Friday, April 15, 2016

13வது திருத்த அரசியல்- அ. வரதராஜப்பெருமாள்

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே!

1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988ல் மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்து 2013ம் ஆண்டோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சம்பந்தமாக பல கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளன. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன.

2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நாள் தொடக்கம் எப்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென 2010ம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் 2012ம் ஆண்டுக்கிடையில் இலங்கையில் நான் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்தவர்கள் மற்றும் தமிழ்த் தலைவர்களிடம் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். இந்தியாவிலும் அதே கருத்தை பல்வேறு மட்டத்திலும் வலியுறுத்தி வந்தேன்.

தெற்கில் எப்போதும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் கட்சியே மாகாணங்களிலும் ஆட்சிக்கு வருவது இதுவரை வழமையாக உள்ளது. 2007ம் ஆண்டு கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று திரு பிள்ளையான் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்த போதும் அது அரசியல் யாப்பு ரீதியில் அதற்குரிய அதிகாரங்களோடு செயற்பட முடியாமற் போன காரணங்களும் நெருக்கடிகளும் அங்கு இருந்தன. எனவே வடக்கு மாகாண சபை ஒன்றே இப்போதைக்கு அனைத்து மாகாண சபைகளுக்குமான அதிகாரப் பகிர்வு விடயத்தை காத்திரமாக நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கும் என நம்பியதே அதற்குக் காரணம்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் நிலைமை ஆரம்பித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றைப் பார்த்த போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறப் போகிறதோ – எதிர்ப்பு அரசியல் மட்டும்தான் எப்போதும் முன்னணி வகிக்கப் போகிறதோ – ஆளும் அரசியலிலும் தமிழர்களுக்கு உரிமைப் பங்குண்டு என்பது எக்காலத்தும் நிறுவப் படாது போகுமோ என்ற சந்தேகமே எழுந்தது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குவேட்டை அரசியலை நடத்தினாலும் ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட முடியும் – செயற்பட முயற்சிக்கும் என்ற எதிர்பார்க்கை என்னிடம் பல சந்தேகங்கள் மத்திலும் இருந்தது. அதிலும் குறிப்பாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவங்களும் கொண்ட திரு விக்கினேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்று உட்கட்சி எதிர்ப்புக்களையும் மீறி அவர் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற போது தனக்கு சரியெனப்பட்டதை செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள் முரண்பாடுகள், வெளிநாட்டுப் புலி ஆதரவாளர்களின் நெருக்குதல்கள் யாழ்ப்பாண மையத் தளங்களில் நிலவும் சிங்கள விரோத மற்றும் அரச விரோத அரசியலின் செல்வாக்கு போன்றனவற்றின் காரணமாக அவர் பல சிக்கலை எதிர்நோக்குவார் என்ற கணிப்புகளின் மத்தியிலும் சம்பந்தர் சுமந்திரன் போன்றோரின் ஆதரவுடன் திரு விக்கினேஸ்வரன் அதிகாரப் பகிர்வு விடயங்களை யதார்த்த பூர்வமாக நகர்த்துவார் என்ற எதிர்பார்க்கையும் அதைச் செய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் உடையவர் என்ற நம்பிக்கையும் எனக்குள் இருந்தன.

அவர் தனக்குத் துணையாக தமிழர்கள் மத்தியில் இருக்கும் அனுபவங்கள் நிறைந்த நிர்வாகிகளின் துணையைத் திரட்டிக் கொள்வார், இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான அனைத்து இன சட்ட வல்லுனர்களினதும் துணையைப் பெற்றுக் கொள்வார், இலங்கையின் அனைத்துக் கட்சிகளிலும் உள்ள அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர்களின் அணைவைத் திரட்டிக் கொள்வார், தமது கூட்டமைப்புக்காரர்களின் மத்தியில் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான யதார்த்த அணுகுமுறைகளைப் புரிய வைத்து தம்மோடு முன்கொண்டு செல்வார் என்ற நம்பிக்கைகள் என்னுள் பல வகைப்பட்ட சந்தேகங்களுக்கு இடையேயும் நடமாடிக்; கொண்டிருந்தது.
1988ல் நாங்கள் வடக்கு கிழக்கு மாகாண சபைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வேளையில் அந்தக் காலத்தில் எங்களுக்கு இருந்த தற்றுணிபுகளையும் சாதித்தே ஆக வேண்டும் என்ற ஓர்மத்தையும் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அன்றைக்கு நாங்கள் பெருந்தொகையான தமிழர்களால் மாகாண சபையை எற்றதற்காக துரோகிகளாக பார்க்கப்பட்டோம். நாங்கள் எதிர்நோக்கிய பயங்கரவாத எதிர்ப்புகள் உயிர் ஆபத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உள்நாட்டிலும் தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் இருந்த அளவுக்கு ஆதரவுகள் இருக்கவில்லை. சோவியத் யூனியன் அன்றைக்கு உயிரோடு இருந்த உலகசூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவுடன் நாம் மாகாணசபையை நடத்தியதால் வெள்ளைக்கார மேலைத்தேச நாடுகளின் ஊடகங்களும் அவற்றின் பல நிறுவனங்களும் எங்களுக்கு எதிராக செயற்பட்டன. எங்களைவிட மிகப் பல மடங்கு அதிகமான இந்திய ஆதரவு மற்றும் உலக நாடுகளின் ஆதரவு இவர்களுக்கு உண்டு. ஒப்பிட்டால் இன்னும் பல வேறுபாடுகள் – இடைவெளிகள்.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைமையை எமது அன்றைய நிலைமைகளோடு பொருத்திப் பார்த்தால் திரு விக்கினேஸ்வரன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பல பத்து மடங்கு ஆதரவுத் தளங்களை எங்கும் கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய அளவு நெருக்கடிகளே இவர்களுக்கு உண்டு. எங்களுடைய நிலைமையேர் முற்றமுழுதாக வேறாக இருந்தது. அன்று எங்களை பொதுமக்களில் எவர் ஆதரித்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் – நாங்கள் யாரையும் தேடிப் போய்ச் சந்தித்தாலும் அவர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் இவர்களுக்கு அரச படையினர் உத்தியோக பூர்வமாக பாதுகாப்பையும் வழங்கிக்கொண்டு அவ்வப்போது இவர்களின் பொதுக் கூட்டங்களில் புகுந்து குழப்பம் விளைவித்தல், இருட்டில் வீட்டு யன்னல்களுக்கு கல்எறிதல், சாணியடித்தல், எஞ்சின் ஒயில் அடித்தல் ஆக மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் ஆஸ்ப்பத்திரியில் படுத்தால் சரியாகிவிடும் கணக்கில் புறமுதுகில் தடியடி நடத்திவிட்டு ஓடிவிடுதல் என நடத்தும் நாடகங்களைத் தவிர சரீரரீதியான ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு கிடையாது. அரசபடைகளின் குழப்ப நாடகங்கள் உண்மையில் இவர்களுக்கு சர்வதேச புகழையும் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அரசியற் செல்வாக்கையும் குவித்துக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டவையோ என்று சந்தேகம் கொள்ளும் வகையாகவே சம்பவங்கள் உள்ளன. இவ்வாறாக பல சாதகமான வாய்ப்;புகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதுவும் திரு விக்கினேஸ்வரன் அவர்களை முதலமைச்சராகக் கொண்டுள்ள நிலையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சாதனைகளை நகர்த்துவார்கள் அதற்கான அரசியலை ஆக்கபூர்வமாக முன்னோக்கி உருட்டுவார்கள் என நான் எதிர்பார்த்ததில் தவறேதும் இருக்க முடியாது.

வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. எங்களுக்குக் கிடைத்ததோ ஆறு மாதங்கள் மட்டும்தான்; அதற்குப் பிறகு பிரபாகரனுக்கும் பிரேமதாசாவுக்கம் இடையே அரசியற் தந்திரோபாய தேன்நிலவு தொடங்கியதால் அதற்கு மேல் எல்லாம் தடைப்படத் தொடங்கி விட்டன. அந்த ஓராண்டுகளில் நாம் செய்தவைகள் இன்றும் பேசப்படும் பொருளாக உள்ளன. நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டதாக கவலைப்பட்டோரை இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும் கண்டிருக்கின்றேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கே ஆறு மாதங்களில் இவ்வளவு தூரம் சமாதானமான பாதுகாப்பான சூழல் இருந்தும் வடக்கு மாகாண சபை இதுவரை நிறைவேற்றியிருப்பவை என்னென்ன என்ற கேள்வி எழுகின்றது. மாகாணசபையின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்துக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத சில தீர்மானங்கள் மற்றும் 2013ம் ஆண்டுக்காக அரசு வழங்கிய நிதியை ஆளுநர் செலவழிப்பதற்கான சட்ட அங்கீகாரம் வழங்கியது என்பவற்றைத் தவிர வேறெதனையும் செய்ததாக என்னால் அறிய முடியவில்லை.

