போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என சம்பந்தன் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் வலுவான நீதிமன்றக் கட்டமைப்பு காணப்படுகின்றது. தொலைபேசி அழைப்பின் ஊடாக தீர்ப்பு வழங்கும் நீதிமன்றக் கட்டமைப்பு தற்போது நாட்டில் கிடையாது.
இந்த நீதிமன்றங்களின் ஊடாக போர்க் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட முடியும்.
ஜெனீவா பரிந்துரைகளை அமுல்படுத்தி இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்களை ஈடுபடுத்துவதா, இல்லையா என்பது குறித்து நாட்டின் அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.
கட்டாயமாக வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தவில்லை.
நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை குறித்து உறுதி வழங்க முடிந்த போதிலும், அரசாங்கத்தினால் இந்த விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்குள் கிடையாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள விசாரணைகளில் எந்த வகையிலும் வெளிநாட்டு நீதவான்களை தொடர்பு படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து சம்பந்தனிடம் சிங்கள பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இந்த விடயங்களை தெரிவித்துள்ளர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தெற்கின் சில ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தி அல்லது செய்தியின் கோணத்தை மாற்றியமைத்து தகவல்களை வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஞாயிறு சிங்கள பத்திரிகை ஒன்று போர்க் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு குறித்து பிழையான செய்தி வெளியிடப்பட்டிருந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திரிகையை காண்பித்து நேரடியாக கடுமையான விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment