Friday, April 22, 2016

பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்.

கொடூரமானச் செயல்களுக்கு பெயர் பெற்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறது.

இதற்காக மொசூலில் பெண்களை வேட்டையாடி வரும் ஐ.எஸ். அமைப்பு, அவர்களைக் கடத்தி வந்து தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை தற்காலிகமாக மணந்து கொள்ள கட்டளையிடுகின்றனர், இந்த உத்தரவுக்கு கீழ்படியாத பெண்களை, சில சமயங்களில் அவர்களது குடும்பத்துடன் கொலை செய்து வருகிறது ஐஎஸ். இவ்வாறு உத்தரவுக்குக் கீழ்படியாத 250 பெண்களை கொலை செய்ததாக குருதிஷ் ஜனநாயகக் கட்சிச் செய்தித் தொடர்பாளர் சயீத் மமூஸ்னி தெரிவித்தார்.

சில தருணங்களில் உத்தரவுக்கு கீழபடிய மறுக்கும் பெண்களுடன் அவர்களது குடும்பத்தினரையும் ஐஎஸ் கொலை செய்து வருவதாக குர்திஷ் செய்தி நிறுவனம் அஹ்லுல்பய்த் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். பிடியில் இருக்கும் மொசூலில் பெண்கள் தங்கள் விருப்பப்படி மணமகனைத் தேர்வு செய்து கொள்ள அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் தனியாகச் செல்லவும் அனுமதி இல்லை என்று குர்திஸ்தான் நாட்டுப்பற்று கட்சி அதிகாரியான கயாஸ் சுர்ச்சி மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை பகிர்ந்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களை கொலை செய்த அதே விதத்தில்தான் இப்போதைய பெண் கொலைகளும் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 2014-ல் 500 யாஜிதி இனப்பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அக்டோபரில் மேலும் 500 யாஜிதி பெண்கள், சிறுமிகளை ஐ.எஸ். கடத்தி சென்றது.

இந்நிலையில் கடந்த திங்களன்று அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவிக்கையில், “இந்த ஆண்டு இறுதிவாக்கில் ஐ.எஸ் பிடியிலிருந்து மொசூல் விடுபடுவதற்கான நிலைமைகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com