சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மாணவர் மீதான அடக்குமுறையை எதிர்ப்போம்
Statement of International Students for Social Equality (Sri Lanka)
சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலத்தில் மிகவும் உச்சக் கட்டத்திற்கு அதிகரித்துள்ள மாணவர் மீதான ஒடுக்குமுறையை கண்டிக்கின்றது.
கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மோசமான தாக்குதல்களின் எதிரில், தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்களை அடக்குவதற்காக, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறை வேலைத் திட்டத்தின் கீழ், பல்வேறு காரணங்களைக் காட்டி மாணவர்கள் மீது வகுப்புத் தடை விதிப்பது மற்றும் மாணவர் நிலையை அபகரிப்பதுடன் பொலிஸ் தாக்குதல்கள், கைது செய்தல் மற்றும் நீதிமன்றத்தை பயன்படுத்துதல் போன்ற அரச ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றது.
இந்த ஜனநாயக விரோத பாய்ச்சலானது தொழிலாளர் வர்க்கம் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கப்படும் பாரிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். கல்வித்துறை உட்பட சகல துறைகளிலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து சிக்கன நடவடிக்கைகளுக்கும் விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் தவிடுபொடியாக்குவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
அண்மைக் காலமாக பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே நடந்த பல சம்பவங்கள் இத்தகைய தாக்குதலின் விஷமத்தனமான பண்பினை எடுத்துக் காட்டுகின்றன.
கடந்த மே 5 அன்று, புதிய மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச் சாட்டின் பேரில் இடையிடையே கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் மாணவ மாணவியர் ஏழு பேர், ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது அண்மைக் காலத்தில் பல்கலைகழக மாணவர் குழு ஒன்று நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்ட சம்பவமாக காணப்படுகின்றது.
“பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரை மிரட்டியமை” உட்பட பல்வேறு குற்றச் சாட்டுக்களின் கீழ் கடந்த மே 24 அன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் 11 மாணவர்கள் மீது பகிடிவதை தடைச் சட்டத்தின் கீழ் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு விரோதமாக கிளம்பிய மாணவர் எதிரப்பினை அடக்குவதற்கு அந்தப் பீடமே தற்காலிகமாக மூடபட்டது. பின்னர், நிபந்தனைகளுடன் தண்டைனை நீக்கப்பட்டாலும் மாணவர்கள் குறிப்பிட்ட விரிவுரைகளில் பங்குபற்றவில்லை எனக் கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களுக்கு பரீட்சைகளில் தோற்றுவதற்கான வாய்ப்பை இல்லாமல் ஆக்கியுள்ளது.
இந்தப் பகிடி வதைக் குற்றச்சாட்டுச் சம்பந்தமான விசாரணைகள் எந்தவிதமான நியாயமும் அற்ற முறையில் நடந்ததாகவும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது தொடர்பாக சரியாகத் தெரிந்து கொள்வதற்காகன உரிமையும் கூட தங்களுக்கு இருக்கவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல்கள் மேலும் உக்கிரமடைய உள்ளன. மே 28, பல்கலைகழக மாணவர்கள் கலந்துகொண்ட விழா ஒன்றில் உரையாற்றிய உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பல்கலைக்கழகத்துக்குள் நடைபெறும் சகல நடவடிக்கைகளும் உபவேந்தரினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் கீழ் நிகழவேண்டும் என குறிப்பிட்டார். மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அதற்கான பொறுப்பினை உபவேந்தரே ஏற்க வேண்டும் எனவும், “பல்கலைகழகத்தின் பிரச்சினைகளை பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்ள முடியாவிட்டால் உபவேந்தர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் இருப்பதில் பிரயோசனமில்லை,” எனக் குறிப்பிட்டார்.
இது, ஏதாவது ஒரு ஜனநாயக விரோத சட்டங்களைப் போட்டு, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிசாக செயற்பட வேண்டும் என்பதே ஆகும். நிர்வாக அதிகாரிகளும் சில விரிவுரையாளர் குழுக்களும் பல்கலைக்கழகத்துக்குள் “சட்டத்தினை ஒழுங்காக நடைமுறைப்படுத்தல்” என்ற போர்வையில் அடக்குமுறை வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக தமது சார்பு நிலைப்பாட்டினை தற்போதே வெளிக்காட்டியுள்ளார்கள். அரசின் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்காக, வளாகத்திற்குள் ஒழுங்கினைப் பாதுகாத்தல் மற்றும் புதிய மாணவர்களை பகிடி வதையில் இருந்து பாதுகாத்தல் போன்ற போலிக் காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.
