Wednesday, March 23, 2016

இலங்கை மாவோவாதக் கட்சி "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை" பரிந்துரைக்கின்றது. By Subash Somachandran and S. Jayanth

இலங்கையில் மாவோவாத குழுவான புதிய ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி (பு.ஜ.மா.லெ.க.), "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு" எதிராக "முற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு" ஆதரவை வெளிப்படுத்துவதன் மூலம், அழுகிப்போன தமிழ் இனவாத அரசியலுக்கு புத்துயிரூட்ட முயற்சிக்கின்றது. பு.ஜ.மா.லெ.க., மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக இருக்கும் வட இலங்கையையும் தமிழ் பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய மலையகப் பிரதேசத்தையும் தளமாகக் கொண்டு செயற்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு.) மற்றும் பல சிவில் அமைப்புகளும் சேர்ந்து புதிதாக ஸ்தாபித்த தமிழ் மக்கள் பேரவையைப் பற்றி, தமிழ் பத்திரிகையான உதயன், பு.ஜ.மா.லெ.க. பொதுச் செயலாளர் எஸ்.கே. செந்திவேலிடம் பெற்ற பேட்டி ஒன்றை டிசம்பர் 29 பிரசுரித்திருந்தது.

செந்திவேல் அறிவித்ததாவது: "மக்களுக்கு மாற்றம் வேண்டும். அவர்கள் அடிப்படை கொள்கையில் இருந்து மாற்றுக் கொள்கைக்கு வர வேண்டும். பிற்போக்கு தமிழ் தேசியவாதம் தான் உள்ளது. முற்போக்கு தமிழ் தேசியவாதம் வரவேண்டும்." தமிழ் கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணியும் "பிற்போக்கு தமிழ் தேசியவாத கொள்கைகளை” பின்பற்றுவதாக கூறிக்கொண்ட அவர், பு.ஜ.மா.லெ.க. "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை" முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வேறுபடுத்தல் பொய்யானதாகும். எந்த வடிவத்திலும், தமிழ் தேசியவாதத்தில் அல்லது உண்மையில் தேசியவாதத்தில் எந்தவித முற்போக்கும் கிடையாது. 1980களில், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ.), இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அனைத்தும், கூர்மையாக வலதுபக்கம் திரும்பி, சகலவித ஏகாதிபத்திய-விரோத நிலைப்பாடுகளையும் கைவிட்டு, பெரும் வல்லரசுகளிடம் சரணாகதி அடைய முயன்றன. இந்த அரசியல் மாற்றமானது இந்த அமைப்புக்கள் அனைத்தும் அடித்தளமாக கொண்டிருந்த தேசிய பொருளாதார ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்துக்கு முழுமையாக குழிபறித்த, உற்பத்தியின் பூகோளமயமாக்கலின் தாக்கத்தை பிரதிபலித்தது.

2009ல் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டமை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தமிழ் முதலாளித்துவ அரசை அமைக்கும் அதன் திவாலான தேசியவாத முன்னோக்கின் விளைவே ஆகும். அதன் இரக்கமற்ற ஜனநாயக-விரோத வழிமுறைகளால் தமிழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அந்நியப்பட்ட போதிலும் கூட, கொழும்பு அரசாங்கத்தின் குற்றங்களுக்கு முழு சிங்கள மக்களையும் கண்டனம் செய்தமை, புலிகள் இயக்கம் இலங்கையில் அல்லது மிகவும் பரந்தளவில் தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுக்க இலாயக்கற்றது என்பதை உறுதி செய்தது. இலங்கை இராணுவம் புலிகளின் கடைசி கோட்டைகளையும் சுற்றிவளைத்த போது கூட, அவர்கள் கொழும்பை ஆதரித்த அதே பெரும் வல்லரசுகளுக்கே பயனற்ற வேண்டுகோள்களை விடுத்தனர்.

கூட்டமைப்பில் இருந்தும் அதன் "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தில்" இருந்தும் தன்னை தூர விலக்கிக்கொள்ள பு.ஜ.மா.லெ.க. மேற்கொள்ளும் முயற்சியானது புலிகளை ஆதரித்த இந்த அனைத்து அமைப்புக்களுக்குள்ளும் நிலவும் நெருக்கடிக்கு மற்றொரு அடையாளமாகும். ஏதாவதொரு வடிவத்தில் அவர்கள் தமிழ் பிரிவினைவாதத்தை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்துவது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஜனநாயக உரிமைகளுக்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதை தடுப்பதற்கே சேவை செய்கிறது.

இப்போது வட மாகாண சபையை ஆட்சி செய்யும் தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் தொழில் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அதே சமயம், கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள தமிழ் கூட்டமைப்பு, விலைபோகும் தமிழ் முதலாளித்துவத்தின் நன்மைக்காக வடக்கு மற்றும் கிழக்கில் கூடுதலான அதிகாரப் "பரவலாக்கலுக்காக" அமெரிக்க, இந்தியா மற்றும் ஏனைய சக்திகளுடன் சதியில் ஈடுபட்டுள்ளது.

பு.ஜ.மா.லெ.க., தமிழ்த் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பை "முற்போக்கு தமிழ் தேசியவாதம்" என்ற முட்டுச் சந்துக்குள் திருப்பிவிட முயற்சிக்கின்றது. அதன் 2015 காங்கிரஸ் ஆவணத்தில், இந்த மாவோவாதக் கட்சி, "பிற்போக்கு தமிழ் தேசியவாத தலைமைத்துவத்தை" உயர் சாதி மேலாதிக்கத்தையும் ஏகாதிபத்திய விசுவாசத்தையும் கடைபிடிக்கின்ற ஏனைய இனத்தவர்களுடனான ஐக்கியத்தை எதிர்க்கின்ற "மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட ஒரு உயர் தட்டு" என்றும் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு எதிராக, "முற்போக்கு தமிழ் தேசியவாதமானது" “அனைத்து உழைக்கும் மக்களதும் ஜனநாயகத்தை காக்கவும், பொருளாதார ரீதியில் சுயமாக தங்கியிருப்பதற்கும் மற்றும் உற்பத்தி தொழில் துறையை அபிவிருத்தி செய்வதையும் வலியுறுத்துவதற்கு முன்னுரிமை” கொடுக்க வேண்டும், "இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேலாதிக்க சக்திகளுக்கு தலைகுணிய” மறுப்பதோடு ஏனைய சமூகத்தோடு ஐக்கியப்பட வேண்டும் என்று பு.ஜ.மா.லெ.க. பிரகடனம் செய்கின்றது.

ஸ்ராலினிச / மாவோவாத இரண்டு கட்ட கோட்பாட்டின் வழியில், பு.ஜ.மா.லெ.க. வேலைத்திட்டம் சோசலிசத்துக்கானது அல்ல, மாறாக, "முற்போக்கு" முதலாளித்துவம் என்று அழைக்கப்படுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதை அர்த்தப்படுத்தும் ஒரு "புதிய ஜனநாயகப் புரட்சி" ஆகும். யதார்த்தத்தில், இந்த மாவோவாதிகள் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை கண்காணிக்கும் வகிபாகத்தை ஆற்றுவர்.

பு.ஜ.மா.லெ.க.யின் முன்னோக்கின் இனவாத பண்பு, இன மற்றும் மத அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை மேலும் பிளவுபடுத்தும் அதன் பிரேரணைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மாநாட்டு ஆவணம், “ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகத்திற்கு சுயாட்சி” வழங்க அழைப்பு விடுக்கின்றது. “மலையக தமிழர்கள் ஒரு தேசிய இனமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்," என அது கூறுகின்றது.

சுயாட்சி அலகுகளுக்கான பிரேரணைக்கும், தொழிலாளர்களின் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக, அது இனவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கான முன்மொழிவாகும். இது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் தமது பங்கை பெரிதாக்கிக்கொள்ளும் வழிமுறையாக, சுயாட்சியைக் கோருவதற்கு பல்வேறு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தட்டுக்களுக்கு விடுக்கும் ஒரு அழைப்பாகும்.

இலங்கை முதலாளித்துவத்தின் முற்போக்கு என்று அழைக்கப்படும் பிரிவுடன் கூட்டுச் சேரும் போர்வையின் கீழ், பு.ஜ.மா.லெ.க. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய பிரதான கட்சிகளுடன் சூழ்ச்சியில் ஈடுபடும் ஒரு நீண்ட, இழிந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

1964ல் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவில் ஸ்தாபிக்கப்பட்ட (பெய்ஜிங் சார்பு) மாவோவாத சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்தே பு.ஜ.மா.லெ.க. 1978ல் உருவாக்கப்பட்டது.

பு.ஜ.மா.லெ.க., ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீ.ல.சு.க. நோக்கி ஈர்ப்புகொண்டிருந்தது. 1988ல் அது புலிகளை நிராயுதபாணிகளாக்க வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய இராணுவத்தின் "அமைதிப்படையை அனுப்புவதற்கு" புது தில்லி மற்றும் கொழும்பு அரசாங்கங்களுக்கு இடையில் முந்தைய ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக, ஸ்ரீ.ல.சு.க. முன்னெடுத்த பேரினவாத இந்திய-விரோத பிரச்சாரத்தை ஆதரித்தது. மறுபக்கம் தமது பாசிச பிரச்சாரத்தை எதிர்த்தவர்களை கொன்று தள்ளிய சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உடன் ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி வைத்திருந்தது.

1994ல், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதன் பேரில், பு.ஜ.மா.லெ.க. வெளிப்படையாகவே ஸ்ரீ.ல.சு.க ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆதரவாக போலி இடது நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) உடன் சேர்த்து பிரச்சாரம் செய்தது. சமாதானத்துக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த பின்னர், குமாரதுங்க யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு தனது முன்னோடியின் சந்தை சார்பு கொள்கைகளையும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களையும் விரிவாக்கினார்.

அதன் ஏகாதிபத்திய-விரோத தோரணைகள் ஒருபுறம் இருக்க, பு.ஜ.மா.லெ.க. இடைவிடாமல் பெரும் வல்லரசுகளின் சூழ்ச்சிகளுக்கு பின்னால் அணிசேர்ந்தது. 2002ல், ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் போரை முடிவுக்கு கொண்டுவந்து, கொழும்பு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு இளைய பங்காளியாக புலிகளையும் பட்டியலில் சேர்க்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானின் ஆதரவுடன், யு.என்.பி. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போலி சமாதான முன்னெடுப்புகளை பு.ஜ.மா.லெ.க. ஆதரித்தது.

உள்நாட்டு யுத்தத்தின் போது, பு.ஜ.மா.லெ.க. 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வி வரை அதை அரசியல் ரீதியில் ஆதரித்தது. கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்த புலிகளின் "ஒடுக்குமுறை வழிமுறைகளை" இது எப்பொழுதாவது விமர்சித்திருந்தாலும், அதுவும் புலிகளின் மீது தமிழர்கள் மத்தியில் குவிந்துவந்த எதிர்ப்பில் இருந்து தப்புவதற்கான ஒரு வடிகாலாகவே உதவியுள்ளது.

புலிகளின் தோல்வியை அடுத்து, பு.ஜ.மா.லெ.க. இம்முறை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வலதுசாரி ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிப்பதன் பெயரில் யு.என்.பி. பின்னால் அணிதிரண்டது.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், பு.ஜ.மா.லெ.க. அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்றத்தில் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவை மறைமுகமாக ஆதரித்தது. இராஜபக்ஷவுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிவித்த அதே நேரம், இராஜபக்ஷவின் "பாசிச ஆட்சி" மீது தனது கோபத்தைக் குவித்த செந்திவேல், "இன்றைய சூழ்நிலையில் தேர்தலை பகிஷ்கரிப்பதோ புறக்கணிப்பதோ அரசியல் ரீதியில் புத்திசாலித்தனமானதாக இருக்காது” என்று எச்சரித்தார்.

மறைமுகமாக சிறிசேனவை ஆதரிப்பதன் மூலம், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத வழிமுறைகளின் காரணமாக அன்றி, அவர் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக அணிசேர்ந்திருந்ததன் காரணமாக, அவரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்றத்துக்கு, பு.ஜ.மா.லெ.க. ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர், தேர்தல் பெறுபேறுகள் “வெறும் பிரமுகர்களின் மாற்றமே” என அறிவிப்பதன் மூலம், அவற்றின் முக்கியத்துவத்தை அது மூடி மறைத்தது. சிறிசேன தேர்வு செய்யப்படுவதற்கு அது ஆதரவளித்ததன் மூலம், பிராந்தியம் முழுவதும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா ஏற்பாடு செய்யும் போர் தயாரிப்புகளுக்குள் இலங்கையும் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்துள்ளது.

பு.ஜ.மா.லெ.க. வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கை, "நாடும் மக்களும் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினைகளை நிவர்த்தி செய்தற்காக," "இடது, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒரு பரந்த ஐக்கிய முன்னணிக்கு" அழைப்பு விடுவதன் மூலம், அது இப்போது இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டை அமைக்க முயன்று வருகின்றது. இது, யு.என்.பி. தலைமையிலான அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் குவிந்துவரும் எதிர்ப்பைத் தடம்புறளச் செய்து, அதை பாராளுமன்ற சூழ்ச்சித்திட்ட முட்டுச் சந்துக்குள் திசைதிருப்பிவிடுவதற்காக நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகளை உள்ளடக்கிய, கிரேக்கத்தில் சிரிசா பாணியிலான ஒரு அமைப்பை உருவாவதற்கான அழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அல்ல.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு தீர்வு கிடையாது. இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீகளுமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள தீர்க்கமான விடயம், எல்லா விதமான இனவாத அரசியலில் இருந்து அடிப்படையில் பிரிந்து, வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோக்கின் பக்கம் திரும்ப வேண்டியதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கும் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய போருக்கும் எதிராக சளைக்காத போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றைக் கொண்டுள்ளன. நாம் தேசிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களின் தோற்றுவாயான முதலாளித்துவ முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்காக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு இடைவிடாமல் போராடியுள்ளோம். உலகம் பூராவும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்திற்கு எமது வேலைத் திட்டம் அழைப்பு விடுக்கின்றது.

நாம் எமது முன்னோக்கை படிக்குமாறும் எதிர்வரும் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com