யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு IYSSE அழைப்பாளரிடம் இருந்து ஒரு பகிரங்க கடிதம்.
சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் அழைப்பாளரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் முதலாளித்துவ அரசிற்கு எவ்வாறு முண்டு கொடுத்து மாணவர்களில் போராடு திறனை கட்டிப்போட்டியுள்ளார் என்ற விபரத்துடன் அவரின் ஜனநாயக உரிமை மீறலை நிறுத்த கோரப்பட்டுள்ளது: கடிதம் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நவரட்ணம் அனுஜன், (தலைவர்)
மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
ஐயா,
சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்கு (IYSSE) எதிராக தங்களது மாணவர் ஒன்றியத்தின் தலையீடு தொடர்பானது.
சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, கடந்த நவம்பர் 16 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் பிரச்சாரம் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது, நீங்கள் இன்னும் சில மாணவர்களுடன் வந்து IYSSE உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்து, தொந்தரவு செய்தமை சம்பந்தமாக கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் IYSSE, நீங்களும் உங்களது சக உறுப்பினர்களும் மேற்கொண்ட இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்கின்றது.
நவம்பர் 20 அன்று, "ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் யாழ்ப்பாண நூலக மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்துக்காகவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் IYSSE உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அணுவாயுத மூன்றாவது உலகப் போரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமும் அதற்கு சேவை செய்யும் இலங்கையிலும் பிராந்தியத்திலும் உள்ள தேசிய முதலாளித்துவ கும்பல்களுக்கும் போலி இடது அமைப்புகளுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதே அந்த கூட்டத்தின் குறிக்கோளாக இருந்தது.
2. IYSSE உறுப்பினர்களை நோக்கி விரல் நீட்டிய நீங்களும் உங்களது அங்கத்தவர்களும், “நீங்கள் சிங்களமா” என கேள்வியெழுப்பி, “இங்கு அரசியல் கட்சிகளுக்கு செயல்பட இடம் கொடுக்க முடியாது. நாங்கள் இப்போது ஒற்றுமையாக இருக்கின்றோம். அதை குழப்ப வேண்டாம்” என கூறி மிரட்டியமை, தான் விரும்பிய அசியல் கருத்தை கொண்டிருப்பதற்கும் அதை பரப்புவதற்கும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரான தலையீடாகும்.
3. உங்களது பல்கலைக்கழகத்துக்குள் கட்சி அரசியலுக்கு இடமில்லை என கூறும் நீங்களும், உங்கள் மாணவர் ஒன்றியமும், பல்கலைக்கழகத்துக்கு உள்ளும் அதற்கு வெளியிலும் நிச்சயமான ஒரு அரசியலில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை முதலில் கூற வேண்டும்.
முதலாளித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை தோற்கடிக்க முடியும் என்ற போலி முன்நோக்குக்குள் மாணவர்களை சிறைவைத்து அந்த தாக்குதல்களுக்கு அவர்களை அடிபணியச் செய்து, முதலாளித்துவத்தை பாதுகாப்பதே உங்களது அரசியலாகும்.
4. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஒரு பாகமாக செயற்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), மாணவர் அரசியல் என்ற சாக்குப் போக்கின் கீழ் கட்சி அரசியலுக்கு தடை விதித்து IYSSE அரசியலுக்கு எதிராக தெற்கில் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத தலையீட்டுடன், வடக்கில் நீங்கள் செய்யும் மேற்குறிப்பிட்ட தலையீடு ஒத்ததாக இருக்கின்றது. உங்களைப் போலவே அ.ப.மா.ஒன்றியமும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்ப்பு அரசியலிலேயே ஈடுபட்டுள்ளது.
5. அந்த எதிர்ப்பு அரசியலின் பிற்போக்கு பண்பை, அண்மைய சம்பவங்களைக் கொண்டும் தெளிவுபடுத்த முடியும்.
அக்டோபர் 20, பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் கொல்லப்பட்டபோது, கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி, நீங்கள் உட்பட மாணவர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதுடன், இந்த கொலைகளுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட வகுப்பு பகிஷ்கரிப்பையும் அரசாங்கத்தின் வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடச் செய்தீர்கள்.
மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசாங்கத்தின் தலைவர்களை, அல்லது உண்மையான கொலைகாரர்களை நோக்கி நீங்கள் அவ்வாறு கூனிக்குறுகி சென்றபோது, கொலைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்களுக்கு மத்தியில் சென்று, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வடக்கு கிழக்கில் பேணிவரும் இராணுவ ஆட்சியின் விளைவாகவே இந்த கொலைகள் நடந்துள்ளன, என சுட்டிக் காட்டியது IYSSE மட்டுமே ஆகும்.
இந்த தலையீட்டையும் எதிர்த்த உங்கள் ஒன்றியத்தின் தலைவர்கள், மேற் குறிப்பிட்ட தெளிவுபடுத்தல் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை விநியோகிப்பதை நிறுத்துமாறும் அழுத்தம் கொடுத்தனர். “இது அரசாங்கத்தின் பிழை அல்ல, பொலிசாரின் பிரச்சினை” என அவர்கள் கூறினர்.
6. மறுபக்கம், நீங்கள் கூறுகின்ற வகையிலான “ஒற்றுமை” யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கிடையாது என்பது ஏனைய மாணவர்களைப் போலவே உங்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் போலியான “இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்” என்பதன் பின்னால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனான சிங்கள இனவாத கும்பலும் இராணுவத்தின் பகுதியினரும் ஆத்திரமூட்டல்களை கிளறிவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் அத்தகைய ஆத்திரமூட்டல்களின் விளைவாகும்.
பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில், உங்களது பல்கலைக்கழகத்திலேயே இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒற்றர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் திரிந்து, மாணவர்களின் அரசியல் செயற்பாடுகள் பற்றி தொடர்ந்தும் கண்காணித்து வருவது உங்களுக்கு நன்கு தெரிந்த விடயமே.
அத்தகைய “ஒற்றுமை” தான் உங்களது பல்கலைக்கழகத்தில் நிலவுகின்றது.
7. வடக்கிலும் தெற்கிலும் வர்க்கப் போராட்டம் வளர்ச்சி காண்கின்ற சூழ்நிலையிலேயே SEP மற்றும் IYSSE க்கு எதிராக பாய்வதும் மிரட்டல் விடுப்பதும் மேலோங்கி இருக்கின்றது. அரசாங்கம், அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளும், இந்த வர்க்கப் போராட்டத்தின் மத்தியில் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வர்க்க ரீதியிலான ஒற்றுமை ஏற்பட்டு விடுமோ என பீதியடைந்துள்ளன.
போர்க் குற்றங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம் எனக் கூறிக்கொண்டு, உலகின் பிரதானமான போர்க் குற்றவாளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னால் மண்டியிடும் தமிழ் முதலாளிகளின் கொள்கைகள் மூலம் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு உரிமையும் உறுதிப்படுத்தப்பட போவதில்லை. நீங்களும் உங்களது ஒன்றியமும் இந்த முதலாளித்துவ அரசியலின் பின்னால் மாணவர்களை கட்டிவைக்கும் திட்டமிட்ட அரசியல் வேலைத் திட்டத்திலேயே ஈடுபட்டு வருகின்றீர்கள்.
8. சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக கொழும்பு முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்துக்கு எதிராக, SEP யும் IYSSE யும் கொள்கைப் பிடிப்புடன் போராடி வந்துள்ளதோடு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அரச இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக அது போராடுகின்றது.
இந்தப் போராட்டமானது ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக சர்வதேச சோசலிசத்துக்காக நாம் முன்னெடுக்கின்ற போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும். முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசும் இந்த முன்நோக்கின் அடிப்படையில் மட்டுமே இலவசக் கல்வி உட்பட சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.
IYSSE க்கு எதிராக நீங்கள் விடுத்துள்ள ஜனநாயக-விரோத மிரட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என நாம் உறுதியாக கூறி வைப்பதோடு, எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் எமது அரசியலை முன்னெடுத்து, IYSSE கிளை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இடைவிடாமல் போராடுவோம்.
இது சம்பந்தமாக உங்களது பிரதிபலிப்பை எதிர்பார்க்கின்றோம்.
இப்படிக்கு
கபில பெர்ணான்டோ
IYSSE அழைப்பாளர்
8 டிசம்பர் 2016
No comments:
Post a Comment