பல்கைலக்கழகத்துக்குள் பொலிசை ஸ்தாபிப்பதற்கும் குற்றவியல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குமான சட்ட ஒழுங்குகள் கொண்டுவரப்படும் என ஒருமுறை பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதோடு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பகிடிவதை தொடர்பாக புதிய சட்டத்திட்டங்கள் அமைக்கப்டும் எனவும் பகிடிவதை தொடர்பாக நடைமுறைக்கு வரும் “சுயாதீனமான நிறுவனத்தை” எல்லாப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் அமைப்பதற்கு அரசு எண்ணியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசு போன்றே தற்போதைய அரசும் பகிடி வதை தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. பல்கைலக்கழகம் உட்பட மொத்த கல்வித் துறையையுமே வெட்டி சீர்குலைவுக்கு உள்ளாக்கியுள்ள ஆளும் வர்க்கத்துக்கு, பகிடிவதை தொடர்பான சட்டம் என்பது, சமூக கட்டுக்கோப்பு என மக்கள் மத்தியில் போலியான அபிப்பிராயத்தை எற்படுத்தி, அதை தமது தாக்குதலுக்கு போர்வையாகப் பயன்படுத்தி மாணவர்களை ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதம் மட்டுமே.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. பகிடிவதையை முழுமையாக எதிர்க்கின்றது. அத்தோடு பல்கலைக் கழகங்களுக்குள் “துணை-கலாச்சாரம்” என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர்கள் பகிடிவதையை நியாயப்படுத்துவதையும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. எதிர்க்கின்றது. அவர்கள் பகிடிவதையை தமது அரசியலின் பக்கம் மாணவர்களை திருப்பிக் கொள்வத்ற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இது முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
முன்னைய ஜனாதிபதி இராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ் கல்விக்கு தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் வேகமாக அபிவிருத்தியடைந்த சூழ்நிலையில், 2010ல் பகிடிவதை தொடர்பான சட்டத்தினை மீண்டும் பலப்படுத்தி அதற்கு விசப்பற்க்கள் பொருத்தப்பட்டன. அந்த நிர்வாகத்தின் கீழ் மாணவர் அமைப்புகள் தடை செய்யப்பட்டதோடு நூற்றுக் கணக்கான மாணவர்களின் வகுப்புகளைச் சீரழித்துக் கைது செய்தமை, இந்த சட்டங்களின் உதவியுடனேயே ஆகும்.
2015ல் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒன்றரை வருடங்களில் அதே தாக்குதல்களை கல்வி மற்றும் ஏனைய சகல துறைகளின் மீதும் மேலும் தீவிரமாக்கியுள்ள அதேவேளை, அவற்றை இன்னும் உச்சக் கட்டத்துக்கு கொண்டு செல்ல தயாராவதையே இது சுட்டிக் காட்டுகின்றது.
இராஜபக்ஷ அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்து தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள முடியாத நிலையில், அவரை அப்புறப்படுத்தி சிரிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தினை அதிகாரத்துக்கு கொண்டுவந்தால், அந்த நிர்வாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்து பிரச்சினைகள் தீர்த்துக்க கொள்ளலாம் என்ற முன்னோக்கு வங்குரோத்தானது என்பதும் அது தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு பொறி என்பதும் கண்முன்னே அம்பலத்துக்கு வந்துள்ளது.
மாணவர்கள், தமக்கு எதிராக வரும் தாக்குதல்களையும் கல்வி உரிமைகள் நசுக்கப்படுவதையும் மற்றும் கல்வி வெட்டுகளையும் எதிராத்துப் போராட வேண்டும் என்பதையே இது தொடர்ந்தும் சுட்டிக் காட்டுகின்றது. அவர்களின் போராளிக் குணத்தில் குறையில்லை எனினும், மாணவர் எதிர்ப்பிற்கு அழைப்பு விடும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வங்குரோத்து அரசியலையே அடிப்டையாக கொண்டுள்ளது. அதன் தலைவர்களின் தத்துவார்த்த குருவாக முன்னிலை சோசலிசக் கட்சி இருக்கின்றது.
இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத, உலகம் எங்கும் ஆளும் வர்க்கங்கள் முன்னெடுக்கும் இந்த தாக்குதல் நட்டவடிக்கைகள், முதலாளித்துவம் முகம் கொடுத்துள்ள வரலாற்று ரீதியான நெருக்கடியில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. 2008ம் ஆண்டு சர்வதேச ரீதியாக வெடித்த பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் ஆழமடைந்து வரும் சூழ்நிலையில் உலகம் எங்கும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கம், இந்த நடைமுறையை அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றது. முதலாளித்துவத்தால் தலையெடுக்க முடியாத இந்த நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சகாப்தத்தில் தொழிலாள வர்க்கம் வெற்றி கொண்ட சகல சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் மீண்டும் பறித்துக்கொள்ளும் தாக்குதலுக்கு புறநிலை ரீதியாக ஆளும் வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது.
2008ன் பின்னர், கிரேக்கத்திலும் ஸ்பெயின் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்குள் மாணவர் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் பாரிய அளவில் வெடித்தன. இந்த தாக்குதல்களுக்கு எதிராகவே, 1991ல் சோவியத் குடியரசின் பொறிவுடன் சோசலிசம் வீழ்ச்சியடைந்துவிட்டது மற்றும் தொழிலாள வர்க்கம் செயலிழந்து விட்டது என, போலி இடதுசாரிகளின் உதவியுடன் முன்னெடுத்து வந்த பிற்போக்கு பிரச்சாரங்களின் ஊடாக, செயற்கையாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த வர்க்கப் போராட்டம், வளர்ச்சியடைந்த தொழில்துறை நாடுகளில் திரும்பவும் ஆரம்பித்து உலகெங்கிலும் மீண்டும் பற்றி எரியும் ஒரு யுகத்தில் நாம் இருக்கின்றோம். பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பாவில் ஒலிக்கும் போராட்டமும், அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டமும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.
கடன் சுமையில் சிக்கி, இந்த உலக நெருக்கடியில் மூழ்கிப் போயிருக்கும் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இதில் இருந்து விடுபட வேறு வழியில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றுக் கொண்ட அரசாங்கம், மேலும் கடனைப் பெற்றுக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. சர்தேச நாணய நிதியத்தின் கடனுடன் கல்வி உட்பட சகல துறைகளிலுமான வெட்டுக்களும் மற்றும் சர்வதேச முதலீட்டுகளுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுப்பதும் பிணைந்துள்ளது.
அரசிற்கு அழுத்தம் கொடுத்து அதனுடைய கொள்கைகளை மாற்றலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு முன்வைக்கும் வேலைத்த திட்டம் இந்த நிலைமைகளின் மத்தியில் முற்றிலும் வங்ரோத்தானதாகும், அதேபோல் மாணவர்களுக்கு ஒரு பொறியும் ஆகும். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாக்களை ஒதுக்கீடு செய்யாமல் கல்வியையோ அல்லது சுகாதார சேவை உட்பட அத்தியாவசிய சமுக சேவைகளையோ நடைமுறைப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் முடியாது. முதலாளித்துவத்தின் எந்த பகுதியினராலும் இதைச் செய்ய முடியாது.
மாணவர்களது உரிமைகள் போன்றே தொழிலாளர்களது உரிமைகளையும் வெற்றி கொள்வதற்கான போராட்டம், அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிராக சோசலிச வேலைத் திட்டத்துக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் போராட்டமாகும். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் உண்மையாகும். இலங்கையிலும் அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, முதலாளித்துவத்தின் பாரிய முதலீடுகள் தொழிலாளர் வர்க்க நிர்வாகத்தின் கீழ் தேசியமயப்படுத்தும் வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான, தொழிலாளர்- விவசாயிகள் அரசாங்கத்தினை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கான போராட்டமாகும்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் அவர்களை இயக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இந்த வேலைத் திட்டத்துக்கு எதிரானவர்கள். அதன் முன்னைய தலைவராக இருந்த நஜீத் இந்திக போன்று, தற்போதைய தலைவர் லஹிரு வீரசேகரவும் கூறுவது, போராட்டம்! போராட்டம்!! போராட்டம்!!! அதுவே ஒரே வேலைத்திட்டம். அண்மையில் பொலிஸ் மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்தபோது, “எம்மைக் கொலை செய்யுங்கள், ஆனால் போராட்டம் முடிவுறாது” என வீரசேகர குறிப்பிட்டார். அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு அரசியலை போர்வைகயாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த போலி வீராவேசம், மாணவர்களை முதலாளித்துவ அமைப்புக்குள் இறுக்கி வைக்கும் ஒரு பொறியாகும்.
போராளிக் குணம் மற்றும் தைரியத்துடனும் உள்ள மாணவர்களை, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்து திசை திருப்பும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் வேலைத் திட்டத்தில் இருந்தும், ஏனைய அரசியலிலும் இருந்தும் விடுபட்டு, சோசலிச வேலைத்திட்டத்தினை அமுல்படுத்தக் கூடிய ஓரே வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தினை அரசியல் ரீதியில் ஆயுதபாணியாக்கும் போராட்டத்தில் ஐக்கியப்படுமாறு ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது. முதலாளித்துவ சார்பு அமைப்புகளே தொழிலாள வரக்கம் எந்தப் போராட்டத்துக்கும் தலைமை கொடுப்பதை தடுத்து திசை திருப்பி வைக்கின்றன.
கல்வி உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள சோசலிச போராட்டத்தில் இணையுமாறு மாணவர்களுக்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது. உங்களது பல்கலைக்கழகங்களுக்குள் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளைக் கட்டியெழுப்புங்கள். ஐ.வை.எஸ்.எஸ்.இ. அமைப்பானது இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியுடன் செயற்படுகின்ற சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் ஒரு பாகமாகும்.
0 comments :
Post a Comment