ஆட்சிக்கு வரவுள்ள ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இலங்கை அரசியல் ஸ்தாபகம் அழைப்பு விடுக்கின்றது. By Vilani Peiris
அமெரிக்க சார்பு அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் உட்பட இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பகுதியினரும், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் வரவிருக்கும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தமது தயார் நிலையை தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப்புக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையும் அமெரிக்காவும் "ஆழமாக வேரூன்றிய மற்றும் நீண்டு நிலைத்திருக்கும் ஜனநாயக பாரம்பரியங்களாலும் பொதுவான மதிப்புகளாலும் பிணைக்கப்பட்டுள்ளன," என பிரகடனம் செய்தார்.
2015 ஜனவரியில் தான் இலங்கை ஜனாதிபதியாக ஆனதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவு "பலமடைந்துள்ளதோடு" தானும் ட்ரம்பும் “இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை இன்னும் உயர்த்த முடியும் என எதிர்பார்ப்பதாக" சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதேபோன்ற செய்தியை அனுப்பியுள்ளார்.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் அமெரிக்காவின் ஆதரவில் பெரிதும் தங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அப்போதைய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உதவியுடன், ஒபாமா நிர்வாகத்தால் இயக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலமே, சிறிசேன கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நடவடிக்கை, சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்கவின் புவிசார்-மூலோபாய கொள்கையான "ஆசியாவில் முன்னிலையின்" ஒரு பாகமாகவே இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பெய்ஜிங் உடன் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்துவதை வாஷிங்டன் எதிர்த்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களை முன்கொணர்ந்தது.
அமெரிக்காவின் இராஜதந்திர பிரச்சாரம், சீனாவிடம் இருந்து இராஜபக்ஷவை தூர விலக நிர்பந்திப்பதை இலக்காக் கொண்டிருந்தது. அது அவரை வெளியேற்றுவதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் உச்சக் கட்டத்தை கண்டது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை எதிர்த்த இந்தியாவும், திரைமறைவில் ஆட்சி மாற்றத்தை ஆதரித்தது.
சிறிசேன ஜனாதிபதி ஆன உடன், ஒபாமா நிர்வாகமானது மனித உரிமைகள் பேரவையாலான தீர்மானத்தை, ஒரு சர்வதேச விசாரணை என்பதில் இருந்து "உள்நாட்டு விசாரணை" ஆக மாற்ற உதவியது. இது கொழும்பில் புதிய ஆட்சியை பாதுகாக்கும் நோக்கிலான ஒரு வெள்ளைப் பூசும் வேலையாகும்.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மூலோபாய வலையமைப்புடன் விரைவில் இலங்கையை அணிசேர்த்தது. செப்டம்பரில், ஐ.நா.வில் நடந்த விருந்துபசார நிகழ்வில் புதிய ஆட்சியை பாராட்டிய ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை "உலகத்துக்கே ஒரு உதாரணம்" என்று அறிவித்ததுடன் கொழும்புக்கு அமெரிக்கவின் "முழு ஆதரவும்" உள்ளது என்றார்.
வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐ.நா. தூதுவர் சமந்தா பவர் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். அமெரிக்க பசிபிக்-ஆசிய கட்டளையகம் திட்டமிட்டு நாட்டில் அதன் இருப்பையும் இராணுவ உறவுகளையும் கட்டியெழுப்பி வருகின்றது.
சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ட்ரம்ப்புக்கு அனுப்பிய வெற்றி வாழ்த்து செய்திகள் ஒரு புறம் இருக்க, இலங்கை ஆளும் தட்டின் பிரிவுகள், வாஷிங்டன் தற்போதைய நெருக்கமான உறவுகள் அடுத்துவரும் ட்ரம்ப் நிர்வாகத்தினால் பராமரிக்கப்படுமா என்பதையிட்டு பதட்டத்துடன் விவாதித்து வருகின்றன.
நவம்பர் 14 அன்று வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது பற்றிய ஒரு அறிகுறியாகும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய ட்ரம்ப்பின் எதிர்ப்பு, "வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அமெரிக்கவுடன் வணிக உடன்பாடுகளையும் எதிர்பார்க்கும் இலங்கைக்கு நன்றாக பொருந்தவில்லை," என்று அந்த பத்திரிகை எச்சரித்தது. "ஜனநாயகக் கட்சியால் நிறைந்திருந்த இராஜாங்க திணைக்களத்துடனும் மற்றும் அதன் ஊடாக தமிழ் புலம்பெயர்" அமைப்புகளுடனும், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மூலம் உருவாக்கப்பட்ட ஆழமான நட்பை, புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் "மீண்டும் தொடங்க வேண்டி வருமோ" என்பது பற்றி அது கவலை தெரிவித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ உடனடியாக ட்ரம்ப்பை பாராட்டியதுடன் ஒபாமா நிர்வாகம் தனக்கு எதிராக நடத்திய விதம் பற்றி மறைமுகமாக புகார் செய்யவும் அந்த செய்தியை பயன்படுத்திக்கொண்டார். இராஜபக்ஷ, தனது அரசாங்கம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற்றதாக கூறியதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். "குடியரசுக் கட்சி நிர்வாகம், இலங்கைக்கு பெரும் உதவிகளை, குறிப்பாக இராஜதந்திர மற்றும் புலனாய்வுத்துறை ரீதியில் வழங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிப்பதற்கு அவை எனது அரசாங்கத்துக்கு உதவின," என்று அவர் கூறினார்.
ட்ரம்ப் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போர் குற்றச்சாட்டுகள் பற்றிய எந்தவொரு விசாரணையையும் ஆதரிக்க மாட்டார் என்று நம்பும் இராஜபக்ஷ, மேலும் கூறியதாவது: "நாம், அனைத்து நாடுகளதும் இறைமையை மதிப்பதையும், தேசிய அரசுகளின் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய உலக ஒழுங்கை எதிர்பார்க்கிறோம்."
ட்ரம்ப் தொடர்பான இராஜபக்ஷவின் ஆர்வங்கள், பல்வேறு சிங்கள பேரினவாத அமைப்புக்களின் ஆதரவுடனும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதன் சமூக சிக்கனத் திட்டம் மீதும் வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியை சுரண்டிக்கொள்வதன் மூலமும், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அவரது தொடர் முயற்சிகளின் பாகமாக உள்ளன.
இராஜபக்ஷவை ஆதரிப்பவை உட்பட சிங்கள தீவிரவாத குழுக்கள், ட்ரம்ப் தேர்வானதையிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளன. பல சிங்கள பேரினவாத குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு (FNO), அத்தகைய ஒரு அமைப்பாகும்.
எஃப்.என்.ஓ. அழைப்பாளர் குணதாச அமரசேகர, தமது குழு "எந்த சிக்கலும் இன்றி" ட்ரம்ப்பின் வெற்றியை வரவேற்பதோடு அவரின் குடியேற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் பாராட்டுவதாக கடந்த வாரம் கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தேர்தல் முடிவுகள், "பிரதான தேர்தல்களை பெரும்பான்மை சமூகத்தின் பலத்தின் அடிப்படையில் வெல்ல முடியும்" என்பதை காட்டியுள்ளது என அவர் அறிவித்தார், இதை இலங்கை அரசியலுக்கு மாற்றினால், அரசியல் வாழ்வின் அனைத்து அம்சங்கள் மீதும் சிங்களப் பெரும்பான்மையின் ஈவிரக்கமற்ற ஆதிக்கத்தை அர்த்தப்படுத்துகிறது.
எஃப்.என்.ஓ. தற்போது, புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து வருகிறது. கோத்தபாய இராஜபக்ஷ, ட்ரம்ப்பின் "ஸ்தாபகமுறை-எதிர்ப்பு" தோரணையை பாராட்டியுள்ளார்.
இலங்கை தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் குடை அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), கடந்த ஆண்டு சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்த நடவடிக்கையை முழுமையாக அங்கீகரித்துள்ளது. வாஷிங்டன் ஆலோசனையின் படி வேலை செய்யும் கூட்டமைப்பு தலைவர்கள், சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்துக்கு இடைவிடாமல் பாராளுமன்றத்தில் ஆதரவளிப்பதுடன் அதன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரிக்கின்றது. சிறிசேன ஜனாதிபதி ஆனதில் இருந்தே இலங்கைக்கு வருகை தரும் சிரேஷ்ட வாஷிங்டன் அதிகாரிகள், பிராந்தியத்தில் அமெரிக்க புவிசார் மூலோபாய நோக்கங்களை அங்கீகரித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என நம்பினார். அமெரிக்க தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, இரண்டு வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் கிளின்டன் வெற்றியை எதிர்பார்த்து இந்து மத கோவிலிலும் கிறிஸ்துவ தேவாலயத்திலும் பிரார்த்தனை நடத்தினர்.
சிவாஜிலிங்கம், கிளின்டன் வெற்றி பெற்றால் இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல், சமூகப் பிரச்சினைகளை தீர்க்க அது உதவும் என வலியுறுத்தினார். தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி கவலைபடவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்களது சலுகைகளை தக்கவைத்துக்கொள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக அமெரிக்க உதவியைப் பெற முயன்று வருகின்றனர்.
விழிப்படைந்த கூட்டமைப்பு தலைவர்கள் இப்போது புதிய ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து உதவி தேடுகின்றனர். குளோபல் தமிழ் டைம்ஸ் இணையத்தில் வெளியான ஒரு சுருக்கமான செய்தியில், தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சி தலைவருமான ஆர். சம்பந்தன் கூறியதாவது: "நாங்கள் [தமிழ் மக்களின்] பிரச்சினைகளை தீர்க்க, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஆதரவைப் பெறுவோம். நாம் மனித உரிமைக உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை [அவருக்கு] விளக்குவோம்.” அமெரிக்க கொள்கைகள் ட்ரம்ப்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் மாற்றமடையாது என சம்பந்தன் கண்மூடித்தனமாக வலியுறுத்தினார்.
அவர்களது தந்திரோபாய வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும், புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு சேவை செய்ய தயாராக உள்ளன. ஏற்கனவே ஒபாமாவின் கீழ் கொழும்பு ஆட்சி மாற்றம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது போல், இலங்கை ஆளும் உயரடுக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் பூகோள அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தும்.
0 comments :
Post a Comment