Friday, April 22, 2016

புதிய பொலிஸ் மா அதிபர் ஆறு விடயங்களில் அவதானம் செலுத்துவாராம். இன்றைய ஊடகச் சந்திப்பு முதலும் இறுதியுமாம்!

பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன் காரணமாக பொலிஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் மொபைல் சேவையினூடாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய 06 பிரதான விடயங்களில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கல்வி, சுகாதாரம், சமயம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் இதனூடாக கவனம் செலுத்தப்படும் என்று இவை மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கிராம சேவகர்கள் பிரிவுகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்கள் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

பொலிஸாரின் நோக்கத்தையும் குறிக்கோளையும் அடைந்து கொள்வதற்கு தகுந்த செயற்பாடாக சிவில் பாதுகாப்பு குழுக்கள் காணப்படுவதாக கூறினார்.

இலங்கை பொலிஸின் முதலாவது நோக்கம் "குற்றங்கள் மற்றும் வன்முறை பயம் அற்ற நம்பிக்கையுடன் வாழக்கூடிய ஒரு அமைதியான சூழலை உருவாக்குவது" என்று அவர் அங்கு தௌ ிவுபடுத்தினார்.

இதற்கிடையில் தான் நடத்தும் முதலாவது மற்றும் இறுதி ஊடக சந்திப்பு இதுவென்றும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

புதிய பொலிஸ் மா அதிபர், இதுவே தான் நாடாத்துகின்ற முதலும் இறுதியுமான ஊடக சந்திப்பு என்று கூறியபோது : நீங்கள் பொலிஸ் மா அதிபராவதற்கு உங்களது முகநூல் ஊடாக பாரிய பிரச்சார நடவடிக்கை ஒன்றை முன்னெடத்தீர்களே அவற்றை நிறுத்தி விடுவீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த பூஜித ஜெயசுந்தர,

தன்னுடைய முகநூல் தொடர்ந்து பயனிக்கும் என்றும் அமெரிக்காவின் ஜனாதிபதி அதை தொடர்ந்து செய்யலாம் என்றால் பொலிஸ் அதிகாரியான எனக்கு ஏன் செய்ய முடியாது என்றும் கேள்வி எழுப்பினார்.

பொலிஸ் மா அதிபரின் கடமையேற்பு நிகழ்வில் சர்வமத நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com