டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை.
கொலை வழக்கை காணொளிக்காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் விசாரணை நடத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா 1986-ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்தார். அப்போது, தீபாவளிக்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக டக்ளஸ் தேவனானந்தா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதியப்பட்டு, சென்னை 4-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சாந்தி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரச வழக்கறிஞர் எம்.பிரபாவதி கூறியதாவது:
பொலிஸார் போராடி, சாட்சிகளைத் தேடி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர். முதல் சாட்சியான குருமூர்த்தி, சுட்டவரை அடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிப்பதால், இலங்கையில் உள்ள அவரை காணொளிக்காட்சி மூலம் விசாரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டு வர, வாரத்தில் 3 நாள்கள் விசாரிக்க வேண்டும் என்றார்.
அப்போது, டக்ளஸ் தேவானந்தா சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.ராஜன், ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க டக்ளஸ் தேவானந்தா தயாராக உள்ளார். இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கிறோம். அங்கு எந்த வகையான வசதிகள் உள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களை கடிதம் மூலம் நீதிமன்றம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.
மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பெப்ரவரி 18-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
(தினமணி)
0 comments :
Post a Comment