மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் “புலிகளின்” குடும்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன- ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவிக்கிறார்- சமிந்திர பேர்டினான்டோ
வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடந்த வியாழனன்று, யுத்தம் முடிவடந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றன எனத் தெரிவித்தார். பத்தரமுல்லவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களிடம் உரையாற்றிய ஆளுனர் குரே, எல்.ரீ.ரீ.ஈயும் கூட மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை கைப்பற்றி இருந்தது எனத் தெரிவித்தார். எனினும் இன்று கவனம் முழுவதும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களைப் பற்றி மட்டுமே உள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதேபோல ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் மோதல் நடைபெற்றபோது இராணுவம் மட்டுமே அவர்களது ஒரே இலக்காக இருந்தபோதும் அவர்கள் கண்மூடித்தனமான ஆட்கடத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இராணுவத்துக்கு எதிராக பாரபட்சம் காட்டக்கூடாது என ஆளுனர் தெரிவித்தார். யுத்தம் நடைபெற்றபோது, எல்.ரீ.ரீ.ஈ கூட வன்னிப் பிரதேசத்தில் அதன் விமான ஓடு பாதைகள் மற்றும் முக்கிய இராணுவத் தளங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவியிருந்தன.
மோதலின்போது இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களுக்கு திரும்பவேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறார்கள் என சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டியிருப்பதாக ஆளுனர் குரே தெரிவித்தார். இந்தப் பிரச்சினையில் தற்பொழுது இராணுவம் பிடித்துள்ள காணிகள் பற்றியே கவனம் எடுக்கப்பட்ட போதிலும் எல்.ரீ.ரீ.ஈயினால் கைப்பற்றப்பட்ட காணிகளின் விடயங்கள் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நீண்ட காலமாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாடசாலை ஒன்றை சமீபத்தில் திரும்பக் கையளித்தது தொடர்பாகவும் விளக்கிக்கூறிய ஆளுனர் குரே, சில வாரங்களுக்கு முன்னால் கச்சதீவு, புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு கடற்படையினர் உதவிகள் வழங்கியதாகவும் சொன்னார். தனது கடமைகளுக்கு அப்பால் சென்று தேவாலயத்துக்கு உதவியதற்காக அந்த கத்தோலிக்க தேவாலயம் கடற்படையினருக்கு பெரும் புகழாரத்தை வழங்கியிருந்தது. இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த 3,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட கிட்டத்தட்ட 8,000 கத்தோலிக்கர்கள் அங்கு நடைபெற்ற புனித திருப்பலி பூசையில் பங்கெடுத்ததாக ஆளுனர் குரே தெரிவித்தார்.
சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பு மற்று வெசாக் பண்டிகை தொடர்பாக வட பகுதியில் திட்டமிட்டுள்ள செயற்பாடுகளைப் பற்றி விளக்கமளிககையில், நிலமை தொடர்ந்து சீராகி வருவதாக ஆளுனர் குரே தெரிவித்தார். வட மாகாணத்தில் பிரதான வீதி வலையமைப்பிலிருந்து தொலைவில் வசிப்பவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு இன்னும் ஏராளமானவற்றை செய்யவேண்டி உள்ளது. குடி தண்ணீரைப் பெறுவதில் வட பகுதியினர் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள், என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கூட கொழும்பிலிருந்து தண்ணீரை கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தில் உள்ளதாக கூறினார். “நான் எனது வாகனத்தில் தண்ணீரைக் கொண்டு செல்கிறேன், மற்றும் சமீபத்தில் நான் சிறிதளவு நீரை தொடரூந்து மூலம் அனுப்பி வைத்தேன்”. எனினும் ஊடகங்களில் ஒரு பகுதியினர் தனது பயன்பாட்டுக்காக தண்ணீர் பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதாக ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்பியிருந்தனர் என ஆளுனர் சொன்னார்.
முந்தைய அரசாங்கத்தின் தவறாக திட்டமிடப்பட்ட கொள்கைகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் பேசும் மக்களின் ஆதரவை இழந்துள்ளதாக குரே குற்றம் சாட்டினார். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் சமூகத்துடன் உறவுகளை மேம்படுத்துவதற்காக உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என குரே தெரிவித்தார். சிரேஷ்;ட அரசியல்வாதிகள் முந்தைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைப் பீடத்தின் கொள்கைகளை பரப்பி வந்ததின் காரணமாக கடந்த இரண்டு தேசிய வாக்கெடுப்பிலும் கட்சிக்கு தமிழ் வாக்காளர்கள் வழங்கிய ஆதரவில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.
வட பகுதி தமிழ் சமூகம் தங்கள் வாக்குரிமைகளை, 2010 ல் யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் மற்றும் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டில் இல்லாத சமயங்களில் பாதுகாப்பு அமைச்சராக பதில் கடமையாற்றிய எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏன் பெருமளவில் வழங்கினார்கள் என்பதை விளக்க முடியுமா என த ஐலன்ட் அவரிடம் கேட்டது, அதற்கு ஆளுனர் குரே, அவர்களின் வாக்குகள் அவர்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை எனப் பதிலளித்தார். வாக்காளர்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கிற்கு பெருமளவு ஆட்பட்டிருந்தார்கள் என ஆளுனர் தெரிவித்தார். நவம்பர் 2005 ஜனாதிபதி தேர்தலின்போது, எல்.ரீ.ரீ.ஈ சார்பாக ரி.என்.ஏ வட பகுதி தமிழர்களை தேர்தலை பகிஷ்கரிக்கும்படி வழிகாட்டியதைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பு எந்தவித விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப் படக்கூடாது என ஆளுனர் குரே தெரிவித்தார். “யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர். ஜெனரல். மகேஷ் சேனநாயக்காவுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறேன். உண்மையில் இன்றுகூட அவருடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என அவர் வியாழனன்று தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியல் ரீதியாக வேறுபட்டவர்களாக இருந்த போதிலும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் தனது பணிகளுக்கு தடையாக இருக்கவில்லை என குரே சென்னார். அனுபவம் வாய்ந்த இராஜதந்திரியான எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்காரவின் இடத்திற்கு சமீபத்தில் குரே தெரிவானார்.
அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் பற்றி கருத்து nதிரிவிக்கையில், அத்தகைய நடத்தைகள் அவர்களது பலவீனத்தை பிரதிபலிக்கிறது என ஆளுனர் குரே சொன்னார். குழப்பம் ஏற்படுத்துவதால் அவர்கள் ஆதரவு பெற முடியும் என நம்புவது அவர்கள் பக்கம் உள்ள ஒரு தவறாகிவிடுகிறது என ஆளுனர் குரே சொன்னார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
0 comments :
Post a Comment