அதிகாரப் பகிர்வை அர்த்தமுடையதாக்க தமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணையத் தயார் - ஹக்கீம்
புதிய அரசமைப்பையும் அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வையும் அர்த்தமுடையதாக - அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கு அரசமைப்பு உருவாக்கத்தின் முயற்சிக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
-இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் அவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அரசமைப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
1988 ஆம் ஆண்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து அது அதன் அரசியல் செயற்பாட்டை முடுக்கியது.தெற்கில் சிங்கள இளைஞர்களும் வடக்கில் தமிழ் இளைஞர்களும் போராட்ட த்தில் குதித்திருந்த ஒரு சூழ்நிலையில்தான் எமது கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அப்போது முதல் இப்போது வரை நாம் அரசமைப்புத் திருந்தங்கள் தொடர்பில் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றோம். பல சர்வ கட்சி கூட்டங்களிலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களிலும் நாம் பங்கேற்று மிகவும் காத்திரமான பணியை வகுத்திருக்கின்றோம்.
மங்கள முனசிங்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு,தேர்தல் மாற்றம் தொடர்பான தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத் தெரிவுக் குழு மற்றும் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு போன்ற பல குழுக்களுடன் இணைந்து எமது கட்சி மேற்படி விடயத்தில் பணியாற்றி வந்திருக்கின்றது.
தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பான தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொண்ட நானும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முத்து சிவலிங்கமும் அந்தக் குழுவுக்கு முன்வைத்த ஆவணமானது மிக முக்கியமானது.
அதேபோல்,17,18 மற்றும் 19 ஆகிய அரசமைப்பின் திருத்தங்கள் தொடர்பிலும் நாம் காத்திரமான பங்களிப்பை வழங்கி இருந்தோம்.அதில் 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு நாம் வழங்கிய ஆதரவானது கண்ணைத் திறந்துகொண்டு குழிக்குள் வீழ்ந்ததற்கு சமமாகும்.அரசியல் ரீதியாக நான் எதிர்கொண்ட சவால்கள்,சிக்கல்கள் போன்றவற்றை எதிர்காலம் ஆவணப்படுத்தும்.
அந்த வரிசையில்தான் இப்போது உருவாக்கப்படப் போகின்ற புதிய அரசமைப்புக்கும் நாம் காத்திரமான பங்களிப்பை வழங்கவுள்ளோம்.அது தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகப் பேசுவதற்குத்தான் நாம் இந்த செயலமர்வைக் கூட்டியுள்ளோம்.
மக்களின் அனைத்துப் பிரதிநிகளின் பங்களிப்புடன் புதிய அரசமைப்பு ஒன்று உருவாகப் போகின்றது என்ற மகிழ்ச்சியில் மக்கள் இப்போது உள்ளனர்.
புதிய அரசமைப்பு அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.அதை அர்த்தமுடையதாக ஆக்குவதற்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வளங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
இன்று தேசிய அரசு ஒன்று உள்ள நிலையில் அந்தத் தேசிய அரசில் உள்ள பிரதான இரண்டு கட்சிகளும் தனித் தனியாக ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றிப் பேசுவதைக் காணக்கூடியாதாக இருக்கின்றது.தங்களின் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் முறைமையையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அனால் இதைக் கடுமையாக எதிர்த்திருந்தேன்.
அரசமைப்பு சபையும் இன்று அரசியல்வாதிகள் நிறைந்த சபையாக மாறிவிட்டது.அதில் சிவில் பிரதிநிதிகள் மூவர்தான் உள்ளனர்.
ஆகவே இப்படியானதொரு நிலையில் இரண்டு சிறுபான்மை இன மக்களும் இணைந்து அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை-காத்திரமான அரசமைப்பை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.என்றார்.
0 comments :
Post a Comment