Thursday, February 4, 2016

தேசியக் கொடியை ஏற்றாவிடில் புலிக் கொடியையா ஏற்றுவது? ரணில் காட்டம்

சுந்திர தினமான இன்று தேசியக் கொடியை ஏற்ற வேண்டாமென ஐக்கிய எதிர்கட்சி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கம்பன்பில மற்றும் விமல் உட்பட்ட குழுவினர் வேண்டுதல் விடுத்திருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிக் கொடியை ஏற்றாவிட்டால் புலிக்கொடியையா ஏற்றுவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

நேற்று சரத் பொன்சேகாவுடன் ஒப்பந்தை செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியளாளர்கள் மத்தியில் பேசிய அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். அங்கு அவர் தொடர்hந்து பேசுகையில்

பிரபாகரனுக்குப் பிறகு முதற்தடவையாக சிரேஷ்ட சிங்கள வீரர்கள் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டாமெனக் கூறியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிக்கின்றது என்றார்.

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடிக்குப் பதிலாக புலிக்கொடியை ஏற்றி மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டுமென்பதா? இவர்களுடைய எதிர்பார்ப்பு என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

வட மாகாண சபையில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொடியை மறுதலிக்கும் புதிய வர்க்கமொன்று நாட்டில் உருவாகி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தேசியக் கொடியை ஏற்க மறுக்கும் ஒருவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது பாராளுமன்ற யாப்புக்கு முரணானது எனக் கூறிய பிரதமர் இதுகுறித்த இறுதித் தீர்மானத்தை நாட்டு மக்களே எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனநாயகக் கட்சிக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மாலை அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இதன்போது பிரதமர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.

பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது,

தமிழ் கூட்டமைப்பினர் தனி இராஜியம் வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றி 40 வருடங்களுக்குப் பின்னர் இம்முறை தான் நாம் முதற்தடவையாக ஒரு தாய் மக்களாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம். இது தேசிய அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

தற்போது வட்டுக்கோட்டை தீர்மானம் இல்லை. தமிழ் கட்சிகள் அனைத்தும் எம்முடனேயே உள்ளன. அதேபோன்று தான் முஸ்லிம் கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகளும் ஆகும். நாம் அனைவரும் ஜனநாயகத்தை நோக்கியே செயல்படுகின்றோம்.

தேசிய தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டாமென்றும் தேசிய தினத்தை கொண்டாட வேண்டாமென்றும் கூறும் எமது சிரேஷ்ட வீரர்களை நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு மக்களிடையே கருத்துக்களை பரப்பி வரும் ஒரு சிலர் இருக்கின்றனர்.

சுதந்திர தினத்தன்று வழக்கம் போல் எமது தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது. விரும்பினால் அதில் கலந்து கொள்ளலாம். இல்லையேல் கலந்து கொள்ளாமல் இருக்கலாம்.

சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவதில் உள்ள தவறு என்ன? இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் டி.எஸ். சேனாநாயக்கவினால் ஏற்றப்பட்ட இலங்கையின் தேசியக் கொடியை எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, சேர் ஜோன்கொத்தலாவல ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் யாவரும் எமது தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டனர்.

இப்போது இந்த கொடியை ஏற்ற வேண்டாம் என்கிறார்கள். பிரபாகரன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டாமெனக் கூறியதற்குப் பின்னர் முதற்தடவையாக யார் இதனை வேண்டாம் என்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது.

தேசியக் கொடிக்கு பிரபாகரன் மறுப்பு தெரிவித்திருந்தார். அக்காலத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எல்.ரீ.ரீ.ஈயினர் இடம் வழங்கவில்லை. நாம் அதற்காக போராடினோம். ஆனால் அன்று பிரபாகரன் கூறியதையே இன்று சிங்களவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீரர்களும் கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

அப்படியென்றால் நாம் என்ன புலிக்கொடியையா ஏற்றுவது? தேசியக்கொடியை ஏற்ற வேண்டாம் என்றால் அன்றைய தினம் எந்த கொடியை ஏற்றுவது என்று தான் நாமும் கேட்கிறோம்.

சுதந்திர தினத்தை கொண்டாடாமல் மாவீரர் தினத்தையா நாம் கொண்டாடுவது? மாவீரர் தினத்தை சுதந்திர தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றா அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

தேசியக் கொடியை ஏற்க மறுப்பதாக இருந்தால், எவ்வாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும்? பாராளுமன்ற யாப்பில் இந்த நாட்டை பாதுகாப்பதாக நாம் உறுதி மொழி வழங்கியுள்ளோம். அதன் பின்னரும் தேசியக் கொடியை எவ்வாறு மறுக்க முடியும்.

வட மாகாண சபையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் அனைவருக்கும் சொந்தமானதே இந்த தேசியக் கொடியாகும். தேசியக்கொடியை மறுதலிக்கும் புதிய வர்க்கமே இங்கு உருவாகி வருகின்றது.

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றி இன்றைய நாளை கொண்டாட வேண்டாமென்றால் எமக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நாட்டு மக்களே இதற்கான சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் இலங்கையர்கள். எமது இந்த பயணமும் ஒன்றானது. முதற்தடவையாக எங்களைப் பற்றி துளியளவும் நினைக்காது உங்களுக்காக நாம் அரசியல் நடத்துகின்றோம். இது உங்களுக்கான அரசியல் ஆகும்.

அரசியல் மூலம் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்? அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் இந்த 05 வருடங்களுக்குள் மக்கள் எம்மிடமிருந்தும் பாராளுமன்றத்திடமிருந்தும் எதனை எதிர்பார்க்கிறார்கள்? அதற்கேற்றவாறு எமது அரசியல் பாதையை நாம் மாற்ற வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை உருவாக்கியதன் பிரதான நோக்கம் அனைவரும் ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய நாம் புதிய அரசியல் திட்ட வரைபு ஒன்றை தயாரிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் பொதுத் தேர்தலில் எம்மால் அதிகூடிய பலத்துடன் வெற்றிபெற முடியும். விரும்பினால் தனியாகவோ அல்லது இப்போது போன்று கூட்டு சேர்ந்தோ ஆட்சி நடத்த முடியும்.

ஐக்கிய தேசிய முன்னணியும் ஜனநாயக கட்சியும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. இது குறித்து நாம் கடந்த டிசம்பர் மாதம் கலந்துரையாடினோம். ஜனவரி மாதமே இதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதாக இருந்த போதும் சற்று காலதாமதம் ஆகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு புரட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்தும் பயணிப்பதே எமது இலக்காகும்.

ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்தும் நிலைபெறச் செய்வதே ஐக்கிய தேசியக் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாடாகும்.

ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான புரட்சியில் முதன் முதலில் தடம் பதித்தவரே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆவார். இதன் காரணமாகவே இவருக்கு சிறைவாசம் அனுபவிக்கவும் நேர்ந்தது. ஊழல் மிக்க ஆட்சிக்கு எதிரான இவரது கொள்கை காரணமாகவே இவரையும் எமது முன்னணியில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com