Thursday, March 24, 2016

புலிகள் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட தியாகங்களை விபரிக்கின்றார் டாக்டர் நடேசன்.

ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் - நடேசன்

அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது.

ஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தையே எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த அராஜக கைங்கரியங்களில் ஈடுபட்டனர்.

வருடாந்தம் கிட்டத்தட்ட 5000 டொலர்கள் வரையில்; நட்டம் வந்தது..உதயம் மாத இதழாக வெளியாகியதுடன் இலங்கை தமிழக படைப்பாளிகளும் அதில் எழுதினார்கள். தமிழ்நாட்டிலிருந்து எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா உட்பட வேறு சிலரும் எழுதினார்கள். ஒரு கம்பனியாக பதிவுசெய்து அதன் நிருவாகப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தமையால் எதிர்நோக்கப்பட்ட நட்டத்தையும் ஏற்றுக்கொண்டேன்.

உதயத்தின் தொடர்வருகையை சகித்துக்கொள்ளமுடியாத புலி ஆதரவாளர்கள் பின்னர் தாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தனர். அதன் பெயர் ஈழமுரசு. இதேபெயரில் ஐரோப்பியநாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் புலிகள் பத்திரிகை வெளியிட்டனர்.

உதயம் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மனித உரிமை ஆர்வலர் லயனல்போப்பகே, பொருளியல் விரிவுரையாளர் அமீர்அலி ஆகியோரையும் அழைத்து காலத்துக்கு காலம் உதயம் தொடர்பாகவும் அரசியல் இலக்கியம் தொடர்பாகவும் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் மெல்பனில் நடந்தமைபோன்று சிட்னயில் கவிஞர் அம்பி தலைமையில் பத்திரிகைளில் சுயதணிக்கை பற்றிய கருத்தரங்கும் நடத்தியிருக்கிறது.

இதில் மனிதஉரிமை ஆர்வலர் கலாநிதி பராக்கிரம செனவிரத்தினவும் உரையாற்றியிருக்கிறார். உதயம் பத்திரிகை வெளியீட்டில் மட்டும் அக்கறைகொண்டிராமல் வாசகர் கருத்துக்களுக்கும் பொது அரங்கில் களம் தந்தது.

இவ்வாறு தொடர்ச்சியாக உதயம் வெளியானபோதிலும் என்னுடன் உதயம் இதழில் இயங்கிய சிலருக்கும் புலிகள் பலவிதங்களில் அழுத்தங்களை பிரயோகித்தார்கள். இதனாலும் உதயம் வெளியீட்டில் நட்டங்கள் எதிர்நோக்கப்பட்டது.

மருத்துவரான எனது மனைவிக்கும் நட்டம் வந்தது. தமிழ் நோயாளர்கள் சிகிச்சைக்காக அவரிடம் செல்லக்கூடாது என்ற பிரசாரத்தையும் கட்டவிழ்த்தனர். நண்பர் எழுத்தாளர் முருகபூபதி உதயம் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உதயம் பத்திரிகையில் தமிழ்ப்பக்கங்களை ஒப்புநோக்கினார். இதனால் அவர் மீதும் அவதூறு பொழிந்தனர். அவர் இலங்கையில் பத்திரிகையாளராக இருந்தவர். இங்கு ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு தமது உழைப்பிலும் வங்கியில் கடன் பெற்றும் தமது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வாங்கியிருந்தமையால் அந்த வீடு இந்திய மத்திய அரசு வாங்கிக்கொடுத்த வீடு என்று ஒரு அவதூறு பிரசாரத்தையும் முன்னெடுத்தனர் இந்த புலி ஆதரவாளர்கள். இதே போன்று உதயம் பத்திரிகையில் சம்பந்தப்பட்டிருந்த நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் நடத்திய பயண முகவர் நிறுவனத்திற்கும் தமிழ் வாடிக்கையாளர்களைச்; செல்லவிடாது தடுத்தனர்.

உதயம் பத்திரிகையின் சட்ட ஆலோசகராக இருந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனுக்கு எதிராகவும் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து அவருடைய தொழிலுக்கும் பதிப்பு ஏற்படுத்தினர்.

உதயம் பத்திரிகையில் ஆங்கிலப்பக்கங்களை கவனித்த மாவை நித்தியானந்தன் முன்னின்று நடத்திய பாரதி பள்ளிக்கு பிள்ளைகளை செல்விடாது தடுக்கும் புண்ணியகருமங்களிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு உதயம் பத்திரிகையுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தவர்களுக்கு புலிகள் நட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உதயம் பத்திரிகையால் பயன் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள்:

பத்திரிகையை பதிப்பித்த அச்சகத்தினர். பக்க வடிவமைப்பு செய்தவர்கள். பத்திரிகை பிரதிகளை கடைகளுக்கு விநியோகித்தவர்கள். அத்துடன் உதயத்தில் எழுதிய சிலருக்கு பணமும் கொடுத்திருக்கின்றேன். அவர்கள் பணத்துக்காக எழுதியவர்கள் அல்ல. பொதுவாகவே பத்திரிகைகளில் எழுதும் நிருபர்கள் படைப்பாளிகளுக்கு பத்திரிகை நிறுவனங்கள் வழங்கும் சன்மானத்திற்கு ஒப்பானது.

இப்படியாக ஒரு சிறிய வியாபாரத்தால் அதனை நடத்துபவர்கள் சிலர் நட்டப்படுவதும் மேலும் சிலர் லாபமடைவதும் வழக்கம்தான்.

இந்நிலையில் சுமார் நாலு பில்லியன் டொலர் பெறுமதியான வியாபாரம் நட்டமடைந்தால் எத்தனை பேர் அதனால் நட்டமும் இலாபமும் அடைவர்கள்?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் 8 வீதமான உற்பத்தி பொருளாதாரத்தை கொண்டன. கிட்டத்தட்ட 3 பில்லியன் (GDP) உள்ளது அதைவிட விடுதலைப்புலிகளின் நியாயமான வியாபாரங்கள் வெளிநாட்டு மக்களின் பணம் மற்றும் போதை மருந்து கடத்தல் என் குறைந்த பட்சம் 700 மில்லியனில் இருந்து 1 பில்லியன் வரையில் நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள். இந்தப்பணம் சில சிறியநாடுகளின் மொத்த வருமனத்துக்கு ஒப்பானது.

இந்த வியாபாரம் வங்குரோத்தானதால் எத்தனை பேர் வருமானம் இழந்திருப்பார்கள்?

இதற்கப்பால் இலங்கையில் 30 வருடத்திற்குள் குறைந்தது ஒரு இலட்சம் பேர் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் 5 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில்; இந்தியாவில் இருப்பவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் வசதிவாய்ப்புகளோடு இருக்கிறாரகள்.

இதனை எழுத்தாளர் தேவகந்தன் தமது கனவுச்சிறை நாவலில் அழகாக படம் பிடிக்கிறார்.இலங்கைத் தமிழரான முதியவர் ஒருவர் சென்னையில் இருந்து பேசுகிறார்:

“தம்பி சண்டை தொடங்கிவிட்டது. எப்படியும் தங்கச்சியையும் அம்மாவையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடலாம்’’.

இது மட்டுமா?

முப்பது வருடங்கள் வெளிநாடுகளில் புலிகளின் செயல்பாட்டாளர்கள் ஒருவிதத்தில் குட்டி இராஜாக்களதான். அவர்களால் ஒருவரை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். ஏன் அடுத்த உலகிற்கே அனுப்பவும் முடியும். தனிமனிதர்களை பயமுறுத்தி காரியம் சாதிக்கமுடியும். கணவன் மனைவி தகராறில் தலையிடமுடியும்.

அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உதாரணங்கள் பலவுண்டு.

இவையெல்லாவற்றையும் கடந்த காலங்களில் அனுபவித்தோம் அதையெல்லாம் சுமார் 1000 பக்கத்தில் எழுதவும்முடியும்

விடுதலைப்புலிகளின் அதிகாரம் அன்று வட கிழக்கு மாகாணத்தில் எந்த சர்வாதிகாரிக்கும் மேலானது

இப்படியான நிலையில் 2009 இல் இயக்கத்தின் அழிவில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நிலை குலைந்துவிட்டார்கள். மன அழுத்தங்களினால் குடும்பங்களைப் பிரிந்தவர்கள் சிலர். பலர் குடி போதைக்கு அடிமையானார்கள். மேலும் சிலர் சித்தசுவாதீனத்தால் பாதிக்கப்பட்டனர். அந்த அழிவின் விடை இப்படி இருக்க, சந்தர்ப்பவாத விடுதலைப்புலி ஆதரவாளர்கள்; மாத்திரம் – தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தங்களது பைகளை நிரப்பிவிட்டார்கள்.

ஒரு சிலர் மனச்சாட்சியையும் மக்களையும் போக்கு காட்ட தாம் எடுத்த பணத்தில் சீமான் அழைப்பு மாவீரர் தின நிகழ்ச்சி என திருடன் ‘திருப்பதி உண்டியலில் போடுவதுபோல்” நடக்கிறார்கள்.

இவைக்கெல்லாம் முக்கிய காரணம் விடுதலைப்புலிகளின் பணம் எந்த ஒரு ஸ்தாபனத்திலும் இருக்கவில்லை .வெளிநாடுகளில் தனியார் கணக்குகளில் வெவ்வேறு வங்கிகளிலிலும் வீடுகளாகவும் வியாபார நிறுவனங்களாகவும் உருமாறிவிட்டது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலின் எதிரொலியாக வெளிநாடுகளில் பணம் பரிவர்த்தனையை கண்காணித்ததால் புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம் தனியார் வசமாகியது. அதாவது சிலருக்கு மட்டும் ‘யானை இறந்தாலும் ஆயிரம்பொன் இருந்தாலும் ஆயிரம் பொன்னாகியது”

பெரும்பாலானவர்களுக்கு பணம் – பதவிகள் விடயத்தில் இது பெரிய இழப்பே.

உள்நாட்டில் மக்கள் மத்தியில் புலிகள் அற்றுபோனது அங்கு பலருக்கும் சந்தோசம். இந்த நிலைமையை அங்கு அகதி முகாம்களை நான் பார்க்கச்சென்றபோது பார்க்க முடிந்தது. காரணம் அகதிமுகாம்களில் இருந்தவர்களில் 75 வீதமானவர்கள் ஏழைகள். அவர்களிடம் இருந்தது குறைந்தளவு உடமைகளும் அவர்களது உறவுகளும்தான். இதிலும் இந்த ஏழைகளில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். மற்றவர்கள் காலம்காலமாக வன்னி மன்னார் மாவட்டத்து விவசாயிகள்.

விடுதலைப்புலிப்போராளிகளிலும் அதிலிருந்து வெளியேவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தாம் நம்பியிருந்த இயக்கத்தின் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதை நான் இலங்கையில் சந்தித்தவர்களை வைத்து உறுதியாகச் சொல்லமுடியும். மேலும் அந்த இயக்கத்திலிருந்து வெளியே வந்த இலக்கியவாதிகளில் அகதிமுகாமில் இருந்தபடியே கள நிலைமையை உடனே எழுதிய கவிஞர் கருணாகரனை அப்பொழுது சிலர் கரித்துக் கொட்டினார்கள். அதன்பின்பு வெளிநாடுகளில் இருந்து எழுதியவர்களில் பலர் விடுதலைப்புலித்தலைமையை விமர்சித்தார்கள்.

போரின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளாலும், மற்றும் செய்யத் தவறியவற்றாலும் மக்களின் துன்பத்தை மீண்டும் ஒரு முதலாக வைத்த தமிழ் அரசியல்வாதிகள் தமது வியாபாரத்தை தொடர்ந்தனர். புலிகளை ஆதரித்த இந்த தமிழ் அரசியல்வாதிகள் போரில் புலி தோற்றாலும் தமிழ்த்தேசியம் தோற்கவில்லை என்று பாவனைகாட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் நாடுகடந்த தமிழ் ஈழம், சர்வதேச விசாரணை போர்க்குற்ற விசாரணை என அறிக்கை விடுத்து தங்களுக்குள் இன்புறுகிறார்கள்

இந்த நிலையில் பதினெட்டு வருடங்களை போர்க்காலத்தில் தொலைத்துவிட்ட பெண்போராளியான சிவகாமி எனும் தமிழனியின் நினைவுகளின் தொகுப்பான கூர்வாளின் நிழலில் நூல், பகல்கனவு காணுபவர்களின் முகத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி எழுப்பியது போல் திடுக்கிட வைத்துள்ளது. உண்மையில் இந்தப்புத்தகத்தில் இருப்பன எதுவும் புதிய செய்திகள் அல்ல.

விடுதலைப்புலிகளை காலங்காலமாக விமர்சித்தவர்கள் முன்னர் எழுதியதைத்தான் அதில் பார்க்க முடிகிறது. கடைசி யுத்தம் பற்றி காலச்சுவடு இதழில் கருணாகரன் அகதி முகாமில் இருந்து எழுதியவை இதைவிட விளக்கமானவை.

ஆனால், தமிழினி எழுதியதுதான் விடுதலைப்புலி எச்ச சொச்சங்களுக்கு தாங்க முடியாமல் போயிருக்கிறது. காரணம் புலிப்பூச்சாண்டி காண்பித்து வியாபாரம் செய்யமுடியாது என்பதால்தான். பிரபாகரனதும் பொட்டம்மானதும் பிழையான வழிகாட்டல்களினால் விருப்பமற்று சண்டையிட்டார்கள் என தமிழினியே எழுதியிருக்கும்போது மாவீரர்கள் என எப்படிச் சொல்லமுடியும்? போற்றிப்புகழ முடியும்?

சாதாரண மக்கள் இராணுவத்தின் குண்டுகளால் இறந்தார்கள். அதேபோன்று யுத்தகளத்தில் இருந்து வெளியேற முற்பட்டவர்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் எனக்கு அவ்வேளையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. புலிகளிடத்திலிருந்து தப்பிச்சென்ற ஒரு குடும்ப்பப் பெண் லண்டன் பி.பி.சி வானொலிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செயலைத் திட்டிப்பேசியதையடுத்து, மெல்பனில் மருத்துவராக பணியாற்றும் ஒருவர் இங்குள்ள உள்ளுர் வானொலியில் அந்தப்பெண்ணை கடுமையாக கண்டித்தார். அவ்வளவுதூரம் அவர் பகல் கனவு கண்டுகொண்டிருந்தார். எல்லாம் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.

அவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருபக்கத்திலும் இரையாகினர். இதேபோல் புலிப்போராளிகளை இலக்கற்று யுத்ததிற்கு இழுத்துச்சென்ற பிரபாகரனும் பொட்டமானும் இறுதியில் கிழக்கில் மாவிலாறில் அவர்கள் தொடக்கிய இறுதிப்போரில் வடக்கில் வன்னியில் இரையாகினர்.

மாரியம்மனில் பக்தர்கள் மட்டுமல்ல பலிகடாக்களும் பக்திகொண்டது எமது வரலாறு

இந்த நிலையில் எப்படி இவர்களை மாவீரர்கள் என கொண்டாடுவது? கொள்கைக்காக உயிரை விட்டவர்கள்தானே மாவீரர்கள்?

ஒரு பழக்கடைக்காரனுக்கு ஒரு காலில் யானைக்கால் வியாதிவந்து உரல் மாதிரி இருந்தது. பாடசாலை முடிந்ததும் சில குறும்புக்கார சிறுவர்கள் பழக்கடையில் தொங்கிய வாழைக்குலையில் இருந்து பழத்தை பறிக்க முயன்றபோது கடைக்காரன் தனது யானைக்காலை தூக்கி அவர்களை விரட்டும்போது சிறுவர்கள் மிரண்டு ஒடுவார்கள்.

ஒருநாள் ஒரு குறும்புக்கார சிறுவன் துணிந்து பழத்தை பறித்தபோது பழக்கடைக்காரன் யானைக்காலால் அந்த சிறுவனை அடித்தபோது அவனுக்கு மெத்தென்றிருந்து. அந்தச்சிறுவன் மற்றவர்களை நோக்கி கத்தினான் ‘டேய் இவனது கால் வலிக்காது’

வாழைப்பழக்குலை மட்டுமல்ல முழு பழக்கடையும் அந்தச் சிறுவர்களால் காலியானது

தமிழ்த்தேசியம் மட்டுமல்ல தமிழர்களின் சகல விடயங்களும் யானைக்கால் வந்தவனது பெரியகால் மாதிரி பெரிசாகத்தான் இருக்கிறது.

ஆனால், அப்பாவி மக்கள் ?

1 comments :

Anonymous ,  March 28, 2016 at 9:26 AM  

உங்களுடைய வரிகள் ஒவ்வொன்றும் பழைய உண்மையான காலங்களை ஞாபகப்படுத்துகிறது. உண்மையை சொல்லப் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் புலி ஆதரவாலகளுக்கோ புலி நிழலுக்கோ சார்பானவராக இல்லாது விட்டால் உங்கள் பக்கம் நஷ்டமும், தப்பான காட்டு மிராண்டித்தனமான ஏதாவது ஒரு பண்பு மட்டுமே உங்களுக்கு முகத்தில் குத்தப்படும். மாறாக நீங்கள் எவ்வளவு கொலை கொள்ளையர்களாக இருந்தாலும் அதே புலிகளுக்கு ஜால்ரா போட்டால் உங்களை தங்கத் தட்டில் வைத்து மனிதஉரிமை ஊடகவியலாளர் என்ற புனிதமான நாமத்தை வைத்துக் கொண்டு உங்களை அழுக்கில் என்றைக்குமே மூழ்கடித்து உங்களை அறியாதவர்களை உங்களை உத்தமராக காட்டி பிழைப்பை காப்பாற்றி கொள்வார்கள்.
வடமாகாண முதலமைச்சர் யாருடனும் ஒத்துழைக்காத ஒருவர், பத்து ஆளுநர்கள் மாற்றப் பட்டாலும், அனைத்து ஆளுனர்களுடனுமே முதலமைச்சருடன் முரண்பட்டார்கள் என்றே புலி ஆதரவுக் கோசங்கள் எழுதுவார்களே ஒழிய, செரியானதையும் பிழையாக பிதட்டுவார்களே ஒழிய, அந்த பத்து பேருடனும் ஒத்துழைக்காத முரண்டு பிடிக்கிற, எதையும் தமிழ் மக்களுக்கு செய்ய விடாமல் ஏழ்மையில் வைத்து கொண்டு அரசியல் நடத்த துடிக்கின்ற புலிகளுக்கு சாதகமான முதலமைச்சரை கண்ணியமாக நடமாட விடுவார்கள். அவரும் உண்மையாக நடக்க முட்பட்டால் புலிப் பூச்சாண்டியை நையப் புடைத்து விட்டால், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு உண்டானதை விட மோசமான ஒருவராக ஊடகங்களை கைக்குள் வைத்திருக்கும் புலி ஆதரவாளர்களுக்கு இது ஒன்றும் புதித ல்ல.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com