அரசாங்கம் நிதி எதுவும் தரவில்லை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகின்றது. கொழும்பு அரசாங்கம் ஒதுக்கிய 1700 கோடி ரூபாயில் 500 கோடி ரூபா மூலதன செலவுகளுக்கு உரியது. ஒதுக்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எந்தெந்த திட்டங்களுக்காக அவை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களின் நிறைவேற்று நிலைகள் இப்போது என்ன நிலையில் உள்ளன என்பதற்கான திட்ட நிறைவேற்று மதிப்பு அறிக்கையை யாரும் பார்த்ததாகவும் என்னால் அறிய முடியவில்லை. நான் தூர உள்ளவன் என்பதால் என்னால் அறிய முடியாமல் இருக்கவும் கூடும். மாகாண சபையின் இணையத் தளமாவது அனைத்து தகவல்களையும் தாங்க வேண்டும்.

மாகாண அமைச்சர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக என்ன செய்கிறார்கள். ஒரு சாதாரண அரசசார்பற்ற தொண்டு நிறுவன அளவுக்காயினும் அவர்களால் ஏதாவது செய்யப்படுகின்றனவா? இவற்றிற்கும் பதில் ஆளுநர் எந்த அதிகாரங்களையும் அமைச்சர்களுக்குத் தரவில்லை என்பதுவும் அரசாங்கம் அமைச்சுக்களுக்கு போதிய அளவு நிதி எதுவும் தரவில்லை என்பதுவும் மாகாணசபையின் செயலாளர்களும் மற்றும் அதிகாரிகளும் ஆளுநரின் சொற்படி மட்டுமே நடக்கிறார்கள் அமைச்சர்களின் கட்டளைகளுக்க உட்பட்டவர்களாக அவர்கள் செயற்படுகிறார்கள் இல்லை என்பவைதான் பதில்களா? ஐந்து வருடங்கள் முடிய இதைத்தான் மக்களுக்குச் சொல்லப் போகின்றார்களா?

இங்கு நான் யாரையும் விமர்சிக்கவோ அல்லது யாருக்கும் வழிகாட்டவோ புத்தி சொல்லவோ முயலவில்லை. மாறாக இலங்கையில் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்த அரசியல் யாப்பு ஆகியன தொடர்பாக எனக்குள் எழுந்துள்ள சில கேள்விகளையே முன் வைக்கவுள்ளேன். அவற்றிற்கு விடை கிடைத்தால் அவை தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு பயன்படும் என்று கருதியே இக்கேள்விகளை எழுப்புகிறேன்.

நான் தமிழர்களின் அரசியற் தலைவன் அல்ல. தமிழர்களின் அரசியலில ஒரு சிறிய தலைவனாக இருப்பதற்கு வேண்டிய தகுதியோ திறமையோ கூட எனக்குக் கிடையாது. அதிலும் இப்போது தமிழர்களின் அரசியலில் பங்காளனாக இருக்கும் வாய்ப்பற்றவனாக என்னை நானே ஆக்கிக் கொண்டுள்ளேன். இது என்னுடைய நிலை மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கிற பல லட்சக்கணக்கானவர்களின் நிலையும் அப்படித்தான். எவ்வாறாயினும் தமிழர்களின் நலனில் எனக்குள்ள அக்கறையில் சந்தேகம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். மேலும் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு தொடர்பாக சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பை அதிஷ்டவசமாக எனக்கு வரலாறு தந்தது. அந்த அக்கறை அனுபவத்திலிருந்தே இதை எழுத முற்பட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்த வரையில் கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருக்கின்றது என்றும் மாகாண சபைகளுக்கு போதிய அளவு வழங்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம்.

இருப்பினும் கொழும்பு அரசாங்கத்தின் தயவில் தங்கி இருக்காமல், நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக இப்போதுள்ள மாகாணசபை பயனுடையதாக அமைவதற்கு ஏதாவது முயற்சித்துப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லவே இல்லையா? 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பயனுள்ளவற்றை சுயமாகச் செய்வதற்கு ஏதாவது அதிகாரங்கள் உள்ளனவா இல்லையா? என்பனவற்றை கேள்விக்கு உள்ளாக்கி விடை காண முற்படுவதே எனது நோக்கம்.

திரு விக்கினேஸ்வரனின் அறிவாற்றல் பற்றியோ அனுபவ ஆழம் பற்றியோ கேள்வி எழுப்பும் அளவுக்கு நான் அறிவோ அனுபவமோ உடையவன் அல்ல. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13வது அரசியல் யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான அவர்களது பாத்திரத்தை – சரியாக முழுமையாக – கடமை தவறாமல் – பொறுப்போடும் அக்கறையோடும் – ஆற்றுகிறார்களா? என்ற கேள்வியே என்னை ஆண்டு கொண்டிருக்கின்றது அதிலிருந்தே எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.
அவை அடுத்த கடிதத்தில் தொடரும்

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com