மருத்துவரின் உதவியுடன் தற்கொலை! மனதை பதறவைக்கும் இறுதிவார்த்தைகள். வீடியோ
சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொண்ட தொழிலதிபர் ஒருவரின் இறுதி நிமிடங்கள் நேரடியாக படமாக்கப்பட்டு வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சர்ரே நகரில் சைமன் பின்னர்(57) என்ற தொழிலதிபர் டெப்பி(51) என்ற பெயருடைய தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
திருமணமாகி 15 வருடங்கள் மகிழ்ச்சியாக சென்றபோது, அவரது வாழ்க்கையையே திசை திருப்பும் வகையில் மோட்டார் நியூரான்(motor neurone) என்ற கொடிய நோய் அவரை தாக்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டல் பழுதாவதுடன், தினமும் மரண வேதனையை அனுபவிக்க நேரிடும்.
கடந்த சில மாதங்களாக இந்த நோயின் உச்சக்கட்ட வேதனைக்கு சென்ற சைமன் தனது வாழ்க்கையை தானே முடிவு செய்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.
இந்த முடிவை தொடர்ந்து, ‘இந்த மரண வேதனையை எதிர்க்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கையை நானே முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்த அவரது டெப்பி, ‘உங்களை தற்கொலை செய்துக்கொள்ள அனுமதிக்க மாட்டேன். நீங்கள் எங்களோட கடைசி நிமிடம் வரை வாழ வேண்டும்’ என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
ஆனால், மரண வலியை தாங்க முடியாத சைமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்துள்ளார்.
கணவனின் நிலையை கண்டு வேதனை அடைந்த டெப்பி, ‘நீங்களே தற்கொலை செய்துக்கொள்ள என் மனம் ஏற்க மறுக்கிறது. சுவிட்சர்லாந்து சென்று, மருத்துவர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்’ என அனுமதி அளித்துள்ளார்.
சைமனின் இந்த முடிவு வெளியானதை தொடர்ந்து, அவரது இறுதி நாட்களை அவரை வைத்து நேரடியாக ஒரு ஆவணப்படத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் தயாரித்தது.
மனைவி, மகள்களுடன் இருந்த கடைசி நாட்கள் முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் அவருக்கு மரணம் ஏற்பட்டு அவரது சடலத்தை சவப்பெட்டியில் வைப்பது வரை நேரடியாக படம் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளது.
இதனை அறிந்து சுவிஸின் பேசில் மாகாணத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் சைமன், அவரது மனைவி டெப்பி மற்றும் 4 நண்பர்கள் தங்கியிருந்தனர்.
தற்கொலை செய்துக்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக அனைவரும் அங்கு மகிழ்ச்சியாக உணவருந்துகின்றனர்.
பின்னர் மறுநாள்(கடந்தாண்டு அக்டோபர் 19ம் திகதி) காலை 9.30 மணியளவில் சைமனை மருத்துவ கட்டிலில் படுக்க வைக்கப்படுகிறார்.
தனது மனைவியின் கைகளை பற்றிய சைமன் ‘டெப்பி, உன்னுடன் வாழ்ந்த இந்த 15 ஆண்டுகளை நான் மறக்கவே மாட்டேன். எனக்கு அமைந்துள்ள அன்பான மனைவி, மகள்கள் போன்று வேறு யாருக்கும் அமைய மாட்டார்கள்.
நான் உன்னை காதலிப்பதை விட என்னை நீ அதிகமாக காதலிப்பது எனக்கு நன்றாக தெரியும்.
திடீரென ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து உன்னிடம் பேசாமலேயே நான் உயிரிழக்கவில்லை. இப்போது, இந்த தருணத்தில் உன் கைகளை பற்றியவாறு நான் இந்த உலகத்தை விட்டு பிரிகிறேன். நமது மகள்களை நன்றாக பார்த்துக்கொள். குட் பை’ என கூறுகிறார்.
முகம் முழுவதும் புன்னகை தழும்ப சைமன் இந்த வார்த்தைகளை பேசிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் அவருக்கு மரணத்தை தரும் ஊசி செலுத்தப்படுகிறது.
சரியாக 9.38 மணி நேரத்தில் சைமனின் உயிர் பிரிகிறது. பின்னர், அந்த அறைக்கு ஒரு சவப்பெட்டி கொண்டுவரப்பட, அதில் சைமனின் உடல் வைக்கப்பட்டு மூடப்படுவதுடன் இந்த ஆவணப்படம் நிறைவு பெறுகிறது.
நேற்று முன் தினம் பி.பி.சி தொலைக்காட்சிக்கு சொந்தமான சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தை இதுவரை சுமார் 11 லட்சம் பேர் பார்த்து உருக்கமான பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், ’ஒரு மனிதனின் கடைசி நிமிடங்களை நேரடியாக படம் பிடித்து வெளியிடுவது பயங்கரமானது, வேதனையாது’ என சில தொண்டு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கு சைமனின் மனைவி டெப்பி பதிலளிக்கும்போது, ‘எனது கணவரின் இறுதி நிமிடங்களை படமாக்கியது சிலருக்கு வேதனையை அளித்திருக்கலாம்.
ஆனால், இந்த காட்சிகளை பார்க்கும் அத்தனை மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு இதுபோன்ற கொடிய நோய்களை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆழமான விவாதங்களுக்கு ஆரம்பமாக அமையும் என்பதால் தான் இது ஆவணப்படமாக்கப்பட்டது’ என பதிலளித்துள்ளார்.
0 comments :
Post a Comment