விக்கிக்கு சுவாமிநாதன் சாட்டையடி
வடக்கு மாகாணசபை, செயற்பாடுகள் அற்ற கதைகளை சொல்ல மாத்திரமே தெரிந்த சபையாக மாறியுள்ளது என்று மீள்குடியேற்றத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீடுகள் திட்டத்தை நிராகரிப்பதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே சுவாமிநாதன் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வடக்கின் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அதில் வடக்கில் அவசரமாக தேவைப்படும் வீடுகள், வாழ்க்கை முன்னேற்றம், அடித்தள வசதிகள், விவசாயம், மீன்பிடி மற்றும் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டே மத்திய அரசாங்கம் 65 வீடுகள் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்புக்காக நாட்டை இரண்டாக பிரித்து ஏனைய 7 மாகாணங்களையும் ஒன்றாக்கும் விக்னேஸ்வரனின் யோசனை தமிழ் மக்களுக்கு பயன்தராத ஒரு விடயமாகும் என்று சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பொறுத்தவரை, அதனை வடக்கு மாகாணசபை முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அந்த சபையின் எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பதை சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விடயங்களுக்காக மக்களின் நலன்களை பாதிக்கும் விடயங்களுக்கு முடிவு கட்டவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் வை-பை வசதியுடனான முழுமை வசதிகளை கொண்ட வீடுகளை நிர்மாணிக்க முனைகின்றபோது விக்னேஸ்வரன், 30 வருடங்களாக இடைதங்கல் முகாம்களில் வருந்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு வசதிகளற்ற வீடுகளை கோருவதாக சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவுக்கு காட்டுவதற்காகவே அரசாங்கம் இவ்வாறான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டையும் சுவாமிநாதன் மறுத்துள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் இந்தப் பிரச்சினையை தீர்க்க அக்கறையுடன் செயற்படும் போது அதனை பயன்படுத்திக்கொள்ள குறித்த அரசியல் தரப்புக்கள் முனைய வேண்டும்.
இதனைவிடுத்து ஒருவரை நாளாந்தம் முட்டாளாக்க முடியாது என்றும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment