பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்! - ராம் -
2013ல் மலர்ந்தது தமிழர் அரசு என்ற பத்திரிகை தலையங்கத்தை பார்த்து npc meeting-1இது சற்று அதிகப்பிரசிங்கத்தனம் என நினைத்தாலும், மாற்றம் வரும் என நம்பியவர்களில் நானும் ஒருவன். காரணம் எனது சொந்த விஜயமாக நாட்டில் அதுவும் வடக்கில் நின்றபோது போது தான், வட மாகாணசபபை தேர்தல் நடந்தது. கூட்டமைப்பில் இணைத்துகொள்ளப்பட்ட புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வவுனியா நகரசபை தலைவர் லிங்கநாதன் போன்றவர்கள், வேட்பாளராக போட்டியிட களம் இறங்கிய அந்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை த.தே.கூ பெறும் என அப்போதே தெரிந்திருந்தது. பண்ணாகத்தில் கோவில் முன்றலில் நடந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமித்து மேடையில் இருந்ததை பார்த்தபோது சாதிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் துளிர்விட்டது. ஆனால் அண்மைய நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் நடத்திய கூட்டுப்பொறுப்பு என்ற போர்வையில் விட்ட தவறுகள் இன்று வெட்ட வெளிச்சமாகின்றன.
தேர்தல் நாட்களில் நண்பரின் ஊரான கற்சிலை மடுவில் நின்றபோது, ஒட்டுசுட்டானை சேர்ந்த எவரும் வேட்பாளராக நிறுத்தப் படவில்லை என குறைப்பட்ட முக்கிய புள்ளி, இந்த தேர்தலை நாங்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கருத்துப்பட பேசினார். பெரும்பான்மையானோர் அந்த முடிவில் தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் அவ்வாறு நீங்கள் செய்வது மகிந்த அரசுக்கு அல்லது அவரின் ஆதரவு கட்சிக்கு தான் ஆசனங்களை அதிகரிக்கும் என முன்னாள் போராளி ஒருவரின் தந்தை கூறி, எமக்குள் இருக்கும் மனதாக்கத்தை விடுத்து தேர்தலில் வாக்களிப்போம் என்ற வேண்டுகோள் தான், இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உள்வீட்டு பிரச்சனை கூத்தாடிக்கு கொண்டாட்டமாக போகக்கூடாது என்பதில், பண்டாரவன்னியன் ஆண்டமக்கள் போலவே சங்கிலியன் ஆண்ட மக்களும் அன்று உறுதியாக இருந்ததால் தான், சம்மந்தர் கேட்ட முப்பது ஆசனங்களும் கூட்டமைப்புக்கு கிடைத்தது. சாதிக்கும் என நம்பிய அந்த சபையில் நடந்ததை, சக்தி டிவியில் பார்த்தபோது அது, பொது சந்தை போல் இருந்தது.
கௌரவ சபையை கண்ணிய குறைவாக எழுதிவிட்டேன் என, எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு சட்டசபையில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த சபாநாயகர் பி எச் பாண்டியன் அவர்கள், ஆனந்தவிகடனில் வந்த சட்டசபை உறுப்பினர்கள் பற்றிய கருத்துபடம் காரணமாக, அதன் ஆசிரியர் எஸ் பால்சுப்ரமணித்தை சிறையில் அடைத்தது போல், என்னையும் செய்ய முடியாது. காரணம் முதல்வர் எம் ஜி ஆர் அரசுக்கு அபகீர்த்தி என்பதால், முதல்வரை குளிரவைக்க சபாநாயகர் எடுத்த முடிவு அது. ஆனால் இங்கு மோதலே முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தவிசாளர் சிவஞானத்துக்கும் தான். தங்கள் பதவி கௌரவத்தை விட்டு சபையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இவர்களை எப்படி கௌரவ முதல்வர் என்றும் கௌரவ தவிசாளர் என்றும் எழுதுவது. அதனால் முதல்வர், தவிசாளர் என்றே தொடர்ந்தும் விழிப்பேன். வாக்களித்த மக்கள் போல் மௌனித்திருக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இல்லை என்பதும் உண்மை.
தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஒரு உறுப்பினர் பேசினால் அதை குறுக்கிடாது, முழுமையாக கேட்டபின் தன் பக்க நியாயங்களை பதிலாக கூறுவது அமைச்சருக்கு அழகு. அதேவேளை அமைச்சர் பேச எழுந்தால் அவரிடம், உறுப்பினருக்கு ஒதுக்கபட்ட நேரத்தை குறிப்பிட்டு, அமைச்சரிடம் உங்களுக்கு பதில் அளிக்க நேரம் தரப்படும், என கூறவேண்டியது தவிசாளர் கடமை. இருவரும் ஒரே நேரத்தில் பேச தவிசாளரும் குறுக்கே தன்னிலை விளக்கம் கூற முற்பட்டது சபை ஒழுங்கல்ல. ஆனாலும் அதுதான் நடந்தது. காரணம் அமைச்சர் தவிசாளரை நேரடியாக குற்றம்சாட்டி, உங்கள் முதுகு சொறியத்தான் இவ்வாறு உறுப்பினர் பேசுகிறார் என கூற, யாருக்கும் முதுகு சொறியும் அவசியம் எனக்கு இல்லை என சொறி, சிரங்கு, படை, மருந்து விற்கும் நடைபாதை கடை போலானது, வட மாகாணசபை. பொது முக்கியம் வாய்ந்த பிரேரணை என்ற அடிப்படையில், அமைச்சர் சம்மந்தமாக அதுவரை தாம் அடக்கி வாசித்த விடயத்தை ஊறுப்பினர்கள் அரங்கேற்றினர் என்பது தான் உண்மை.
பாதீனியத்தில் தொடங்கி மரநடுகை, குளங்கள் திருத்தபடாமை, இரணைமடு நீர், கடல்நீர் சுத்திகரிப்பு, யாழ் நீர் ஏரிகளின் அணைக்கட்டு, கூட்டுறவுதுறை ஊழல், சுண்ணாக நிலத்தடி நீர் நிபுணர் குழு உறுப்பினருக்கு பதவி லஞ்சம் என குற்ற பட்டியல் நீண்டு சென்றது. இதில் வருத்தம் தரும் நிகழ்வு தவிசாளர் தன்பங்கிற்கு சீமெந்து ஊழல் பற்றி குறிப்பட, சினமுற்ற முதல்வர் அதை ஆராய ஒரு குழு நியமிக்கபட்டுள்ளது என கூற, அந்த குழுவை நியமித்தது நானே என தவிசாளர் பதில் கூற, அத்தோடு உங்கள் கடமை முடிந்தது அதனால் அந்த குழுவை அடிமைப்படுத்த முயலாதீர்கள் என முதல்வர் ஆவேசமாக கூறியது, அவர்கள் இருவரும் தங்கள் பதவி கௌரவத்தை சற்றும் எண்ணிப்பார்க்காத செயல் எனவேபட்டது. நடந்திருப்பது ஊழலா இல்லையா என்ற விடயத்துக்கு அப்பால், மக்களால் வழங்கப்பட்ட கௌரவ பதவிகளில் இருந்து கொண்டு சபையின் கௌரவத்துக்கு புறம்பாக, பொறுமை இழந்த இவர்களா மக்களின் பிரச்சனைகளை பொறுமையுடன் தீர்ப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் பொறுப்புடன் கூறிய விடயம் பாராட்டப்பட்ட வேண்டியது. மக்கள் பிரச்சனை சம்மந்தமாக பேச முற்பட்டால் சுருக்கமாக பேசுங்கள், நேரம் போதாது என தடுக்கும் தவிசாளர், ஆளும்தரப்பு கூடும் கூட்டத்தில் பேசவேண்டிய விடயத்தை இங்கு பேசி, ஏன் சபை நடவடிக்கையின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என குறிபிட்டு, 1984ல் வெளிவந்த “பாவம் மக்கள்“ எனும் கவிதை தொகுப்பு நூல் பற்றி குறிப்பிட்டு, அதனை தேடி எடுத்து மாகாண சபை நூலகத்தில் வைக்கவேண்டும் என கூறியது, ஆளும்கட்சிஉறுப்பினர்களின் மூக்கில் இரத்தம் வரப் பண்ணியிருக்கும். அவர் கூறிய இன்னொரு விடயம் சற்று நெருடலானது. ஆயுத போராட்ட காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன, அவை தமக்குள்ள மோதின. இவர்களிடம் தமிழ் ஈழத்தை கொடுத்து பார்க்கவேண்டும் அப்போது தெரியும் என்ன நடக்கும் என்று கூறுவர், அந்த நிலைமையை தான் இந்த சபையில் காண்கிறேன் என்ற அவரின் மனநிலையில் தான், வட மாகாண சபையை உருவாக்கிய மக்களும் இருப்பார்.
பொறுப்புடன் செயல்பட வேண்டிய தவிசாளரை பார்த்து, கடந்த இரண்டு வருடங்களில் இந்த சபையை அரை நாள் தான் பிரதி தவிசாளர் நடத்தினார். அன்று எவ்வளவு கண்ணியத்துடன் இந்த சபை நடவடிக்கை நடைபெற்றது என கூறியதன் மூலம், தவிசாளரின் செயல்பாடுகள் கண்ணியமற்றது என அமைச்சர் குத்திக்காட்டுகிறார். இந்த சபையையும் உறுப்பினர்களையும் முட்டாள்களாக்கிவிட்டார் அமைச்சர் என குற்றம் சாட்டுகிறார் உறுப்பினர். சீமெந்து ஊழல் விசாரணைகள் நடைபெறும்போதே, குற்றம் நடந்தது என கூறுகிறார் தவிசாளர். அதுபற்றி இப்போது பேசாதீர்கள் என்கிறார் முதல்வர். இருவரும் நிதானம் இழந்தவர்களாக தங்கள் உடல் மொழி மற்றும் குரல்களால் மோதலை வெளிப்படுத்துகின்றனர். தொடர்ந்து பேசிய உறுப்பினர்களை குறுக்கீடு செய்த அமைச்சர்சர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தன்வாதத்தை முன்வைக்கிறார். தொலைக்காட்சி தொடர்போல் சபை நடவடிக்கை இடம்பெறுவதாக ஆளும் கட்சி உறுப்பினரே ஆதங்கப்படுகிறார்.
இத்தனையும் பார்க்க முடிந்தால் அதுவும் அவர்கள் விளங்கக்கூடிய மொழியில் ஒளிபரப்பானால், அது போதும் உதய கம்மன்விலவுக்கும் விமல் வீரவன்சவுக்கும், எம்மை பரிகாசம் செய்து எள்ளி நகையாட. கூடவே சிவாஜிலிங்கம் குறிப்பிட்டதுபோல எதிர்வரும் செப்டம்பரில் ஏனைய மாகாணசபைகள் கலைக்கப்படும் போது, குடுமிபிடி சண்டை நடக்கும் வட மாகாணசபையையும் கலைக்கவேண்டும் என உதயவும், வீரவன்சவும் தெற்கில் கொடிபிடித்து, கோசமிட்டு ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தாலும், அது சாத்தியம் இல்லை என்பதால் தமது பங்காளி வாசுதேவ நாணய க்காரவை சீண்டி, இது உங்கள் சம்மந்திக்கு பொருத்தமில்லாத வேலை எனவே அவரே ஆளுநரிடம் வட மாகாணசபைசபை கலைக்கசொல்லி சிபார்சு செய்துவிட்டு, கொழும்பு திரும்பசொல்லுங்கள், நாம் கூடிய விரைவில் அமைக்க முற்படும் அரசில், அவரை ஆளுநர் ஆக்குவோம் எனவும் கூறலாம். கோத்தாவும் தன் பங்கிற்கு இப்படி தமக்குள்ள மோதுவார்கள் என தெரிந்திருந்தால் தேவானந்தா கேட்டபடி மாகாணசபை தேர்தல் காலத்தில், ஆயுதங்களை அவரிடமே விட்டுவைத்திருப்பேன் என ஆதங்கப்படலாம். கமரூன், சமந்தா பவர், சுஸ்மா, ஹுசைன் மட்டுமல்ல ஒபாமா வந்தாலும் எம் உள்வீட்டு சண்டை ஓயவே ஓயாது.
0 comments :
Post a Comment