நாம் அனைவரும் இனங்களாக இருக்கிறோம் என்பதை விடவும், இலங்கையராக இருக்கிறோம் என்பதே இலட்சணமாக இருக்க முடியும் என கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற பல்வேறு கல்வி மற்றும் புறக்கிருத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாமறிவோம். நாம் இலங்கையர் என்பதை மறந்து இனங்கள் என்று கூறி ஒருவரையொருவர் அழித்திருக்கிறோம்.
கொல்லப்பட்ட ஒருவருடைய சடலத்தையும், எண்ணிக்கை அதிகரிப்பையும் கண்டு இன்னொருவர் மகிழ்ந்திருக்கின்றோம்.
ஆனால், நமது தேசிய கீதத்தில் மட்டும் 'யாமெலாம் ஒரு கருணை அனை பயந்த எழில் கொள் சேய்கள் எனவே....' என்று உச்சரிக்கின்றோம்.
பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளில் பங்குபற்றச் சென்றால் நான் இதனை உங்கள் நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள் என்று இடித்துரைப்பதுண்டு.
இந்த நாட்டின் சொத்துக்களை யார் அழித்தார்கள். ? அந்நிய நாட்டவரா வந்து அழித்தார்கள். ? இலங்கையை ஆண்ட பிரித்தானியர் கூட இந்த நாட்டின் சொத்துக்களை அழிக்கவில்லை.
நாமே நமக்குள் பகைமை கொண்டாடி அழித்தோம். அழித்தவர்களெல்லாம் அந்நியர்களல்ல, இலங்கையர்கள் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.
இனங்களுக்குள்ளே இனங்கள் என்று வட்டங்களைப் போட்டுக் கொண்டு இந்த நாட்டை அழித்திருக்கின்றோம்.
கூடியிருக்கின்ற போது எல்லோரும் ஓர் குலம் என்கின்றோம். ஆனால், தனித்தனியாக ஆகும்போது அங்கு இன பேதம், மத பேதம் என்று எகிறிக்குதிக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். இல்லையேல் இன்னமும் அழிவுதான் மிஞ்சும்.
இந்த நாட்டில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் வாழ்வதை விட இலங்கையர்களே வாழ வேண்டும். இலங்கையர்கள் நம்மில் எத்தனை பேர் என்று நமது ஆழ்மனதைத் தொட்டுப் பார்க்க முடியாமல் இருக்கின்றது.
இலங்கையராக நாமெல்லோரும் இருந்திருதால் இத்தனை அழிவுகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது. மொழியுரிமை கேட்கப்பட்டபோது குரல்வளையே நசுக்கப்பட்டிருக்கின்றது.
ஆக இவையெல்லாம் மறைவதற்கான அடையாளங்கள் இப்பொழுது தெரிந்தாலும் சில பழைய அசைவுகளும் மீண்டும் எழுந்து நடக்க முனைப்பு காட்டப்படுகிறது. ஆயினும், அதனை ஒருவரும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.' என்று உறுதியாக கூறியுள்ளார்.
குறித்த நிகழ்வானது இராஜகுரு கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment