இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டம் பின்லேடன் மூளையில் உதித்தது எப்படி?- புதிய தகவல்களை வெளியிட்டது அல்-காய்தா
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டத்தை ஒசாமா பின்லேடன் தீட்டியதற்கு எகிப்தைத் சேர்ந்த விமானி தூண்டுகோலாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்ட 110 மாடி இரட்டை கோபுரங்களைக் கொண்ட உலக வர்த்தக மையத்தை அல்-காய்தா தீவிரவாதிகள் 2001 செப்டம்பர் 11-ம் தேதி விமானங் களை மோதி தகர்த்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர். 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.
அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சதித் திட்டத்தை அவர் எவ்வாறு உருவாக்கினார் என்பது குறித்து அல்-காய்தாவின் அதிகாரப்பூர்வ இதழான ‘அல்-மஸ்ரா’வில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 1999 அக்டோபர் 11-ம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதில் 100 அமெரிக்கர்கள் உட்பட 217 பேர் பலியாகினர்.
இது விபத்து என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் எகிப்தைச் சேர்ந்த துணை விமானி அல்-பட்டோடி திட்டமிட்டு விமானத்தை கடலில் மூழ்கடித்திருப்பது தெரியவந்தது.
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம்தான் இரட்டை கோபுர சதித் திட்டத்தை தீட்ட பின்லேடனுக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது.
விமான தாக்குதல் குறித்து அல்-காய்தா மூத்த தலைவர்களிடம் அவர் பேசியபோது, விமானத்தை ஏன் கடலில் மூழ்கடிக்க வேண்டும், அதற்குப் பதிலாக ஏதாவது கட்டிடத்தின் மீது மோதினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில்தான் இரட்டை கோபுர தாக்குதல் சதித்திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அதேநேரம் சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த அமைப்பில் ஆசியா, ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
எனவே அல்-காய்தா இயக்கத்துக்கு இளைஞர்களை இழுக்க ஒசாமா பின்லேடன் பெயரை பயன் படுத்த அந்த அமைப்பு திட்டமிட் டுள்ளது. அதற்காக இதுபோன்ற பரபரப்பு தகவல்களை அல்-காய்தா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment