Tuesday, February 2, 2016

கிழிகின்றது மஹிந்த-பிரபாகரன் முகத்திரை! வருகின்றார் எமில் காந்தன்.

2005 ஆம் ஆண்டு தேர்தலில்போது தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்ததன் ஊடாகவே முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தில் அமர்ந்தார் என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்காக மஹிந்த புலிகள் அமைப்பிற்கு பணம் வழங்கினார் என்றும் அக்கொடுக்கல் வாங்கல்களில் பிரதான நபராக எமில் காந்தன் எனப்படுகின்ற புலிகளின் முகவர் ஒருவர் செயற்பட்டு வந்தார் என்றும் பேசப்பட்டது யாவரும் அறிந்ததே.

இப்பணம் அமைச்சரவை அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டிருந்தாக ஆதாரங்களுடன் பேசப்பட்டபோதும் அவற்றை தெளிவாக நிரூபிப்பதற்கு குற்றஞ்சாட்டியவர்கள் திணறிக்கொண்டே இருந்தனர். இவ்விடயத்தை சந்தேகத்திற்கு அப்பால் மக்களுக்கு நிரூபிப்பதாயின் பணத்தினை புலிகள் சார்பாக பெற்றுக்கொண்டவர் எனக்கூறப்படுகின்ற எமில் காந்தனில் ஒப்புதல் வாக்குமூலம் இங்கு அவசியமாக நிற்கின்றது.

புலிகளுக்கு எதிராக போராடினார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் வெற்றியின் நாயகர்களாக நிற்கின்ற மஹிந்த குடும்பத்தினரின் அந்த அந்தஸ்தை பறிப்பதற்கு எமில் காந்தனின் ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்த மங்கள சமரவீர தொடர்சியாக மேற்கொண்ட முயற்சி பலசுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெற்றியளித்திருக்கின்றது. இதன்பொருட்டு எதிர்வரும் சில வாரங்களில் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார் எமில் காந்தன்.

இதன்பொருட்டு எமில்காந்தனின் வருகைக்கு தடையாக அவர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ்பெறப்பட்டுள்ளது. எமில்காந்தனின் சட்டத்தரணி கொழும்பு நீதிமன்றில் விடுத்து வேண்டுகோளை அடுத்தே குறித்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அந்தனி எமில் காந்தனுக்கு எதிராக சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்ப்படிருந்தபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை.

இதனால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி நீதிமன்றம் இண்டர்போல் ஊடாக உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இந்தப் பின்னணியில், சந்தேகநபரான எமில்காந்தன் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஆனால் இண்டர்போலின் பிடியாணை காரணமாக, எமில் காந்தன் இலங்கை வந்து நீதிமன்றத்தில் சரண் அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவரைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வாபஸ் பெறுமாறும் அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி, கைதுசெய்யுமாறு இண்டர்போலுக்கு பிறப்பித்திருந்த ஆணையை வாபஸ் பெற்றுள்ள நீதிமன்றம், சந்தேகநபரான எமில் காந்தனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எமில் காந்தன் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதித்துறையில் ஒரு முக்கிய தலைவராக இருந்துள்ளதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com