Saturday, February 13, 2016

SLFP உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை. கடிதத்தை தீ மூட்டிய உறுப்பினர்கள்

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக அக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதுடன் அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள உறுப்பினர்கள் இச்செயற்பாட்டிற்று எதிராக கொடிதூக்கியுள்ளனர்.

இன்று இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றினை நாடாத்தி தமது எதிர்ப்பினை வெளியிட்ட அவர்கள் கட்சியின் கடிதத்தினை ஊடகவியலாளர் மாநாட்டில் தீமுட்டியுள்ளனர்.

வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதேனி அத்துகோரல, மகரகம நகரசபையின முன்னாள் தலைவர் காந்தி கொடிகார, பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியசாந்த, அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த புஷ்பகுமார, கம்பஹா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் குணவர்தன, மீரிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சனத் நந்தசிறி உள்ளிட்டவர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கல்லாமல் அதனை பாதுகாப்பதற்கு உரமளித்த மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்பது தமது உறுப்புரிமைகள் நீக்கப்படுவதற்கு காரணமா என்று அவர்கள் வினவியிருந்தனர்.

மைத்திரிபால சிறிசேன உறங்கிய பாய்க்கு கூட கூறாமல் சென்று ஐதேக வுடன் இணைந்து கொண்டு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன்போது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக 14 நாட்களுக்குள் விளக்கமளிக்க கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை, வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தீ வைத்து கொழுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவு எதுவோ அதன்பக்கமே தாம் தொடர்ந்தும் இருக்கப் போவதாகவும் மேலும் காலம் தாழ்த்தாமல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை அரசாங்கம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com