தமிழீழத்தை கைவிடுகின்றாராம் சிறிதரன்!
தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
‘தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும். தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment