EPRLF, TELO, PLOTE, EPDP ஆகியவற்றின் ஆயுதங்களை களைந்திருக்கா விட்டால் இன்றும் மஹிந்த ஜனாதிபதி. கோட்டா
டக்ளஸிடம் ஆயுதங்களை பறித்திருக்காவிட்டால் அவர் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் மஹிந்த இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச. சிலோன் ருடே க்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை இழந்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் :
தமிழ் ஆயுதக்குழுக்களான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் ஈபிடிபி யினரின் ஆயுதங்களைக் களைந்திருக்காவிட்டால் நாம் வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம். நான் அவர்களின் ஆயுதங்களை மீள கையளிக்குமாறு வேண்டினேன். ஆனால் அதற்கான காலம் இன்னும் வரவில்லை என டக்ளஸ் , கருணா போன்றோர் மறுத்தார்கள். ஆயுதங்கள் களையப்பட்டால் த.தே.கூ வெற்றி பெறும் , எனது சகோதரன் தோல்வியடைவார் என்று அவர்கள் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அப்பிரதேசங்களில் அமைதியே தேவையாகவிருந்தது. ஆகவே ஆயுதங்கள் யாவற்றையும் மீளளியுங்கள் எனக் கூறினேன்.
ஆகக்குறைந்தது மாகாண சபைத்தேர்தல் முடியும்வரையாவது ஆயுதங்களை வைத்திருக்க விடுங்கள் என்று டக்ளஸ் கோரினார். நான் இல்லை என்றேன் அத்துடன் ஆயுதங்கள் அற்றதோர் தேர்தலை அங்கு நடத்தவே நான் விரும்புகின்றேன் என்றேன். அவர் ஒத்துக்கொண்டார். த.தே.கூ வெற்றி பெறும் என அவர் என்னை எச்சரித்தார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் அங்கு ஜனநாயகம் நிலவ வழி விடுங்கள் என்றேன். நான் அவர்களின் ஆயுதங்களை களைந்திருக்கா விட்டால் டக்ளஸ் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். இன்றும் மஹிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment