ஏஎஸ்பி மற்றும் பொலிஸ் பிரதம பரிசோதகருக்கு விளக்க மறியல்.
கொலைக்குற்றச்சாட்டில் ஏஎஸ்பி க்கும் பணப்பை திருட்டுகுற்றச்சாட்டில் பிரதம பொலிஸ் பரிசோதகருக்கும் விளக்க மறியல் எம்பிலிப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவின் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.தர்மரத்ண விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அத்தியட்சகர் நேற்று பிற்பகல் குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டிருந்தாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட சந்தேநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.
இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நீதிவேண்டி பல்வேறு அமைப்புக்கள் இணைந்து பெரும் மக்கள் போராட்டத்தை நாடாத்தியே இக்கைதினை சாத்தியமாக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மட்டக்களப்பு வங்கி ஒன்றில் நபர் ஒருவரின் பணப் பையை திருடிய, காங்கேசன்துறை பகுதியில் கடமையில் உள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, எரகம பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் ரபாய்தீன் என்பவர், தனியார் வங்கி ஒன்றில் வைத்து தனது பணப்பை காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவுக்கமைய, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கெமரா காட்சிகளை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு மாவட்ட நீதவான் கணேஷ ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment