Saturday, February 13, 2016

அங்கஜன் கோயில் மேளத்துடன் , விஜயகலா பறை மேளத்துடன். சபாஸ் நல்ல போட்டி.

வடக்கில் மீள் குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் இதுவரை விடுவிக்கப்படாக காணிகள் விடுவிப்பு என்பனவற்றில் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்த்தால், சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன் தமிழர் தரப்பின் நியாயமற்ற கோரிக்கைகளை கைவிடுமாறு சர்வதேசத்தை கொண்டே அழுத்தத்தை தமிழ் அரசியல்வாதிகள் மீது கொடுக்க முடியுமென்பது மைத்திரியின் இராஜதந்திரமும் மதிநுட்ப வியூகமும் என்றால் மிகையாகாது.

இதற்கானதோர் சிறந்த உதாரணத்தை கூறுவதானால் , ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இலங்கைக்கு வர விரும்பியபோது தாராளமாக வாருங்கள் என ஆணையாளருக்கு சிவப்பு கம்பளத்தை விரித்தார் மைத்திரி. சிங்கள மிதவாதிகள் ஆணையாளரை இலங்கைக்குள் நுழையவிடாதே என தலையால் கிடங்கு கிண்டினார்கள். ஆனால் மைத்திரியோ கிஞ்சிதமும் அஞ்சவில்லை. ஆணையாளர் வந்தார். ஐயா இலங்கையை சுற்றி பாருங்கள் மக்களுடன் பேசுங்கள் என பச்சை கொடி காட்டினார்.

யாழ் சென்ற மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த முன்னாள் பிரத நீதியரசரும் இந்நாள் வடக்கின் முதலமைச்சரும் நாளை தன்னுடைய கதிரை பறிபோகுமோ என்ற கவலையில் நிலவைத்தேடி பரதேசம் சென்று கொண்டிருக்கின்ற விக்கினேஸ்வரன் „முன்னாள் பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டு மூக்குடைபட்டார்' „பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபபட்டிருந்தால் அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து நீதிமன்றிலிருந்து விடுவித்து கொள்வதே நியாயமானது என்று கூறியுள்ளார் ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணையாளர்.' இதுதான் மைத்திரியின் சாமர்த்தியம். நம்மவர்கட்கு மணிகட்டின மாடு கூறினால்லே புரியும் என்பதை சரியாக புரிந்து கொண்டுள்ளார் மைத்திரி.

இதே விடயத்தைத்தான் உள்ளநாட்டிலும் மேற்கொண்டு வருகின்றார். தீர்க கூடியாதான பிரச்சினைகளை கூடிய சீக்கிரம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிச்சைக்காரன் கை சிரங்கு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற அடிப்படையில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

இவ்விடயத்தில் இன்று வடக்கில் மைத்திரியின் நல்மதிப்பை சம்பாதித்துள்ளார் என்று பலராலும் நம்பப்படுகின்ற அங்கஜன் ராமநாதன் மைத்;திரிக்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றார் என்பது தெளிவாக தென்படுகின்றது.

மைத்திரி வடக்கிற்கு விஜயம் செய்கின்றபோது, உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களை சரியாக அவருக்கு இனம்காட்டி , குறிப்பிட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று மக்களின் மனக்குறைகளை மக்களுடாகவே அவருக்கு தெரியப்படுத்தி காரியத்தை கச்சிதமாக நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் அங்கஜன் ராமநாதன்.

இம்முயற்சிகளின் பயனாக 26 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மைலிட்டி பிரதேசத்தில் மக்கள் விரைவில் மீள்குடியேறுவதற்கான காலம் உருவாகியுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று மைலிட்டி குளத்தங்கரை அம்மன் ஆலயத்திற்கு மக்களை அழைத்துச் சென்று இன்று ஆயலத்தில் பூசையும் நாடாத்தியுள்ளார்.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் ஆலயத்தின் கோயில் மேளம் அடிக்கும் சத்தம் விஜயகலாவிற்கு கேட்டுள்ளது. உசாரடைந்த அவர் பறை மேளத்துடன் சென்று தானும் இம்மீள்குடியேற்ற நடவடிக்கையில் பங்காளி என பறை அடித்துள்ளார்.

எமது மக்களை பொறுத்தவரை யார் செய்கின்றார்கள் என்பது முக்கியத்துவமானது அல்ல. என்ன செய்கின்றார்கள், அதை எப்படி செய்கின்றார்கள், என்ன நோக்கத்துக்காக செய்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.

மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதை மக்களில் பெயரால் சிறப்புரிமைகளை அனுபவிக்கின்றவர்கள் செய்யவேண்டும் என்றவகையில் விஜயகலா மகேஸ்வரனுக்கும் அந்த பொறுப்பு இருக்கின்றது. எனவே சுயமாக முயற்சிகளை செய்து ஏதாவது ஒரு கடமையை பொறுப்பெடுத்து அவற்றை தனியாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றவேண்டும். அதை விடுத்து பறை மேளத்துடன் அடுத்தவன் நிகழ்வில் நுழைவது நாகரிகமானது அல்ல.

மேலும் விஜயகலா மக்களின் வாக்குகளை பெற வழங்கிய பிரதான வாக்குறுதி ஒன்று உள்ளது. மாவீரர் இல்லங்கள் தொடர்பானவை. முடிந்தால் ரணில் விக்கிரம சிங்காவிடம் அதற்கான அனுமதியை பெற்று நிறைவேற்றி காண்பிக்க வேண்டும் என்ற சவாலுக்கு அசிட் கலா முகம் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com