடன் பேசியதுமில்லை, அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரபூர்வமான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவுமில்லை. மாறாக அனைத்து போராட்டங்களும், அறிக்கைகளும் தமிழ் ஊடகங்களில் மட்டுமே, என்பதுதான் அந்த அதிர்ச்சிதராத விடயமாகும். இதனை ஜனாதிதியின் செயலாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியதாக ஆதாரபூர்வமாக வை.எல்.எஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியுடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற உண்மை நிலவரத்தினை விளக்கி பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தால், முசலி பிரதேசத்தில் உள்ள எந்தவொரு நிலங்களும் அரச காணிகளாக வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டிருக்க மாட்டாது என்ற உண்மையை ஜனாதிபதியின் செயலாளர் கூறியதாக வை.எல்.எஸ் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு தேர்தல்கள் நெருங்கும்போது வில்பத்து விவகாரத்தை தேர்தலுக்கான ஓர் வியாபாரப் பண்டமாக பாவிக்கப்படுகின்றது என்று கடந்த காலங்களில் பல கட்டுரைகளை எழுதி இருந்தேன். ஆனால் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது விசுவாசத்தினை அமைச்சருக்கு காண்பிக்கும் பொருட்டு என்னை விமர்சிப்பதிலேயே அமைச்சர் ரிசாத்தின் முகநூல் எழுத்தாளர்கள் கவனத்தினை செலுத்தினார்கள்.
அத்துடன் அங்கு இருக்கின்ற அரச காணிகளை ஒரு அமைச்சர் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டதனால், மீதமாக இருக்கின்ற அரச நிலங்களை பாதுகாக்கும் பொருட்டே ஜனாதிதி அவர்கள் வர்த்தமானி அறிவித்தல் வழங்கியுள்ளார் என்ற உண்மையினை வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள் வெளிப்படுத்தினார்.
மேலும், வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த தேர்தல்களின்போது ஏன் அமைச்சர் ரிசாத்தினால் தேர்தல் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும், அப்படி ஒப்பந்தம் செய்திருந்தால் அதனை காண்பிக்குமாறும் வை.எல்.எஸ் அவர்கள் கேள்வி எழுபியபோது, அதற்கு விடை வழங்கத் தெரியாமல், வட்சப் மூலமாக அனுப்பப்பட்ட இரண்டு கையொப்பங்கள் மட்டும் போன் (phone) மூலமாக காண்பிக்கப்பட்டது.
ஆனால் அந்த கையொப்பம் எதற்குரியது என்றும், அந்த கையொப்பத்துக்கான கடித தலைப்பினை காண்பிக்குமாறும் வை.எல்.எஸ் மீண்டும் கோரியபோது அமைச்சர் ரிசாத்தின் பிரதிநிதியாக வருகைதந்திருந்த சட்டத்தரணி ருஸ்தி அவர்களுக்கு குளிரூட்டிய அறைக்குள் வியர்வை வெளியானதுடன் தடுமாரியதனை காணக்கூடியதாக இருந்தது.
எது எப்படி இருப்பினும் வில்பத்து விவகாரம் என்பது அரசியல் தேவைக்காக தெற்கில் உள்ள இனவாதிகளை தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய முற்ப்பட்ட ஒரு நாடகமாகும். இந்த வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்ற அடிப்படையில் இன்று தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு உரிய ஆவணங்களுடன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துகின்றார்கள்.
எனவே போலிகளும், பொய்களும் அழிந்து உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்றும் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.
No comments:
Post a Comment