அதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை! - ராம் -
மாகாணசபை உறுப்பினரின் ஒலிவாங்கியை கைப்பற்ற சென்ற மத்திய அமைச்சரின் மேலதிக செயலாளர், அதை தடுக்க வந்தவரை பார்த்து கூ ஆர் யு [ who are you ] எனகேட்க, மற்றவர்கள் அவரைப் பார்த்து அதையே திருப்பி கேட்க, ஆரம்பித்த தள்ளுமுள்ளு, அடிதடி, தண்ணீர்ப் போத்தல் ஏறி எனத் தொடர்ந்து, மாகாண அமைச்சர் உதடு வெடித்து இரத்தம் பெருக, மாகாணசபை உறுப்பினர்கள், மத்திய அமைச்சரின் கட்சி உறுப்பினர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் த.தே.கூ உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தவேளை, முதல்வரை பாதுகாப்பாக அவரது காவலர்கள் அழைத்து சென்றனர். அதன் பின் முதல்வர் அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட தேவையற்ற கருத்தால் பிரச்சனை உருவானது என்றும், அவரால் கூட்டிவரப்பட்ட இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது, என்றும் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டார்.
அது நடந்து 13 மாதங்களின் பின் இந்த வாரம் தான் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. புதிய அரசில் அமைச்சுப்பதவி கொடுக்கப்படாததால் இணைத்தலைவர் பதவி இம்முறை திரு தேவானந்தாவுக்கு வழங்கப்படவில்லை. அந்த பதவி கௌரவ முதல்வர், கௌரவ பிரதி அமைச்சர், மூத்த பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் தெரிவான திரு அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தான் முதல்வரின் ஒவ்வாமை வெளிப்பட்டது. தனது ஆரம்ப வரவேற்பு உரையில் தான் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்ததில் இணைத்தலைவர் பதவி இருவருக்கு மட்டுமே உரியது என தெளிவு படுத்தியதாக கூறி தன்னைத்தவிர ஒரு அமைச்சர் அல்லது மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே தலைமை தாங்கும் உருத்துடையவர் என்ற கருத்துப்பட பேசினார்.
பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். ஆழ்மனதில் இருப்பதுதான் வார்த்தையில் வெளிப்படும். முதல்வர் கூற்றுப்படி அவரும், பிரதி அமைச்சரும் மட்டுமே தலைமை தாங்க வேண்டும். திரு மாவை, திரு அங்கஜன் வேண்டா விருந்தாளிகள், என கூற விளைந்தது வெள்ளிடை மலை. வடக்கு மாகாணசபைக்கு அதிகாரம் பகிரப்படவில்லை, என உள்ளூர் முதல் போகும் நாடெல்லாம் புகார் பட்டியல் வசிக்கும் முதல்வர், இந்த மாவட்ட மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவரும், இவரின் நியமனம் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு பயன் கொடுக்கும் என்பதால், தேசிய பட்டியல் மூலம் உறுப்பினரானவரும், தன் அருகே சமமாய் அமர்வது, அவர்களுடன் தனது தலைமையை பகிர்வது முதல்வருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது, என்பது முரணான செயல் அல்லவா?
மக்கள் நலன்சார்ந்த விடயங்களை கலந்து முடிவெடுக்க ஒன்று கூடும் இடத்தில், தலைமை பதவியை பங்குபோடும் விடயத்தை பேசி, அதற்கு பதில் உரைத்தவரின் சீற்றத்துக்கு ஆளாகும் சந்தை அரசியலை, ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆரம்பித்து வைத்தது, தன்னை சிறுமைப்படுத்தி கொண்டதே நடந்தேறிய நிகழ்வு. அன்று மகிந்தர் ஆட்சியில் அருகிருந்த மத்திய அமைச்சர் பேசிய பேச்சை, அவரது கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தை, தட்டிக்கேட்ட திராணியின்றி மௌனமாய் வெளியேறி பத்திரிகையில் கண்டன அறிக்கை விட்ட முதல்வர், இன்று தன் கருத்தை துணிந்து சபையில் கூறும் சூழ்நிலையை உருவாக்கியவர்கள், அவர் அருகில் அமர்ந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் தான் என்பதை எண்ண மறந்து அவர்களை இணைத்தலைவர்களாய் நியமித்ததற்கு தன் விசனத்தை வெளியிட்டார்.
நீண்ட கொடிய யுத்தம் எம்மண்ணை இன்னொரு கம்போடியா ஆக்கியது. 1992ல் என் பத்திரிகை நண்பர் அழைப்பில் கம்போடியா சென்ற நான் கண்ட காட்சியை இன்று எம் மண்ணில் காண்பேன் என அன்று நினைக்கவில்லை. கண்ணிவெடிகளின் விதை நிலமாய் அந்த மண் மாறி காணும் இடமெல்லாம் கால் இழந்த உடல் அவயங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கமுடிந்தது. தினம் தினம் அந்த கோரத்தை பார்த்த என் நண்பனும் மனத்தாக்கத்தில், வேலையை விட்டு நாடு திரும்பிவிட்டான். இன்று நான் சொந்த நாட்டில் இல்லாவிட்டாலும் சக்தி தொலைகாட்சியில், தினம் தினம் காட்டப்படும் எம் மண்ணின் அவலங்களை பார்க்கையில், கம்போடியா என் மனக்கண் முன் வந்தது. கால் இன்றி கைகள் இரண்டும் இன்றி வாழும், எம் உறவுகளுக்கு எத்தனை தலைமைகள் இணைந்தாலும், எப்போது வாழ்வு வரும் என்ற கேள்வி எழும் வேளையில், இணைத்தலைமை எனது உருத்து என உரிமைக்குரல் எழுப்பும் முதல்வரின் செயல், பிரபாகரனிசத்தை இவர் வரித்துக் கொண்டாரோ என எண்ணத் தூண்டுகிறது.
எண்பதுகளில் உக்கிரமடைந்த ஆயுதப்போராடத்தில், தமது அறிமுகம் மற்றும் கொள்கை அடிப்படையில், வெவ்வேறு இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் நோக்கம், குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், எம் உரிமைக்காய் உயிர் துறக்க தயாராகியே, அவர்கள் ஆயுதத்தை கையேந்தினார்கள். தமது கல்வியை, காதலை, உறவுகளை. ஊரை விட்டு தொலைதூரம் சென்று, தாயக மீட்பிற்க்காக தம்மை வருத்தி, கடும் பயிற்சிகள் எடுத்தனர். விடுதலை கனவு சுமந்த அவர்களின் மனதில், விரோதத்தை விதைத்தவர் பிரபாகரன். தன்னுடன் இணைந்த ஏனைய இயக்க தலைவர்களின் கரங்களை உதறி, ஏக தலைவன் நான் என்ற மமதையில், ஏனைய இயக்க தலைவர்களை, போராளிகளை போட்டுத்தள்ளும்படி கட்டளையிட்ட பிரபாகரன் போல, இணைத்தலைவர்கள் இத்தனைபேர் எதற்கு என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர்.
தானைத் தலைவன் நானே எனும் மனப்போக்கில், முன்னைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரை பேச அனுமதிக்காத அமைச்சரின் செயலை, பத்திரிகை அறிக்கை மூலம் விமர்சித்த முதல்வர், இன்று தானும் அதுபோல் செயல்படுவது இவரும் ஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லையடி தங்கரத்தினம், என கூறிய பிரசங்கியின் செயல் போலவே பார்க்கப்படும். பதவி வந்தால் பணிவு வேண்டும். அனைவரையும் அணைத்து செல்லும் பண்புவேண்டும். எம் மண்ணின் புனர்நிர்மாணத்துக்கு, மக்களின் புனர்வாழ்வுக்கு பலரது பங்களிப்பு தேவை. பலரது தலைமைத்துவம் தேவை. சில கைகள் மட்டும் இணைவதை தவிர்த்து பல கைகள் இணைந்ததால் தான், மகிந்தவை வெல்ல முடிந்தது. அதனால் தான் முதல்வரால் இன்று தலைமை தாங்க முடிந்தது. இல்லை என்றால் முன்னாள் அமைச்சர் அருகமர்ந்த, மௌனசாட்சி நிலை இன்றும் தொடர்ந்திருக்கும்.
தனிபட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்க, இணைந்து செயல்ப் படுவதால் நன்மையே விளையும். பிரபாகரன் கூட தேசிய தலைவராக தன்னை நினைத்தாலும், தன் தளபதிகளுடன் இணைந்து தான் அந்த இடத்துக்கு வந்தார். பின் தான் என்ற அகங்காரம் அவரிடம் தோன்றியதும், மாத்தையா மண்ணுக்குள் போனார். கருணா பிரிந்து சென்றார். அன்டன் பாலசிங்கம் ஒஸ்லோவில் கையொப்பமிட்ட பின் உறுமலுக்கு பயந்து இங்கிலாந்து திரும்பினார். அதன் பின் நடந்த நிகழ்வுகள் நாம் அறிந்தவை. தன்னை சுற்றி இருப்பவர் ஆலோசனை கேட்காமை, அவர்களை அனுசரித்து செல்லாமை, கூட்டு முடிவுகள் எடுக்காமை என அடுக்கடுக்கான விமர்சனங்கள் அவர்மீது உண்டு. நான் என்ற அகங்காரம்தான் அவருக்கு நந்திக்கடலில் முடிவுரை எழுதியது என்பதை பிரபாகரன் ஒரு மாவீரன் என கூறிய முதல்வர் அறிவார்.
சுண்ணாகம் நீர் பிரச்சனை தொடங்கி, அகதிகள் மீள் குடியேற்றம்வரை நாமெல்லாம் கூடி பேசி கூடிய விரைவில் ஒரு தீர்வு காணவேண்டும், என பிரதி அமைச்சர் கூறியதும், நாங்கள் இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் என்பதால் தான், ஜனாதிபதி எம்மை இணைத்தலைவராய் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நியமித்தார், அதை நீதிமன்ற தீர்ப்பு போல் மாற்றமுடியாது, என திரு மாவை சீறியதும், நாம் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. எமது இணைத்தலைமை பதவி என்பது எம்மக்களுக்கு அதிகளவு பயனை கிடைக்க செய்யவே, என திரு அங்கஜன் இராமநாதன் தெரிவித்ததும் முதல்வருக்கு நிச்சயம் உறைத்திருக்கும். அரசியலுக்கு முதல்வர் புதியவர் என்றாலும் சைவ சித்தாந்த கோட்பாடுகளை ஏற்று நடப்பவர் என்பதனால், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றி, நிதானமான செயல்பட்டு ஏனையவர்களுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, மக்களுக்கு பலனும் மண்ணுக்கு அபிவிருத்தியும் கிடைக்கும். முரண்பாடுகள் நாசத்தை தான் விளைவிக்கும்
நன்றி தேனி
0 comments :
Post a Comment