Monday, April 11, 2016

பிரபாகரனுக்கு சிலை வைக்க கோரி தனிமனித பிரேரணை கொண்டு வருவாராம் டக்ளஸ்

யுத்தத்தில் மண்கவ்விய எல்லாளனுக்கு துட்டகைமுனு சிலை வைத்தாராம், அந்த அடிப்படையில் சிலை ஒன்றை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனிமனித கோரிக்கை ஒன்று கொண்டுவர உள்ளாராம் என யாழ்.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

போரில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான ஒரு நாள் பிரகடனப்படுத்தவேண்டும் எனவும், இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த நினைவுத்தூபி ஒன்றும் புனித பூமி ஒன்றும் உருவாக்க பாடவேண்டும் என எதிர்வரும் ஆறாம் திகதி தனிமனித பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றில் கொண்டுவரவுள்ளேன்.

துட்டகைமுனு எல்லாளனை போரில் வெற்றிகொண்ட பின்னர் எல்லாளனின் வீரத்தை மதித்து எல்லாளனுக்கு சிலை அமைத்து மதிப்பளித்த போன்று சிலை அமைக்க வேண்டும் எனவும் அந்த பிரேரணையில் கோரவுள்ளேன் என தெரிவித்தார்.

அதன் போது எல்லாளன் என யாரை குறிப்பிடுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது நீங்கள் யாரை சொல்கின்றேன் என புரிந்து கொண்டு உள்ளீர்கள் என நம்புகின்றேன் எனவே அவருடைய பெயரை நான் சொல்ல வேண்டியது இல்லை என சிரித்தவாறே பதில் அளித்தார்.


அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் கூட்டமைப்புடன் பேசுவேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்டவர்களுடன் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பேச்சுக்களை நடாத்த தீர்மானித்து உள்ளதாகவும் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இன பிரச்சனை தீர்வு தொடர்பில் அப்போது ஆட்சியில் இருந்தவர்களால் முன் வைக்கப்பட்டு வந்தன. அவை எதனையும் தமிழர் தரப்பு ஏற்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் இல்லை.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது சிறப்பான ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்தார். அதனை அப்போது இருந்த எதிர்க்கட்சி எரிப்புக் கட்சியாக செயற்பட்டு அந்த தீர்வுத்திட்டத்தை எரித்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சில தமிழ் கட்சியும் அந்த தீர்வுத்திட்டத்தை எரித்து மகிழ்ந்தார்கள்.

அதேபோல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போதிலும் ஒரு தீர்வுத்திட்டத்தை முன் வைத்தார். அதனையும் சரியான முறையில் ஏற்று தீர்வுகளை பெற்றுக்கொள்ள தவறி விட்டனர்.

தற்போது மீண்டும் அரசாங்கம் நல்லதொரு வாய்ப்பினை தந்துள்ளது. இதனை கடந்த காலங்கள் போல் குழப்பாது. சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் யாப்பு திருத்த செயற்பாடு குழுவில் உள்ள 21 பேரில் நானும் ஒருவன் அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை தவற விடாது சிறப்பான தீர்வினை பெற்றுக்கொள்ள முயற்சிப்பேன்.

கடந்த காலங்கள் போல இதனையும் குழப்ப அனுமதிக்க மாட்டேன். அதனால் தமிழ் கட்சிகள் அமைப்புக்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்து பேச்சுக்களை நடாத்தி வருகின்றேன்.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றுடனும் பேச்சுகளை நடாத்த தீர்மானித்து உள்ளேன். என தெரிவித்தார்.

தமிழர்கள் பிரச்சனையை கூட்டமைப்பு தீர்க்க முயலவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நடவடிக்களை முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மத்தியில் , காணி அபகரிப்பு , காணாமல் போனோர், அரசியல் கைதிகள் , வாழ்வாதராம் ஆகிய பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றினை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.

தற்போது வழங்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் பொருத்தம் அற்றது என்கிறார்கள். குடிசைகளிலும் கொட்டில்களில் வாழும் அந்த மக்களுக்கு இந்த வீடுகள் தற்காலிகமாக ஆவது பொருத்தமானதே.

இந்த வீட்டுத்திட்டம் அறிமுகம் செய்ய முன்னரே அரசாங்கத்துடன் பேசி இருக்க வேண்டும் இந்த வீடுகள் எமது கலாச்சாரம் , சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை எமது கலாச்சாரம் சூழலுக்கு ஏற்ற வகையில் வீடுகள் அமைக்க வேண்டும் என

அப்போது வீட்டுத்திட்டம் தொடர்பில் வாய் திறக்காதவர்கள். தற்போது அந்த வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்திய வுடன் அது பொருத்தம் அற்றது என்கிறார்கள்.

அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ளது. இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தோம் என கூருகின்றாகள். அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களின் நலனுக்காக ஏன் அவர்களால் செயற்பட முடியாது உள்ளது.

ஆனால் தாம் அரசாங்கத்துடன் பேசி தமது தனிப்பட்ட நலனுக்காக எதிர்கட்சி தலைவர் பதவி , பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை ஆகியவற்றை பெற்றுக்கொண்டு உள்ளார்கள்.

புதிய அரசாங்கம் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பில் சாதகமான சமிஞைகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிய முறையில் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிராச்னைகளுக்கு தீர்வு காணாது தமது தனிப்பட்ட பயன்களை பெற்றுக் கொள்கின்றாகள்.என தெரிவித்தார்.


தமது குடும்ப நலனுக்காவே கூட்டமைப்பு பாடுபடுகின்றது.


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்பிலையோ சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலையோ கூட்டமைப்பு மௌனம் காக்க காரணம் இந்தியாவில் உள்ள தமது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காகவே ,

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள். அது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மீனவர்களுக்காக குரல் கொடுக்காது தொடர்ந்து மௌனம் காக்கின்றார்கள்.

அதேபோன்று சம்பூரில் அமையவுள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலும் கூட்டமைப்பில் உள்ளவர்கள் மௌனம் காக்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களின் நலன் பாதிக்கப்பட்டு விடுமே அல்லது இந்தியா தம்முடன் கோபம் கொள்ளுமோ எனும் பயத்தினால் தான் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காது தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்கள்.

கூட்டமைப்பில் உள்ளவர்களை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் நலனை விட தமதும் , தமது குடும்பத்தினதும் நலனே முக்கியம் என தெரிவித்தார்................................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com