தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் வழிகாட்டலை பின்பற்றுமாறு வலியுறுத்தல்.
இலங்கை அரசாங்கம் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்றன தொடர்பில், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அச் சட்டத்தின் கீழ் நபர்களை கைது செய்து தடுத்து வைப்பது தொடர்ந்து வருவதாகவும், கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பரந்தளவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது வரை கைதானவர்களின் மொத்த விபரங்கள் தெரியவரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த நடவடிக்கையானது மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment