Tuesday, June 28, 2016

தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட பஷீர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று எடுத்திருக்கும் தீர்மானம்தான் இன்று முஸ்லிம் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.

அவரது அந்தத் தீர்மானத்தின் பின்னணி என்ன ?அவர் இந்த நிலைமைக்குத் தள்ளப்படுவதற்கு காரணம் என்ன?என்று ஆராய்ந்து பார்த்தால் அவரது பிழையான அரசியல் நிலைப்பாடே இதற்கு காரணம் என்பதை அறியலாம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சி பிளவு என்ற தலையிடியைச் சந்திக்கத் தொடங்கியது.அஷ்ரப் உயிருடன் இருந்தபோது தங்களது பதவி ஆசையை நிறைவெற்றிக்கொள்ள முடியாமல் இருந்தவர்கள் அஷ்ரப் மரணமடைந்தபோது உள்ளார மகிழ்ந்தார்கள்.

கட்சியின் அடுத்த தலைவர் ரவுப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற ஒரு காரணத்தை முன்வைத்து-பிரதேசவாதத்தைத் தூண்டி அதனூடாகக் அவர்கள் கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் கொண்டு நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.

அவர்களின் திட்டப்படி கட்சி பிளவுபட்டது.அமைச்சுப் பதவிக் கனவும் நிறைவேறியது.அதன் பிறகு,2005 இல் மு.கா மற்றுமொரு பாரிய பிளவைச் சந்தித்தது.சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த அந்தக் காலப்பகுதியில் மு.காவில் இருந்து ஹுசைன் பைலா,ரிசாத் பதியுதீன் ,அமீர் அலி மற்றும் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் அரசு பக்கம் பல்டி அடித்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்று அவரின் ஆட்சி ஆரம்பமானது.அவரது ஆட்சியின்போதும் மு.காவுக்குள் பிளவுகள் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டன.மஹிந்தவின் உறவினர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் ஊடாக அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு மு.கா உறுப்பினர்கள் சிலர் ரகசியமாக முயற்சி எடுத்தனர்.

இந்தச் சதியை நன்கு உணர்ந்து -தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் தான் மட்டும்தான் கட்சியில் மிஞ்சுவேன் என்பதை அறிந்து ரவூப் ஹக்கீம் கட்சியின் பிளவைத் தடுப்பதற்காக அறைகுறை மனதுடன் மஹிந்த அரசில் போய் இணைந்து கொண்டார்.

தேசிய பட்டியலுக்கான பஷீரின் போராட்டம்


அவ்வாறு இணைந்தும் கூட,அமைச்சுப் பதவிக்காக அங்கு இன்னுமொரு தடவை பிளவு ஏற்பட்டது.கட்சியின் தவிசாளராக இருந்துகொண்டு கட்சியின் தலைவருக்கே தெரியாமல் பஷீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டமைதான் அந்தப் பிளவுக்குக் காரணம்.ஆனால்,அவர் கட்சியை விட்டு வெளியேறவில்லை.

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக ஹக்கீம் ஆட்சி மாற்றத்தையே நாடினார்.இதனால்தான் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மஹிந்தவுக்கு எதிரான அணியில் நின்று போராடினார்.

2015 இல் அவர் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான சாதகமான நிலைமையும் தென்பட்டது.இருந்தாலும்,அதே வருடம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மு.காவுக்கு சாதகமானதாக அமையவில்லை.கடசியைப் பலப்படுத்துவதற்கு ஏதுவான பெறுபேறுகள் அந்தத் தேர்தலில் கிடைக்கவில்லை.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் உட்பட எட்டு ஆசனங்களை மு.கா பெற்றிருந்தது.ஆனால்,2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் உட்பட ஏழு ஆசனங்களை மாத்திரம்தான் பெற்றது.இருந்த ஒன்று பறிபோனது.

திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்கள் மு.காவுக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்தன.அந்த மாவட்டங்கள் கொண்டிருந்த தலா ஒவ்வோர் ஆசனமும் பறிபோனது.பதிலுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனம் அதிகரித்தது.மொத்தத்தில் ஓர் ஆசனம் பறிபோனது.இந்தப் தோல்விதான் தேசியப் பட்டியல் ஆசனப் பகிர்வில் மு.காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஒருவரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஒருவரும் என இருவர் தெரிவான அதேவேளை,வன்னியில் ரிசாத் பதியுதீனின் கட்சியில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஒருவரும் என இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வாறு இரண்டு மாவட்டங்களிலும் தலா இரண்டு எதிரணி எம்பிக்கள் இருக்கின்ற நிலையில்,மு.கா சார்பில் ஓர் எம்பியும் இல்லாவிட்டால் இந்த மாவட்டங்களில் மு.காவை வளர்த்தெடுக்க முடியாது என்பதை
நன்கு உணர்ந்த மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை திருகோணமலைக்கு வழங்கினார்.

இப்படியானதொரு இக்கட்டான நிலையில்தான் தொடர்ச்சியாக தேசிய பட்டியல் எம்பி பதவிகளை அனுபவித்து வந்த அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் செயலாளர் நாயகமாக இருந்த ஹஸன் அலியும் மீண்டும் தேசிய பட்டியல் எம்பி பதவி கேட்டு போராட்டத்தைத் தொடங்கினர்.அந்தப் போராட்டத்தில் தீவிரமாக நின்றவர் பஷீர்.போராட்டம் தோல்வி கண்டத்தைத் தொடர்ந்துதான் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை பஷீர் எடுத்துள்ளார்.

தலைமைத்துவப் பதவியை கைப்பற்ற பஷீர் செய்த சதி

பஷீருக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணம் அவருக்கும் கடசியின் தலைமைத்துவத்துக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்தான்.கடசியின் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு பஷீர் 2010 இல் எடுத்த பிழையான நடவடிக்கைதான் அவரை இந்த நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

மஹிந்த ஆட்சியில் மஹிந்தவின் சகோதரர் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் பஷீர்.பஷீரைக் கொண்டு காட்சியைப் பிளவுபடுத்துவதற்கு பஸில் தீட்டிய திட்டத்துக்கு பஷீர் பலியாகிப் போனார்.

மு.காவின் தலைமைத்துவப் பதவியைப் பறித்து பஷீருக்கு வழங்குவதோடு அவருக்கு ஒரு கெபினட் அமைச்சுப் பதவி மற்றும் அவருடன் வருபவர்களுக்கு இரண்டு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று பஸில் வழங்கிய வாக்குறுதிக்கு பஷீர் மயங்கிப் போனார்.

2010 ஆம் ஆண்டு நோன்பு மாதம் மு.காவின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களுல் ஒருவரான முழக்கம் மஜீதை கொழும்புக்கு அவசரமாக அழைத்த பஷீர் அரசுடன் இணையும் யோசனையை அவரிடம் தெரிவித்தார்.தலைவர் ஹக்கீமிடம் பேசி இது தொடர்பில் முடிவெடுப்போம் என்று மஜீத் சொன்னதும் அதை நிராகரித்து தனது திட்டத்தை பஷீர் மஜீதிடம் கூறினார்.

ஹக்கீம் தலைமைத்துவத்துக்குத் தகுதி அற்றவர்.மு.காவின் தலைவர் பதவியை தனக்குப் பெற்றுத் தருவதாக பஸில் உறுதியளித்துள்ளார் என்று பஷீர் கூறினார்.இப்போதைய பிரதி அமைச்சர் ஏ.எச்.எம்.ஹரீஸையும் இவ்வாறே கொழும்புக்கு அழைத்து இதே விடயத்தில் கூறினார்.

பஷீரின் இந்தத் திட்டத்துடன் ஹரீஸும் முழக்கம் மஜீதும் உடன்படவில்லை.இந்த சம்பவம் எதுவும் தெரியாமல் அப்போது ரவுவ் ஹக்கீம் LLP பரீட்சைக்காக நுவரெலியாவில் படித்துக் கொண்டிருந்தார்.ஹரீஸ் இந்த விடயத்தை உடனடியாக ஹக்கீமிடம் எத்திவைத்தார்.பஸீரின் சதியால் கட்சி மீண்டும் உடைய போகிறது என்பதை உணர்ந்த ஹக்கீம் அரசுடன் இணையும் முடிவை எடுத்து அரசுடன் இணைந்து கொண்டார்.

தனது திட்டம் பிழைத்துப் போனதால் தனித்துச் சென்று கெபினட் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டார் பஷீர்.அப்போது இருந்துதான் தலைவர் ஹக்கீமுக்கும் பஷீருக்கும் இடையிலான பணிப் போர் தொடங்கியது.

பஷீரை ஓரங்கட்டிய ஹக்கீம்

கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் பஷீர் ஆபத்தானவர் என்பதை உணர்ந்த ஹக்கீம் அந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்காக அவருக்கே உரிய பாணியில் காய் நகர்த்தினார்.பஷீருக்கு எதிராக பஷீரின் சொந்த ஊரான ஏறாவூரில் மாற்று ஏற்பாட்டை ஹக்கீம் செய்யத் தொடங்கினார்.

அந்த வகையில்,2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏறாவூரில் இருந்து ஹாபீஸ் நஸீர் அஹம்மட்டைக் களமிறக்கி முதலமைச்சராக ஆக்கினார்.2015 நாடாளுமன்றத் தேர்தலில் செய்யித் அலி சாஹீர் மௌலானாவைக் களமிறக்கி எம்பியாக்கினார்.

இந்த இரண்டு பேரையும் கொண்டு பஷீருக்கு எதிரான தனது திட்டத்தை ஹக்கீம் செவ்வனே நிறைவே ற்றினார்.இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தனக்கு கட்சிக்குள் வாய்ப்பு கிடைக்காது.அவ்வாறு கிடைத்தாலும் வெல்ல முடியாது என்ற நிலை தோன்றியதும் பஷீர் இப்போது தானாகவே ஒதுங்கிக் கொண்டார்.

மேற்படி இருவரும் இல்லாத நிலையில்,பல வருடங்கள் ஏறாவூரில் தனி ராஜ்யம்நடத்தியபோதுகூட தேர்தல்களில் வெல்ல முடியவில்லை என்றால் இனி எப்படி வெல்லமுடியும் என்ற உண்மையை பஷீர் இப்போது நன்கு உணர்ந்ததால்தான் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் மிகவும் திறமையான-அரசியல் சாணக்கியமிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்த பஷீர் காலப் போக்கில் அவர் அரசியலில் எடுத்த பிழையான-தூரநோக்கமற்ற நிலைப்பாடுகள் இன்று அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது.

[எம்.ஐ.முபாறக் ]

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com