அயல் நாடுகளில் இலங்கைக்கே முதலுரிமையாம். சுஷ்மா மைத்திரியிடம் தெரிவிப்பு.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியுடன் ஜனாதிபதியைச் சந்தித்தார். இலங்கை அரசு பின்பற்றும் புதிய செயற்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
அனைத்து இன மக்களுக்கும் இடையில் சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை, இந்திய அரசாங்கத்தின் வரவேற்பினைப் பெற்றுள்ளதாக சுஷ்மா சுவராஜ் இங்கு தெரிவித்தார்.
மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
அயல் நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேணுவது இந்தியாவின் கொள்கையாகக் காணப்படுவதாகவும், அதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் “டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் முன்னேற்றம்” எனும் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இந்தக் கண்காட்சியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.
* இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுமங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது.
* இந்திய வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவிரை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
* இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
* இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பு இடம்பெற்றது.
* சுஷ்மா சுவராஜூக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களிடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment