Sunday, April 24, 2016

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் - பிரதமர் மோடி முன் கண் கலங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லியில் மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதித்றையைக் காப்பாற்றுமாறு பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில் ”நீதித்துறை மீது ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது. நீதிபதிகள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர். இந்திய சிறைகள் நிரம்பி வழிகின்றன.

உயர் நீதிமன்றங்களில் 454 நீதிபதி பதவிகள் நிரப்பப்படமால் காலியாகவே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் 2 கோடி வழக்குகளையே தீர்க்க முடிகிறது. நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களையும், நீதித்துறையின் சுமையையும் குறைத்து இந்திய நீதித்துறையை காப்பாற்றுங்கள்.” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பேசி முடித்து எழுந்து பேசிய பிரதமர் மோடி “நமது அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.” என்று குறிப்பிட்டார். மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com